புதன், செப்டம்பர் 4

முப்பாட்டன் முருகன்
















தென்னாடுடைய சிவன்
எந்நாட்டவருக்கும் இறைவனானதால்
முப்பாட்டன் முருகனுக்கு
முத்தமிழ் மாநாடு

சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும்
அக்கக்காய் ஆய்ந்த
நக்கீரனுக்கு ஈடில்லை என்பதால்
தக்கதொரு வாய்ப்பிழக்க

இயலிசை நாடகமென
இகலோகத்திற்கு வாழ்வளிக்கும்
சரஸ்வதியை - சபதமெடுக்கும் போது
சமாளித்துக் கொள்ளலாமென்று

சிந்தையில்லா அரசு
சந்தையில் இராமனுக்கெதிராய்
தந்தை சிவனைத் தவிக்க விட்டு
கந்தனைக் கவசமாக்கிக் கொண்டது

அரசியல் சாசன
அடியொற்றி
ஆரம்பித்தனர் மாநாடு – ஆம்
அறுமுகனை வணங்காதவரெல்லாம்
                                    …………….. தமிழரல்ல

சொல் வழக்கு
சொலவடையில்
செந்தமிழ் செழித்திருக்க
சேயோனும் வாழ்ந்திருந்தான்  

கல்லில், ஏட்டில்
எழுத்தாணிகள்
எழுதி வளர்த்த தமிழ்
காணாது போமோ

அசை, சீர், சொல்லென
அலசி ஆய்ந்த
தொல்காப்பியனுக்கு
தொகைகளை கற்றுத் தந்ததாரோ

சுடலை மாடனும், ஐயனாரும்
இசக்கியும், பேச்சியும்
மாரியம்மனும், பச்சைம்மாளும்
ஊருக்கு வெளியில் உக்கிரமாய்

கருப்பசாமி, முனியாண்டி
நீலியும், வேடியப்பனும்
தமிழெனும் ஆகமத்திற்குள்
அடைபடாத காரணத்தால்

ஆயிரம் கோடிகள்
அறநிலையத் துறையிடம்
எங்ஙனம் சிலவழிப்பதென
எழுதிய தீர்ப்பு

தமிழரைப் பிரிக்கவேத்
தடத்தினை உருவாக்கியது
தர்க்கம் ஏதுமின்றி
தந்தனத்தோம் என்றது அரசு

பார்பனரல்லா இயங்கங்கள்
பல்லிளித்து எழுதியப்
பொழிப்புரையில் ஒன்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு
கோவணாண்டிகள் கேட்க
முருகனடிமை என்கிறது அரசு

இறை தூதனாய்
இயேசும் அல்லாவும்
இதயங்களை கவர்ந்தாலும்
அவர்கள் தமிழரில்லை

பறையடித்து
இறையாண்மை கொன்ற
திராவிடத் திரிபுகளை
தீர்க்கமாய் எதிர்த்திட

தமிழ் கடவுள்
உலகைச் சுற்றி
ஒருபழத்திற்கு ஏமாந்ததை
உணரும்படிச் சொல்லுங்கள்

மாட மாளிகைகள்
அதிகாரத்தின் குறியீடு
மானுடம் ஏமாற
அம்மதங்கள் தேவையா?



கருத்துகள் இல்லை:

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...