விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் வெல்லடி
ஊழியல்லக் கண்ணே
உளவுறுதிக் கொள்ளடி
வாழியென வையகம்
வாழ்த்தும் பாரடி
கற்பெனப் பெண்மையை
கடைவீதிச் சரக்காக்கி
விற்பனைக் கென்றே
விதவிதமாய் அலங்கரிப்பர்
அற்பமென ஒதுக்கிடு
அறிவின் துணைகொண்டு
கற்பனையை விலக்கிடு
காரியத்தில் சிறந்திடு
பேரண்டப் பால்வீதியில்
பேரிளம் பெண்வசிக்க
ஆரத்தில் முத்தொன்றை
ஆசையா கேட்பாயோ
தாரமாகி தாம்பத்தியம்
தக்கதென இருப்பாயோ
பூரணமாகி பூவுலகின்
புலரியா ஒளிர்வாயோ
சூழ்ந்திடும் சூழலின்
சூட்சமத்தை அறிந்திடு
வாழ்வு ஒன்றென
வாய்மையுடன் இருந்திடு
வீழ்வதோடு முடிவதல்ல
விருப்பமுடன் எழுந்திரு
வாழ்வதற்கு வழியுமுண்டு
வானமதை பிடித்திடு
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக