திங்கள், பிப்ரவரி 13
தீட்டு
பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா
குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்
தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா
அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே
ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா
தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்
அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்
முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?
தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்
யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே
யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா
சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்
இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்
நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே
தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?
ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா
வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ
ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ்நாட்டின் சூத்திரங்கள்
கேலிக் கூத்துக்கள் காலிப் பெருங்காயமாச்சு புலிச் சிங்கமில்லை மலிவான மனிதனென்றே உச்ச நீதிமன்றம் எச்சரித்து விட்டப் பின்னும் எச்சமாக ஏனின்னு...

-
காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...
-
விழித்தெழு பெண்ணே வித்தைகள் கற்றிட செழித்திடும் அறிவிலே செல்லுமிடம் சிறந்திட சிறந்த கல்வியால் சிந்தனை பெருகட்டும் அறத்தின் வழியே அன்பு பர...
-
களவுமணம் கலக்கமே காதல்களம் காண்போர்க்கு காண்போர் யாவரும் காதுபட பேசவே பேசும் செய்திகள் பெற்றோர் அறிந்திட அறிந்தும் அறியாததாய் அரண்தனை பலப...
-
தன்னிலை மயக்கமேன் தண்ணீரில் மிதப்பதேன் உன்நிலை மறக்கவா உயிரைதான் மாய்க்கவா இன்னிலை வாடாதோ இளங்குருத்து கருகாதோ நன்னிலை உயர்வன்றோ நாநிலமும்...
-
கேலிக் கூத்துக்கள் காலிப் பெருங்காயமாச்சு புலிச் சிங்கமில்லை மலிவான மனிதனென்றே உச்ச நீதிமன்றம் எச்சரித்து விட்டப் பின்னும் எச்சமாக ஏனின்னு...
1 கருத்து:
சாட்டையடி வரிகள்...
கருத்துரையிடுக