வெள்ளி, மே 8

அய்யோ...!!! கடவுளே...!!!



காய்ந்த தலையுடன்
காலத்தை ஓட்டும்
கண்ணீர் கலங்களாக
கரைசேரும் புதல்வர்களை

வேய்ந்த கூரையிலிருந்து
வேடிக்கை பார்க்கும்
வேலவனே மாற்றோனே
வேள்வியா பெரிது

தோய்ந்த எண்ணையில்
தேகத்தை வளர்ப்பவனே
தோல்சுருங்கி வாட
தலைவிதியை நிர்ணயித்தவனே

மாய்ந்த இவர்கள்
உனை சேவித்தும்
வினை எனசொல்லி
விளையாடுவது நியாயமோ

முக்கண் நாயகனே
மூவுலகமும் அறிந்தவனே
முலைப்பாலின்றி வதங்கி
மூச்சு விடுவதேனோ?

ஞானசம்பந்தனுக்கு
ஞானப்பால்
நியாயமா தேவி - இத்தளிர்களுக்கு
தாயில்லையோ நீ

குடமுழுக்கென்று
குடம் குடமாய்
கொட்டும் பாலெல்லாம்
குழந்தைக்கு கொடுத்தால்

ஒருவேளை சோற்றுக்கு
ஓடியோடி உழைத்து
சக்கையை ஊண்டு
சாகிறான் மனிதன்

உனக்கோ ஆறுகால உணவு
கணக்கோ கண்பிதுங்கும் அளவு
உலகோ பசியால் பிளவு
உணவோ அங்கு தொலைவு

நெய்யென்றும் பாலென்றும்
பஞ்சாமிருதம் பன்னீரென்றும்
பச்சைக் கல்லில் கொட்டி
பாவத்தை போக்குகிறார்களாம்

பாவம் செய்ய முடியாமல்
பாழும் வயிற்றுகாக அலைகிறேன்
கல்லே எனக்கொரு வரம்கொடு
கல்லாக நான்மாற வேண்டும்

வானமே கூரையாக
வாழ்வை நடத்தும்
வக்கற்ற எங்களை விட்டுவிட்டு
வசதியாய் நீ மட்டும்

வானளாவ வீடுகட்டி
இல்லறம் நடத்தும்
நல்லறம் சொன்னவனே
இதுவா அறம்

அறுபடை வீடு கொண்டவனே
உனக்கோ தெருவுக்குத் தெரு
ஊருக்கு ஊர்
மாட மாளிகைகள்

ஒன்றுக்கு இரண்டென
உல்லாச வாழ்வு நடத்தும்
காம நாயகனே
கற்பு என்றால் என்ன?

கல்லே, தெய்வமே
தூணிலிருப்பவனே
துக்கம் அளிக்கிறாயே
தொலைந்து போயேன்

ஏகாதிபத்தியம் நடத்துபவனே
எச்சரிக்கை விடுக்கிறோம்
வானமே கூரையிருந்தாலும்
வரண்டுவிடாது எங்கள் புரட்சி

பலவுருவம் கொண்டவரே
பலத்தை சற்று காட்டுங்களேன்
பணம் வேண்டுமானாலும் தருகிறேன்
தினம் அருள்புரிய வேண்டுகிறேன்

அய்யோ...... கடவுளே..... கல்லே....
என் கேள்விகளுக்கு பதில்
நீயில்லை என்பதால்
இன்றுவரை கிடைக்கவில்லை

கருத்துகள் இல்லை:

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...