ஞாயிறு, மே 31

அண்டமெல்லாம் நந்தவனமோ




அண்டமெல்லாம் அமைதி
ஆனந்தம் ஐம்பூதங்களுக்கு  
ஆறறிவு அடைந்து கிடக்க
அவை வாழத் தொடங்கின 

வரிகுதிரைகள் மான்கள் 
புனுகு பூனை - இன்னபிற 
வனவிலங்குகள் 
நகர்வலம் வந்தன 

இரவு பகலென்று
இடித்து நகர்ந்து
இயங்கிய வாகனங்கள்
எங்கேச் சென்றன

நந்தவனம் ஆனதோ
தாய் திருநாடு - அல்ல
புதிய இந்தியா
பிறந்து விட்டதோ? 

நைட்ரஜன் டையாக்சைட் 
வாகனங்களின் நச்சுவாயு
மரணத்தை முன்கூட்டியும்
ஆஸ்மாவையும் அளிக்குமாம்

தொழிற்சாலைகள் மூடியிருக்க
வாகனங்கள் ஓடாதிருக்க
வானம் வெளுத்திருப்பதாய்
செயற்கைகோள் செய்தி

செயற்கைக் கோள்கள் 
விண்வெளி மையங்கள் 
வானுர்திகள், ஏவுகணைகள் 
ஓசோனைத் துளையிட்டன 

உலகை கைக்குள்ளடக்க
விண்ணில் செலுத்தியக் கலங்களின் 
குப்பைகள் 7000 டன்
என்று விழுமென அறிவாயா

மாசறுப் பொன்னேயென
மாசாத்துவன் மகன்
மனம் மயங்கியே
மனையாளை அழைக்கலாம்

மாசறுக் காற்றேயென
மனிதா அழைப்பாயோ
காசுக் கொடுத்தாலும்
கலப்பிடமின்றி கிடைக்குமோ
 
இத்தனை நாட்கள்
புகையால் மறைத்த
இமயமலை சிகரங்கள்
அழகாய்த் தெரிகின்றன

ஒலியும் ஒளியும்
விரும்பியிருக்கலாம்
உனக்கது மாசானால்
உயிர் சுருங்கலாம்

ஒரியக் கடற்கரையில்
ஆமையிட்ட முட்டைகள்
குஞ்சுகளாய்
கடல் திரும்புகின்றன

மனிதர்களில்லா
கடலோரத்தில் 
கடற் பறவைகள் கூட்டமாய்
மானோத் துள்ளித் திரிகிறது   

மச்ச அவதாரத்தால்
56" மார்பழகனால்
முடியாததை
இயற்கை செய்கிறது

கங்கையில் யமுனையில்
கார்ப்ரேட் கழிவுகள்
கழுவியப் பாவங்கள்
காணாது போயின

மனிதர்கள் இல்லையெனில்
பாவங்களில்லை
பல்லாயிரம் கோடி
பகற்கொள்ளை திட்டங்களும்

வெனிஸ் கால்வாய்களில்
டால்பின்கள் உலவுகின்றன
தண்ணீர் தெளிந்திருக்கிறது
கொண்டோலா படகுகள் ஓய்வெடுப்பதால்

பயணங்கள் இல்லையெனில்
பாரினில் தீங்கில்லையோ
பேரண்டம் அமைதியாய்
மானுடமும் அமைதியாய்

உல்லாசக் கப்பல்கள்
ஊர்சுற்றும் தோணிகள்
சரக்கின் வகைக்கேற்க
நாவாய்கள் முடங்கிட

ஆழிச் சூழ் உலகின்
அளப்பரிய உயிரிகள்
பல்கி பெருகி
பவனி வருகிறதாம்

தெளிந்த நீரோட்டமும்
திரியும் மீன்கூட்டமும்
தேவையை கூறுதோ
தேடலை நிறுத்தென்று ஓதுதோ

கட்டுமரமோ
பாய்மரக் கலமோ
காற்றின் வழி பயணிக்க
கரை சேர்ந்த மனிதன்

எதிர்த்துச் செல்லென்ற
எண்ணம் பெற்றதனால்
எண்ணற்ற நஞ்சைக் கொட்டியதால்
எதுமற்று முடங்கினான் 

மனித குறுக்கீடுகள்
முன்னேற்றம் என்று
மா-நிலத்தைக் காயப்படுத்த
கொரோனாக் காப்பாற்றுகிறது

பாவ மன்னிப்புகள் வழங்கிய
பரமேஸ்வரனும்
பரமபிதா மற்றும்
பலரும் கதவடைத்துக் கொள்ள

புவிப் புன்னகையோடு
புரையோடிய மேனியை
புணரமைத்துக் கொள்கிறது
பராபரனும் பக்தனும் இல்லாததால்




வியாழன், மே 28

இரண்டாவது தூண்





நீதி நியாயம்
நாட்டில் இருப்பதாய்
நம்பிக்கை

நம்பாதே என்று
நியாயவான்கள்
நிரூபித்தும் விட்டார்கள்

நான்கு தூண்கள்
ஓரணியில் 
நாமெல்லாம் உதிரிகளாய்

முதல் தூணுக்கு
முட்டுக் கொடுப்பதே- மற்ற
மூன்றின் வேலை

மூன்று நாட்கள் அவகாசமிருந்திருந்தால்
மூட்டை முடிச்சுகளை தூக்க
அரசியல் கூலிகள் தேவைபட்டிருக்காது

மூன்று மணி நேரத்தில்
முழு அடைப்பு – அது
அதிகாரத்தின் பல்லிளிப்பு

ஊரடங்கில்
ஊர் போகும் வழியென்று
ரயில் போகும் பாதையில்

வாராது என நினைத்து
வந்தக் களைப்பில்
தலை வைத்தான்

கல்லக்குடிக் கொண்டோனென
கௌரவப் பட்டத்திற்கா
தன்குடியோடு வாழ 

சாகதான் வேண்டுமென 
சட்டம் காப்பவன்
சதிராடினால்

இந்த தேசத்தை விட்டு
இந்த மயானத்தை விட்டு
எங்கு செல்ல

பாதம் புண்ணாகி
பசியால் நெருப்பாகி
பாதியிலே போனவளை

ஏழுப்ப சுவிசேஷர்களில்லை
போர்வையை ஏழுப்புகிறது
புரியாத பிள்ளை

சோற்றுக்கு முறையிட
முகாம் இருக்கிறதென
மூடிவிடுவது நீதி

கால்நடைகளாய் மனிதர்கள் 
நிர்கதியாய் விட்ட
ஜனநாயக நிதர்சனங்கள்


நீதி வேண்டுமானால்
கண் திறந்து தராசை பிடி
கையில் வாளோடு



புதன், மே 27

நாதமும் கடவுளும்




இசை 
மக்களுக்கா
கடவுளுக்கா

ஓசையில் ஆடுபவன்
கூத்தாண்டவனா
குதுகலித்து ஆடுபவனா

ஆடல்வல்லான்
ஆடிப்பார்த்ததுண்டா- தோற்ற
பார்வதியை தவிர

உருமியில் ஆடுவது
உடல் மட்டுமா
உள்ளமுமா

வித்தைகள்
விற்பனைக்கா
வயிறு வளர்க்கவா

கொரானவுக்கு அஞ்சிய
கடவுளுக்கு இசைக்க
கஞ்சிக் கிடைக்குமா

திறன் இருக்க
தெருவில் பாட
இரைப்பை நிறையலாம்

ஆக
கடவுள் கொடுக்காததை
கற்ற வித்தை தரும்


செவ்வாய், மே 26

சைக்கிள்





சொந்தங்களைப் பார்க்க
சொகுசு ஊர்தியா
சோதனையா – அல்ல
சாதனைப் பயணங்களா

புற்றுநோய் மனைவியை
பற்றுக் கொண்டதால்
பல மைல் கடந்து
பார்த்தான் மருத்துவம்

ஊனமானத் தந்தையை
ஊரோடு அழைத்துச் செல்ல
உயிரை பணயம் வைத்து
1200 கிமீ கடந்தாள் மகள்

தனித்திரு என்றோதுகையில்
இல்வாழ்க்கையில்
இவர்கள் இணைய
இன்று உதவியது

பசிக்கு உணவும்
இருக்க இடமும்
இல்லை என்றானபின்
வந்தாரை வாழவைப்பதா

இருவராய் நால்வராய்
ஈராயிரம் கிமீ கடக்க
சாதனைப் பயணமல்ல
சொந்தங்களோடு வாழ

திங்கள், மே 25

பிரணவம்



கண்ணில் வலைபோட்டு
   கவர்ந்த என்னிதயக் கள்வனே
பண்ணில் கட்டமைத்த
    பாசாங்குக் கலைகள் வேண்டாமே
எண்ணில் எழுத்தில்
    என்னுயிர் மெய்யா னவளே
பண்ணில் பாசமே
     பாசாங் கல்ல மயிலே

எழுத்தசைச் சீரோடு
    எதுகை மோனை பாடாதே
மழழை ஓசைக்கு
    மங்கல நாணே வழிதானே
எழுத்தில் ஒப்பந்தம்
     என்னிணை நீதான் என்றே
முழுஉலகம் அழைத்தே 
     மன்றல் நடத்தி காட்டவா

கழுத்தில் ஏறினால்
    கிழத்தி என்றே ஊரறியும்
நழுவும் கெழுத்தி
    நாவுனக்கு நானே அறிவேன்
பழகும் பளிங்கே
    பழிச்சொல் வீச வேண்டாமே 
வழக்கும் வாய்பேச்சும்
    வசந்தமல்ல - வாழ்வில் கூடுவோமே

தழைக்கும் வாழ்வை
    தரணிச் சிறக்க நடத்திடு
உழைக்க உன்னிணையாய்
    உள்ளேன் உயிருள்ள வரையே
பிழைத்துக் கொள்வேன்
    பிரணவம் கற்றேன் உன்னிடமே
அழைத்துக் கொண்டாய்
    ஆனந்தம் ஆனந்தம் வாழ்விடமே

ஞாயிறு, மே 17

நூல் விமர்சனம் ஆங்கில மாயை




ஆங்கில மாயை  - ஆசிரியர் நலங்கிள்ளி

ஆங்கிலம் உலக மொழி இல்லை அதுவொரு கட்டுக்கதை என்பதை பல ஆதாரங்களோடு நிருப்பிப்பது இந்நூல்.   இந்த ஆராய்ச்சியில் ஆங்கிலம் சனநாயக மொழியா, பெண்ணிய மொழியா அல்ல அறிவியல் மொழியா என கேள்வி எழுப்பி அந்த மொழி அப்படி பட்டதல்ல அது சாதாரண மக்களின் மொழியாக சிலரால் பேசப்பட்டது என்கிறார். ஆட்சி மொழி இலத்தீன், ஆங்கிலேய மக்களிடம் இலத்தீன் பேசுவது உயர்வாக இருந்தது ஏனெனில் அது இறை மொழியாக பாவிக்கப்பட்டது எனவே ஆட்சிமொழியாகவும் இருந்தது. ஏழைகள் பேசும் மொழியாக ஆங்கிலம் இருந்தது.  அதாவது ஆங்கிலம் பேசுபவன் உயர்ந்தவன் என என்னும் தமிழ் சமுதாயமும் போல.

ஆங்கில மாயை என கூற வந்த ஆசிரியர் பெரியாரும் அவர் வழி வந்தவர்களும் ஆங்கிலம் கற்றால்தான் உயர முடியும் என்று பரப்புரை செய்ததாக ஒரு குற்றசாட்டை ஆதாரங்களோடு வைக்கிறார்.  ஆனால் நூலின் இறுதியில் பெரியாரின் வாதத்தில் சூதில்லை, எப்படியாவது தன் மகன் ஆங்கிலம் கற்றால் உயர்ந்துவிட மாட்டானா என நினைக்கும் ஒரு அப்பாவி தமிழ்ன் நினைப்பது போல் நினைக்கிறார் என்கிறார்.

இங்கிலாந்தில், ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட விவிலியம் இலத்தீன் மொழியில் மக்களுக்கு பகிரப்பட்டது. ஜான் வைக்லிஃப் என்ற ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர் 1370 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மக்களிடம் சுற்றுக்கு விட்டார்.  திருச்சபை மொழிப்பெயர்ப்பால் தீட்டு ஏற்பட்டதென அவரை தீக்கிரையாக்கியது.  ஆம் இங்கே சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் திருவாசம் வாசிப்பது தீட்டு என்பது போல்.

தாமஸ் லினேகர் எனும் பன்மொழி அறிஞர் 1500 களில் ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியராக இருந்தவர் விவிலியத்தை கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.  அதில் இலத்தீன் விவிலியத்திற்க்கும் கிரேக்க விவிலியத்திற்க்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்.  அதாவது நம்மவூர் வால்மீகி இராமயணத்திற்கும் கம்ப இராமயாணத்திற்கு உள்ள வித்தியாசங்கள்.

பிறகு மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்கள் யாரும் ஆங்கிலேயர்கள் அல்ல வெவ்வேறு ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறார். தற்போது வேண்டுமானால் சில கண்டுபிடிப்புகள் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது.  நியூட்டனே அவர் கண்டுபிடிப்புகளை இலத்தீனில்தான் எழுதியுள்ளார் என்ற ஆதாரத்தை வைக்கிறார். 

பெண்ணடிமைத்தனம் கூடாது என்ற பெரியார் எப்படி பெண்ணடிமைத்தனத்தை கொண்ட ஆங்கிலத்தை வேண்டுமென்றார் என்ற  கேள்வியை வைக்கிறார். அதற்கும் ஏகப்பட்ட ஆதாரங்களை சொல்லாடல்களை உங்கள் முன் விவாதத்திற்கு வைக்கிறார்

தமிழ் சமுதாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் கண்டிப்பாக படியுங்கள்.

குறைகள் என கண்டோமென்றால், இந்த ஆங்கில மாயை எனும் ஆய்வை பெரியாரை மையப்படுத்தி அணுகியிருக்கிறார்.  

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிவிட்டார்.  தமிழில் புராண குப்பைகள் அதிகமாக இருந்தாலும் அவ்வாறு கூறியிருக்க கூடாது என்பது இவரின் வாதம். அதனால் மொழி ஒன்றும் அழிந்து விடாது என்கிறார். விவிலியம் மாறியது ஆனால் ஆங்கிலம் அழியவில்லை என்கிறார்.

பெரியார் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தியதை சொல்லாமல் விட்டுவிட்டார்.  ஆம் சில மேற்கோள்களை எடுத்துக் காட்டிய  ஆனைமுத்து தொகுத்த அதே புத்தகத்தில்தான் பெரியார் செய்த இச்செயலும் இருக்கிறது.

மொழி என்பது அறிவு என ஓரிடத்தில் கருத்தை வைக்கிறார். தாய்மொழியில் சிந்திப்பது எளிது, புரிந்து கொள்வது எளிது.  ஆனால் அறிவு….. நான் வேறுபடுகிறேன்.  உடன்படுவோர் மேலும் கருத்து தெரிவிக்கலாம்.

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937 ஆண்டு நடைப் பெற்றது. அந்த மொழி எழுச்சியைப் பற்றி ஏதும் இல்லை.  1950 ல் குடியரசான இந்தியா அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியை தேசிய மொழியாக ஏற்கும் என அறிவித்தது.  அதை நடைமுறைப்படுத்த 1965 ல் முயன்றபோது ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றி எந்த கருத்தும் இல்லை.

புற்றீசல் போல மெட்ரிக் பள்ளிகளை திறக்க அனுமதி கொடுத்த அரசை, ஆங்கிலத்தை நோக்கி மக்களை ஓட விட்டதைப் பற்றி விமர்சனம் இல்லை. ஆம் அரசும் நம்மை திசை திருப்புகிறது.

மொழி என்பது அடையாளம்.  “தமிழ்மொழி” தமிழ் இனத்தின் அடையாளம். மதங்களால் வேறுப்பட்டாலும் இனம் என அடையாளப்படுத்துவது தமிழ் மொழிதான். நாடு கடந்து வாழ்ந்தாலும் தமிழன் என்றே அடையாளம் காணப்படுகிறோம்.

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய அறிஞர்கள் 11 பேர்.  இவர்களில் 9 பேர் ஜப்பானில் வசிப்பவர்கள். பெரும்பாலான அறிஞர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.  அவர்களின் கருத்துக்கள் அவர்களின் தாய் மொழியான ஜப்பானிய மொழியில்தான் பகிரப்பட்டது.

ஆக தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம்



வியாழன், மே 14

வாட்டல்




தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
                                                                                                    குறள் 1318


ஊடுவாள் எனவறிந்து
உள்ளடக்கினேன் தும்மலை
உணர்ந்தாளோ என்னவோ

உம்மவள் நினைப்பதை – நான்
உணராதிருக்க
உள்ளடக்கினீரோ என வதைத்தாள்

சனி, மே 9

கடிதத்தில் என் நெஞ்சம்



வண்ணப் பூவாய்
   வாசலில் மலர்ந்த
அன்னப் பறவையே
   அன்புடன் எழுதுகிறேன்

எண்ணக் கனாவில்
   எனையே வாட்டும்
கண்ணே காதலில்
   காவியம் பாடுகிறேன்

தினமும் நினது
   திருப்பார்வை பட்டால்
வனங்கள் எல்லாம்
   வசந்தமாய் தெரியுதடி

சரணம் தேவி
   சம்மதம் அருள்வாய்
காரணம் தேடி
   காய்தல் செய்யாதடி

இகத்தில் உனையன்றி
    இங்குயாரை பூசித்தேன்
முகத்தை திருப்பினாய்
    முகவரிகள் மாறிவிட்டதே

ஏனடி கோபம்
   எதுவடி காரணம்
நானடி சோகத்தில்
   நலிகிறேன் மாதத்தில்

ஏதோ நடந்தவை
    எல்லாம் மறந்துவிடு
இதோ நெஞ்சம்
    இனியுனது தஞ்சம்

மறவா



மறவேன் மறவேன் என்றுரைத்தே
    மறந்தீரோ மறவர் குலமகனே
மறவா நானும் வாடுகிறேன்
    மதிமுகிலும் உனைத் தேடுகிறேன்
உறவாய் வருவாய் என்றே
    உள்ளத்திற்கு நாளும் சொல்கிறேன்
பறவை   உறவை  கண்டதும்
    பசலை நோயால் வாடுகிறேன்

மாலையில் மன்னா உனக்காக
    மருளமருள விழித்து நின்றபோது
வேளையில் வாராது என்னை
    வேதனை செய்ததை நினைக்கிறேன்
சோலையில் நீயும் நானும்
    சோடியாய் திரிந்ததை எண்ணுகிறேன்
பாலையில் வாடும் எனக்கு
    பன்னீர்  அதுதான் தெளிக்குதய்யா

கணையை தொடுத்து வீழ்த்திய
    கண்ணா உனைநான் தேடுகிறேன்
அணைத்து கண்ட இன்பத்தை
    அன்றே நீயும் மறந்தாயோ
சுனையில் இறங்கி நின்றாலும்
    சுடுதே  தேகம் தனலாக
மனையாள் நீயே என்றுரைத்த
   மன்னா மறையாது வருவீரோ





தட்சணை


சொர்க்கத்தின் கதவுகள்
   சொத்தி ருந்தால் திறக்க
தர்க்கத்தில் அவையாவும்
   தவறில்லை நியாயமாகும்

ஏலச் சந்தையில்
   ஏட்டுச் சுரைக்காய்கள்
வாழ வருபவளோடு
   வண்டிகளை கேட்கும்

எடுத்த ஏலம்
    எட்டாம்நாள் சொத்தை
திருப்பி அனுப்பி
    திங்களில் அபராதம் கேட்டனர்

ஆயிரம் பொய்கள்
    ஆராய்ச்சியில் வெளிபட
போயிரும் பலஉயிர்கள்
     பொழைச்சி ருக்கும்சில

வாழை இங்கு
    வாடி கொண்டிருக்க
தாழை மணம்
    தவழ்வதாய் பொய்கள்

ஆடை அவிழ்ப்பு
    ஆசையின் முகூர்த்த மல்லவோ
பாடை வரைக்கும்
    பாவியின் காயங்கள் ஆனதே

சாந்தி முகூர்த்தம்
   மனசாந்திக்கு ஏங்கலாம்
வாந்தி முகூர்த்தம்
   வாழ்க்கையின் தொடக்கமாகலாம்

பதினாறு செல்வமும்
    பெருவாழ்வும் சாத்தியமோ
விதியை நொந்தும்
     விடியாத வாழ்வானதே

என்சொத்து அவ்வளவு
    எனக்கு வேண்டும் அவ்வளவு
கண்பிதுங்கி வாழும்
    கடைநிலை தந்தை இவர்கள்

வட்டிக்கு வாங்கி
    வாழ அனுப்பும் கோலங்கள்
குட்டி போடும் நினைப்பில்
     திரும்ப அனுப்பும்  ஜாலங்கள்

கண்ணீர் காவியமாக
    கரைதேடும் மங்கையவள்
கரையை காணாது
    கடலில்  முழ்கி மாள்கிறாள்

நரைத்த பின்பும்
    நங்கை ஒருத்தியை தேடுகிறான்
வாழையை மீண்டும்
   வளர்ப்பதாக ஊருக்கு சொல்கிறான்

யாருக்குத் தெரியும்
   யாத்திரையின் நடுவழி
போருக்கு ஆயுத்தமாகும்
   பொல்லா இச்சமுகத்தில்

கருகி வாழும்
   கண்ணகியின் உலகமிது
மருகும் இளங்கோ
   மன்னனாக மணையில் உள்ளதால்

புரட்சி கவி



அடங்கி கிடக்க ஆக்களா
   ஆளும் உரிமை நமக்குண்டு
முடங்கி கிடக்கும் மக்களே
   மூடவழக்கம் அகற்று என்று
ஓடுங்கி கிடக்கும் ஓடப்பர்களை
   ஒப்பப்பர் ஆவாய் என்றுரைத்தே
தொடங்கி வைத்தான் போரை
   தோளோடு தோளாய் நின்றே

சாதிக் கொடுமை சகியாது
   சாடி மக்களை திருத்த
வாதியாய் நின்று பாடினான்
   வருணா சிரம்தனை எதிர்த்தான்
நாதியற்ற பாட்டாளி நீங்கள்
   நாலு சாதியாய் பிரிந்திருப்பதோ
ஓதினான் உலகிற்கு நீதி
   ஒற்றுமையே உயர்வுக்கு வழியென்று

பெண்ணின்  கைமை  நிலைகண்டு 
    புதியபாதை  கோடிட்டு காட்டினான்
வெண்சேலை விட்டு வெளிவர
    வேள்வி தீயை மூட்டினான்
எண்ணும் மனமும் எழுச்சியும்
    எல்லாம் நிறைந்தவள் பெண்ணவள்
பின்னும் ஏனோ வீழ்ச்சி
    பகர்வீர் பதிலை இந்நாளில்


தீந்தமிழ் உலகம் பரவிட
    திக்கெட்டும் தமிழன் புகழோங்கிட
அந்நிய மோகம் அழிந்திட
    அன்னைமொழி ஆட்சி மொழியாகிட
முந்தைய மூடவழக்கம் அகன்றிட
     மனதில் பகுத்தறிவு புகட்டி
வந்தே வாழ்வளித் திட்ட
     வேந்தன் கனகசுப்பு ரத்தினமே



விலையோ விலை



ஆயக்கலை
மாயக்கலை
அல்லஅல்ல
மன்மதக் கலை

கண்ணசைப்பாள்
காரியமென்பாள்
காசவளுக்குக்
கல்லாவுக்குத் தக்கவாறு

கணக்கிருக்கு
காலநேர கணக்கிருக்கு
காலம் கூடுமென்றால்
காசும் கூடும்

நாளொன்றுக்கு
நால்வர் என
நன்றாய் வியாபாரம்
நடக்கலாம்

நடையாய் நடந்தாலும்
படியளப்வளை
பாராமல்
பாழும் வயிறு காயலாம்

நவீனக் கைபேசி
நுனிநாக்கு ஆங்கிலம்
நுரைததும்பும் திரவம்
காணிக்கை வேறுபடலாம்

அரிதாரம் பூசும்
அழகென்றால்
அதன் விலை
அதன் தரகு வேறுவேறு

சந்தை நிலவரத்தை பொறுத்து
சதைக்கு விலை
சல்லாபம்
சத்துள்ளவனோடு மட்டும்

தேவைக்குத் தேடுபவனும்
தேரிழுக்கும் ஊரும்
தொடர்பில்லாக் கொடுப்பது
தேவதாசி ப்பட்டம்

வயிற்றுக்கு வாவென்பவளும்
வசதிக்கு வாவென்பவளும்
வழங்குது இன்பம்தான்
வாழ்வின் சுவை அதுவல்லதான்


வேண்டும் தீ



ஒன்னா வளர்ந்த ஊரிலே
    ஓதிய வேதம் புரியல
சின்னாள் கழிந்த பின்னாலே
    சிவனும் நபியும் சேரல
இன்னல் மின்னலா தொடர
    இவர்கள் சிறுபான் மையினரோ
என்னால் இவைகளை மாற்ற
    ஏது செய்யலாம் என்போரே


ஒற்றுமை குலைக்கும் ஓநாய்களை
    ஓடோட விரட்டி ஒழிக்கனும்
வேற்றுமை நினையா தோழனாய்
     வீதியில் அன்பை விதைக்கனும்
முற்றுமை ஆனது புரட்சியென
   முடங்கிடாது  தீமூட்டி காத்திட்டு
கொற்றவனுக் குணர்த்திடு மானுடமே
   கொலைகள் இனியில்லை மதத்தாலென
 


 

புதிய பாதை




கயிறு மாட்ட நேரம் பார்த்து
கழுத்தை நீட்டி என்ன கண்ட
கழுதை யின்னு பேரு வாங்கி
கண்ணீர் விட்டு தெருவில் நின்ன

சம்பாதித்து கொடுத்து சத்தை இழந்து
சட்டுன்னு வந்து சமையல் செஞ்சு
சாயுற நேரம் தலை சாயுற நேரம்
சாயுறான், அவன் காரியம் சாதிக்கிறான்

சுகமே யில்லாது வருஷத்தை ஓட்ட
சுடுதோ நெஞ்சிலே பிள்ளை இல்லாதது
சுற்றமும் சாடுதோ உற்றதும்   வெறுக்குதோ
சுருக்கென தைக்குதோ சொல்லுற வார்த்தை

தழைக்கிற குடும்பம் எங்க குடும்பமின்னு
பழிக்கிற அத்தையும் முழிக்கிற புருஷனும்
அழித்திட உன்னை திட்டம் தீட்டினாலும்
விழித்தே நீயும் விவாகரத்து கோரடி

பொட்டைக் கழுதைக்கு திமிரை பாரென்றும்
போட்டு உதைக்க தாங்கிய கொடுமையும்
புழுவில்லா மலடியென பொய்யுரைத்த காதையும்
புழுவாய் கொட்டதுடித்து நின்றாயே

மலடியான நீயும் மருத்துவம் பார்க்க
மழலை  அரும்ப வழியுண்டு என்றே
மருத்துவன் சொல்ல மனதுக்கு மகிழ்ச்சி
மாற்றுப் பாதையில் சென்றால் உயர்ச்சி

மங்கா வாழ்வின் அனுமதி மறுமணம்
மணந்தால் வாழ்வில் நிம்மதி தருமணம்
மங்கையே மனதில் தவழும் அருமணம்
மலர்ந்திட நீயும் புரிந்திடு புதுமணம்


எழுதிய ஆண்டு 1989

சொந்தம் தொடர


உதிக்கும் போதே எனக்கு
    உத்திரவாத சாசனம் எழுதி
மரிக்கும் நிலைக்கு தள்ளியது
    மடமை வேத சொந்தம்மா
தாய்க்கு தம்பி என்று
   தாரமா னேன்ஒரு நன்னாளில்
நாய்க்கும் கீழாக இன்று
    நான் வாழும் நிலையானேன்

விட்ட உறவை தொடர
    கட்டி வைத்தனர் என்னை
கிட்ட வந்த அவனிடமோ
    கெட்ட வாடை வீச
எட்டி சென்ற என்னை
    திட்டிய ஒற்றைச் சொல்லோ
பெட்டை கோழியே உன்வேலை
     குட்டி போடுவது என்றானே

ஆயிரம் சொத்து இருந்தும்
    ஆங்கொரு நிம்மதி இல்லை
போயிரும் உயிரை நானும்
     போகாது பிடித்து வைக்க
வளர்த்தவளும் வந்து பார்த்து
    வண்டியாய் கண்ணீர் விட்டாள்
மலராது கருகும் வாழ்வு
    மடியும் காலம்வரை  துரும்பாகவே
   

வெள்ளி, மே 8

அய்யோ...!!! கடவுளே...!!!



காய்ந்த தலையுடன்
காலத்தை ஓட்டும்
கண்ணீர் கலங்களாக
கரைசேரும் புதல்வர்களை

வேய்ந்த கூரையிலிருந்து
வேடிக்கை பார்க்கும்
வேலவனே மாற்றோனே
வேள்வியா பெரிது

தோய்ந்த எண்ணையில்
தேகத்தை வளர்ப்பவனே
தோல்சுருங்கி வாட
தலைவிதியை நிர்ணயித்தவனே

மாய்ந்த இவர்கள்
உனை சேவித்தும்
வினை எனசொல்லி
விளையாடுவது நியாயமோ

முக்கண் நாயகனே
மூவுலகமும் அறிந்தவனே
முலைப்பாலின்றி வதங்கி
மூச்சு விடுவதேனோ?

ஞானசம்பந்தனுக்கு
ஞானப்பால்
நியாயமா தேவி - இத்தளிர்களுக்கு
தாயில்லையோ நீ

குடமுழுக்கென்று
குடம் குடமாய்
கொட்டும் பாலெல்லாம்
குழந்தைக்கு கொடுத்தால்

ஒருவேளை சோற்றுக்கு
ஓடியோடி உழைத்து
சக்கையை ஊண்டு
சாகிறான் மனிதன்

உனக்கோ ஆறுகால உணவு
கணக்கோ கண்பிதுங்கும் அளவு
உலகோ பசியால் பிளவு
உணவோ அங்கு தொலைவு

நெய்யென்றும் பாலென்றும்
பஞ்சாமிருதம் பன்னீரென்றும்
பச்சைக் கல்லில் கொட்டி
பாவத்தை போக்குகிறார்களாம்

பாவம் செய்ய முடியாமல்
பாழும் வயிற்றுகாக அலைகிறேன்
கல்லே எனக்கொரு வரம்கொடு
கல்லாக நான்மாற வேண்டும்

வானமே கூரையாக
வாழ்வை நடத்தும்
வக்கற்ற எங்களை விட்டுவிட்டு
வசதியாய் நீ மட்டும்

வானளாவ வீடுகட்டி
இல்லறம் நடத்தும்
நல்லறம் சொன்னவனே
இதுவா அறம்

அறுபடை வீடு கொண்டவனே
உனக்கோ தெருவுக்குத் தெரு
ஊருக்கு ஊர்
மாட மாளிகைகள்

ஒன்றுக்கு இரண்டென
உல்லாச வாழ்வு நடத்தும்
காம நாயகனே
கற்பு என்றால் என்ன?

கல்லே, தெய்வமே
தூணிலிருப்பவனே
துக்கம் அளிக்கிறாயே
தொலைந்து போயேன்

ஏகாதிபத்தியம் நடத்துபவனே
எச்சரிக்கை விடுக்கிறோம்
வானமே கூரையிருந்தாலும்
வரண்டுவிடாது எங்கள் புரட்சி

பலவுருவம் கொண்டவரே
பலத்தை சற்று காட்டுங்களேன்
பணம் வேண்டுமானாலும் தருகிறேன்
தினம் அருள்புரிய வேண்டுகிறேன்

அய்யோ...... கடவுளே..... கல்லே....
என் கேள்விகளுக்கு பதில்
நீயில்லை என்பதால்
இன்றுவரை கிடைக்கவில்லை

குழந்தையும் கல்வியும்



சின்னபுள்ள சித்தாளா போகையில
   சிந்தை கொஞ்சம் கலங்குதம்மா
என்னகொடுமை படிக்கும் வயதில
   எட்டணா கூலிக்கு போகுதம்மா
அன்னமில்லா வறுமை காரணத்தால்
    அடிப்படை  கல்வியும் கிட்டலியே
என்னவிலை கொடுத்தா இந்தநிலை
     எந்தன் நாட்டில் மாறுமம்மா


மத்தபுள்ள படிக்க போகையில
    மருகி  நிக்கு  இந்தபுள்ள
கத்தைபுத்தகம் சுமக்கும் ஆசையில
    கனவ வளர்க்கு சின்னபுள்ள
குத்தவாளி யாருயிந்த கொடுமையில
    குறைய  தீர்க்கவும் சட்டமில்ல
வெத்துவேட்டு அரசியல் கூட்டத்தில
      விடியும் வாழ்வின் எல்லை 

மருளும் மானுடம்



மதம் என்பது மார்க்கமா
   மானுடத்தின் பிரிவினை தர்க்கமா
நிதம் நிதமொரு மார்க்கமா
   நீயும் நானும் வேறானமோ
வதம் புரிந்த அவதாரங்கள்
   வரங்கள் அளித்ததோ வாழ்வழிக்க
பதம் பார்க்கும் கடவுளை
   பாரினில் இல்லாது ஆக்கிடுவோம்

பெரியாரின் சீர்த்திருத்தம்
   பேதை மக்களை மாற்றலியே
உரியோருக்கு மனமிருந்தும்
   உலகை மாற்ற எண்ணமில்லையே
உணர்வோடு விளையாடும்
   உதவாத மதங்களை ஒழிக்கலியே
தளர்வோடு நாமிருந்தால்
   தரணி சிறக்க வழியில்லையே

மானுடம் என்பதால்
   மனமைதிக்கு மதங்கள் வேண்டுமோ
காணும் சரித்திரத்தில்
   கண்ட புதைகுழிகள் போதாதோ
சமணம் அழிந்து
   சைவம் தழைத்தது அறியாததா
அம்மணம் ஆயினம்
   அதுவொரு மதமா  வளரனுமா

ஊனம் உள்ளத்திலிருக்க
   உதவுமோ உபநிடத கதைகள்
நானும் மறந்திட்டேன்
   நான்கு பிரிவினைகள் அதில்தானே
பேணும் மனுநீதி
   பெரியோன் இங்கு சங்கராச்சாரி
நாணம் எவருக்குமில்லை
    நானும் மனிதனென உரிமைகோரி

தமிழா



உள்ளத்து மொழியில் பேசிடவே
   உண்மை உரைப்பேன் தோழர்களே
தெள்ளத் தெளிவா கூறிடுவேன்
   தென்சீமை தமிழ் உயர்ந்ததுவே
அள்ள அள்ள அமுதாவதை
   ஆங்கிலத்தில் டமில் என்றுரைப்பதோ
கொள்ள வேண்டிய தமிழை
    கொல்ல துணிந்தீரே தோழரே

மின்னும் அழகை ரசித்து
    மீண்டும் தவறு செய்கிறீரே
தின்னும் யாவும் நல்லதல்ல
  திகட்டி  விடாதோ தோழரே
பொன்னும் விஞ்சும் ஒளியாய்
   பொதிகையில் தவழ்ந்து வருகிறாள்
இன்னும் அவள் கன்னியாய்
   இந்த உலகில்தான் வாழ்கிறாள்

அம்மா என்ற தமிழோ
   அந்தோ மலர்ந்தது மம்மி
சும்மா சொல்லக் கூடாது
   சொரணையில் இவர்கள் டம்மி
இம்மா மொழியின் பெருமை
   இவ்வுலகில் யாருக்கு கம்மி
எம்மா புகழ் வந்தாலும்
   என்மொழிக்கு இடரில்லை இம்மி

கடைக்கண் பார்வை



 

கன்னியின் கடைக்கண் பார்வை
   கண்டவனுக்கு காதல் உண்மை
அன்ன ஆகாரமில்லா காளைக்கு
    அணங்கிடம் தோற்க வெறுமை
சன்னியாசி கோலம் பூண்டே
    சதிகாரி என்பதோ பொய்மை
உன்னாசை மாறிட்டாலும் - காதல்
    உலகம் இயங்குவதால் பருண்மை

மாளும் ஈரூடலால் மீளுமோ
    மறித்த தெய்வீக காதல்தான்
வீழும் உலகின் விதிவசமென
    வீணணாய் இருப்பது வாழ்வோ
செழுமை பெற்ற காதலாய்
   சேர்ந்து இணைந்து வாழ்ந்திட
நாளும் உழைப்போம் - நரம்பிசைக்க
    நாமும் காதல் புரிவோம்

கன்னி



நறுமணம் உலவி வர
நந்தா விளக்கு ஓளிவீச
நாற்திசையும் புகழிருக்க
நான் காணுகிறேன் கன்னியவளை

பெயர் சொல்லி அழைக்கிறேன்
பேதையவள் துள்ளித் திரிகிறாள்
பொன்னுடல்தனை தொட்டு பார்க்க
புன்னகையை அள்ளி வீசுகிறாள்

பேரழகி என் கைபிடிக்க
பண்டிதனாய் கிறுக்க
பாவையவள் தீஞ்சுவை என்றாள்
பலவித கனவு கண்டேன்

அமுதொன்று பருகினேன்
அஃது  போல் வேறொன்றில்லை
அது மா, பலா போன்றதென - சுவை
அறியா நாவலர்  உரைக்கலாம்

என்னை பேச வைத்தாள்
எழுலுகை பாட வைத்தாள்
எங்கெங்கும் அவள் ஓவியம்
எனினும் எனக்கவள் காவியம்

ஆன்றோர் பலரும் வாழ்த்த
அவளை நானும் மணக்கிறேன்
என்னுடன் வாழும் நேரிழையாள்
ஏகாந்த "தமிழ்" கன்னியல்லவோ




பட்டிபுலத்தானின் பரிதவிப்பு



பட்டினச் சிறகை
   பட்டிபுலத்தில் ஒடித்தது யாரோ?
எட்டின உறவாய்
   ஏமாற்றி மறைந்தது யாரோ?
கொட்டின அழகை
   கொள்வதற்குள் கொண்டதாரோ
கிட்டிட தவங்கள்
    கடவுள் கருணை புரிவாரோ

கெண்டை விழியாள்
   கொட்டிய சுகங்கள் அப்பப்பா
தண்டை மேனியாள்
   தவிக்க விட்டது அப்பப்பா
அண்டை நண்பனும்
   ஆகா  என்றதும் அப்பப்பா
முண்டா கட்டிட
   மனது எண்ணியதும் தப்பப்பா

கடலாடும் நேரத்தில்
   காரிகை நினைவில் வரவே
மடல்கள் மனதில்
   மாரிபோல் பொங்கி எழவே
ஊடலால் அவளோ
   உத்திரவு இன்றி  சென்றதாய்
வாடிய எனக்கு
   வருத்தி சமாதானம் சொன்னேன்

மௌனத்தில் என்னை
   மறந்து மறைந்து சென்றாயோ
யௌவனத்தில் கலை
   யிழந்து வாடுகிறேன் வாராயோ
அவ்வண்ணம் நீயிருந்தால்
   அடுத்த நொடியில் தோன்றாயோ
செவ்வண்ண இதழில்
     சிவக்க முத்தம் தாராயோ


குறிப்பு:   பட்டிபுலம் மாமல்லபுரம் அருகில் உள்ள கிராமம்
                  எழுதிய ஆண்டு 1992




புதன், மே 6

எட்டாக் கல்வி



ஆசையா படிக்க போனேன்
   ஆனால் எனக்கு இடமில்லை
கசையடியா நுழைவுத் தேர்வு
   கழிச்சு கட்டும் வழியல்லோ
திசைக்கொரு அரசியல் கட்சிகள்
   தீர்ப்பதா வாக்குறுதி அளிக்குது
வசைப்பட்டு  சாகும் நாங்களோ
   வக்கற்ற கீழான சாதியோ

கிராமத்து பள்ளியில் படிச்சதை
   கேள்வியில் காணம தவிச்சோமே
திறமத்து விட்டோ மென்றே
   தீர்ப்பு எழுதி ஏமாற்றினரே
அறமத்து நடக்கும் ஏலத்தில்
   அய்யகோ   கழிக்கப் பட்டோமே
சுரமத்து ஏதோ படிக்கிறோம்
   சூழ்நிலையில் எங்கோ ஒதுங்குறம்


மேல்மட்ட படிப்பு எங்களுக்கு
  மேட்டினில் இரைத்த நீரோ
கால்பட்டா தீட்டாகுமோ ஐஐடி
   காசிருந்தா  புனிதமா மருத்துவம்
பாழ்பட்ட எங்கள் நிலையோ
    பலவருட சுதந்திரத்தில் தீரலயே 
மல்கட்ட முடியாம தவிச்சே
   மரணத்தை தழுவுகிறோம் அனிதாவா


செவ்வாய், மே 5

அபச்சாரம்




இல்லாத ஒருவன் கல்லாகி
   இருக்கு மிடம்செல்ல தடையோ
பொல்லா  ஆரிய வேதங்கள்
  பொறித்த சூத்திரம் சூத்திரனோ
அல்லாத சாதியில் முடக்கியே
  ஆகம  விதியால்  தாழ்ச்சியோ
கல்லாத கபோதி  ஆனதால்
   காலகாலமா ஏமாந்து போனாயோ

அவனை காண தடையில்லை
  ஆனால் தொடதான் விதியில்லை
தவமே கொண்டாலும் பயனில்லை
  தனலால் நந்தனவாய் வியப்பில்லை
கவனம் இனிதான் தேவையே
    காவிகள்  வரலாற்றில் நீஇந்துவாம்
 உவந்து  நீயும் செல்வாயே
    உடன்பிறப்பை  கொல்லத் துணிவாயே

சந்தனம் நீட்டும் சதிகாரன்
  சாணிப்பால் அளித்த கயவன்
வந்தனம் கூறும் வக்கிரம்
  வாயிலில் தடுக்கும் அக்கிரமம்
இக்கணம் நீவீர் புரிந்திருப்பீர்
  இன்னும் ஏனோ உடனிருப்பீர்
தாக்கனும் தகர்த்து ஒழிக்கனும்
  தகவமைக்க மாற்றம் வேணும்


   

திங்கள், மே 4

சகலமும் நீயே



எம்மன ஆலயத்தின்  தேவியாய்
    என்னை கவர்ந்தவள் அமர்ந்திருக்க
அம்பலத்தில் இல்லாத தேவிக்கு
     ஆராதனை  ஆராட்டு  ஏனோ
சுடரொளியாய் விளங்கும் விழியில்
     சுழன்றடிக்கும்   வெளிச்ச மிருக்க
சடங்காய்  தீபவொளி எதற்கு
    சர்வேஸ்வரி  எனமுகம் காட்டவோ
   
தேவியின் கடைக்கண் வேண்டிட
       தருணம் இதுவல்ல என்றாளே
கூவியும் தராத தேவியிடமா
    கும்பிட்டு  வரங்கள் கேட்பேன்
ஆவியும் நினது சரணமென
    ஆவண சாசன  மாக்குகிறேன்
புவியில் வாழும் வரையில்
    பேதையே தாராயோ நினதருளை

ஆடும் ஆங்கார நாயகிக்கு
      ஆறுகால  அருஞ்சுவை உணவிருக்கு
பாடுபட கைகள் இரண்டிருக்கு
    பாதையில் இணையாய் வாமயிலே
மாடுமனை மச்சான் நானிருக்கேன்
    மண்ணைத் திருத்தவோம் பொன்மயிலே
வீடுநிறை  விளைச்சலால் பெண்ணே
    வீதியோடு விருந்துண்டு மகிழ்வோம்


ஆயுதத்தால் என்ன பயனடி
     ஆரை  வதைக்க அவதாரமடி
பாயும் விழியின் வீச்சால்
    பணிந்தேன் உன்னிடம் சரணமடி
சூரனை  சூலத்தால் கொல்ல
     சூத்திரம் வகுத்தவள் சாமுண்டி
தீரனம்மா திலகமிடு மெல்ல
     தீஞ்சுவை வாழ்வை வேண்டி

நான்மாட கூடலில் வாழ்வதற்கு
     நான்கு வாசல் கொண்டவளாம்
உன்னோடு கூடி வாழ்வதற்கு
    உன்னிதய வாசல் போதுமடி
அனலாய் அக்னியான அவளா
    அகிலதிற்கு அருள்வாள் சொர்க்கம்
தனலாய் தகிக்மெனை அணைத்திட
    தணியுமே  காண்பேனே சொர்க்கம்


 

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...