சனி, நவம்பர் 15

இல்லாள் மகிழ.....




கட்டியவளைக்
கட்டியணைத்து
கன்னத்தில் முத்தமிட்டு
காதலடி எனச் சொல்

கவளச் சோறெடுத்து
காயும் நிலவொளியில்
காதலாய் ஊட்டிவிட
அறிவாய் அரிவையின் பார்வை

புன்னை வனத்தில்
புன் சிரிப்புடன்
புதுபுது கதைகளை பேசு
புகலிடமாவாள் உன்னிடம்

கீச்சு கீச்சென்று பேசுவதை
கீரவாணி என்று சொல்
கிச்சு கிச்சு மூட்டுவதை
கிழப் பருவத்திலும் தொடர்

தங்கமே என
தாங்கிப் பிடி
தத்தையெனக் கொஞ்சு
தாரளமாய் அணைத்துக் கொள்

கவிதை வாராதென்றால்
கடிதம் எழுது
காதல் ரசம் சொட்ட சொட்ட
கண்டிப்பாய் கவனிக்கப்படுவாய்

அங்காடிக்கு அழைத்துச்செல்,
ஆச்சரியப் படுத்த
அவள் விரும்பிய
ஆபரணத்தை வாங்கு

அவள் அழுகையை
அலட்சியப்படுத்தாது
அவளோடு சேர்ந்தழுது
ஆதரவாய் இரு

ஒற்றை ரோசாவோ
உனக்குப் பிடித்த ஜாதிமல்லியோ
ஒரு முழமாவது வாங்கி
உன் கையால் சூட்டிடு

ஏழேழு பிறவியும்
என்னிணை நீயேதானென
எண்ணிலடங்கா காரணங்களை
எடுத்துச் சொல்

வடதுருவமோ
தென்துருவமோ
எங்கு வேண்டுமானாலும் செல்
எனினும் திரும்பிவா அவளுக்காக

இத்தனைக்குப் பிறகும்
ஏதோதோ குறைகளை
எண்ணி காண்பிப்பாள்
எனினும் புன்னகையோடிரு

அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...