புதன், நவம்பர் 9

பரிசோதனைக் கூட எலிகள்


அறுபத்தி நான்கு கூறு
முப்பரிணாம வடிவம்
மூச்சிருக்கும் பையை
முற்றிலும் அறிந்திட
ஆறறிவு மனிதனின்
அறிவியல் கண்டுபிடிப்பு

சமச்சீர் சத்துணவு
சமமாய் அனைவரும்
சாப்பிடாததால்
ஊட்டச் சத்து குறைவுக்கு
சத்துணவு திரவமாய்
அதுவொரு கண்டுபிடிப்பு

நுண்ணுயிர் கிரிமியின்
நூதன நோயால்
நொந்து கொண்டிருக்க
மரபறிந்து மருந்துகள்
மாமனிதன் கண்டுபிடித்தான்

எட்டும் நோயெல்லாம்
எட்டாது வைக்க
எல்லோராலும் இயலையே
துட்டு இருப்பவனக்கு
தூரமாயும்
ஏதுமில்லாதவனக்கு
எமனாயும்

கண்டுபிடிப் பெல்லாம்
காசுள்ளவனுக்கே
காசு பண்ண
களம் வேண்டும்


களப்பணி செய்ய
கயவர்கள் வேண்டும்
கயவர்கள்
நல்லவர்களாக வேண்டும்

ஆரூடன் பார்பவனும்
ஆண்டவனை நம்புவனும்
அடுத்து நம்புவது
மானுடம் காக்கும்
மருத்துவனை

இரண்டு நான்காகும்
நான்கு எட்டாகும் – கணக்கிலே
இன்றே கோடிஸ்வரனாக……..

இளநிலை முடிக்க
இருபது இலட்சம்
முதுநிலை செல்ல
முக்கால் கோடி
முன்பின் பட்டயம் சேர்க்க
பின்னும் சில லட்சம்

அத்தனையும் ஆனபின்பு
அயல்நாட்டு பட்டயம்
அறிவிருக்கு என்பதற்கு
அதுவொரு சான்று

இத்தனையும்
எடுப்பது எப்படி –திரும்ப
எடுப்பது எப்படி
கனவுற்றிருந்தேன்

கதவு தட்டுமோசை
காத்திருந்த நோயாளியோ
அல்ல
காசளப்பதாக வந்தானொருவன்
கடைசியாய்
கமிஷன் தருவதாக சொன்னான்

வழி கிடைத்தது வாழ
வட்டி கிடைத்தது அசலுக்கு
அடுத்தோர் ஓசை
ஆம். நோயாளியேதான்

தலை சுற்றலென்றான்
தடுமாற்றாம் என்றான்
பழக்க வழக்கம்
பரம்பரை தன்மை
பலவும் கேட்டேன்

எதோதோ எழுதினேன்
எனினும் ஒரு
சிடி ஸ்கேன்
எழுதிக் கொடுத்தேன்

அச்சடித்த ஒரு தாளில்
வகைவகையாக
சோதனை முறைகள்
அதிலிருக்கும் விலாசத்தில்
அதனை செய்திட
அறிவுறுத்தினேன்

அப்படியே ஒரு
அறிவிப்பும் செய்தேன்
அவசரமில்லை
பணம் வந்தவுடன்
செஞ்சிட்டு வாங்க
அதுவரை – மருந்து
சாப்பிடுங்கள்

வலியின் தன்மை அறிய
வட்டிக்கு வாங்கியாவது
சிடி ஸ்கேன் எடுத்திடுவான்
பிறகே தூங்கிடுவான்

ஒன்றுமிலை
என்றொரு செய்திக்கு
மூலதனமிட்டவனக்கு
முக்கால் பங்கு

முக்காலுக்கு வழி
சொன்ன எனக்கு
கால் பங்கு –

எனவே நீங்கள்
பரிசோதனை எலியல்ல
படியளக்கும் தெய்வம்


குறிப்பு நேர்மையற்ற மனிதர்களை கண்டதால் இவ் வரிகள், நேர்மையுள்ள மனிதர்களையும் கண்டிருக்கிறேன்.  அவர்கள் மன்னிக்க

1 கருத்து:

SURYAJEEVA சொன்னது…

மருத்துவர் சேதுராமன் இவர்களை பற்றி போஸ்ட் மோர்டேம் என்று புத்தகமே எழுதி உள்ளார்.. விகடன் பிரசுரம் வெளியீடு

அதனால் குறிப்பு அவசியமில்லை என்பது என் எண்ணம்

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...