திங்கள், மே 31

கன்னக்குழி அழகி






கன்னக்குழி அழகி
......கரம்பற்ற மகிழ்தேனடி
அன்னநிறத் தழகி
.....ஆசையில் தொட்டேனடி
மின்னும் கண்கள்
......மீறச் சொல்லுதடி
சான்றாய் இச்சொன்று
.......சத்தமின்றிக் கொடடி
தென்றல் வருடியதாய்த்
......தேகம் குறிக்குமடி


நன்னாளின் ஆனந்தம்
......நாற்புறம் பரவட்டும்
பொன்னாள் என்றே
........பொன்னேடு எழுதட்டும்
மேன்மையுற இணைந்த
......மொட்டுக்கள் என்றே
சான்றோர் வாழ்த்தும்
.......சம்சாரக் கடலிலே
இன்பமாய் முத்தெடுக்க
........இட்டமாய் வாயேன்டி

வியாழன், மே 27

வசந்தகால வானம் பாடிகள்

 


இளவேனிற் காலத்தில்
…… இளஞ்சோடிப் பாடித் திரிய
தளர்வற்ற ஊரடங்கில்
…… தத்தளித்தேத் தேடி வாட
இளமை முறுக்கில்
…...இதயம் தேடிச் செல்ல
விளக்கம் கேட்டு
……. வீதியில் காவலர் தடுக்க


ரோசாப்பூ வாசம்
…… ராசாத்தி நினைப்பக் கூட்டுது
நேசத்தின் வேகம்
…… நொடிநேரம் ஒளியாண் டானது
வசந்தத்தை தேடும்
……. வசந்தகால வானம் பாடிகளை
தேசத்தின் பெருந்தொற்று
…… தேவை யின்றி வாட்டுது

அன்பு

 


அன்பென அவளை நெருங்க
…… அத்தான் என்றே மயங்க
அன்னமே அன்பன் நானாக
….. அச்சாரம் கொள்க என்றேன்
ஆனையோ ஆநிறையோ அல்ல
….. அன்பின் கணையாழி கண்ணே
ஆனிப்பொன் அணிகள் வேண்டா
….. அத்தான் அருகிருக்க வேண்டும்


அனுதினம் அந்தாதி பாடும்
…… அபிராமி நானாக வேண்டும்
ஆனந்த நிலையில் அன்பே
……. அனைத்தும் ஒன்றாக வேண்டும்
அன்றில் இவர்கள் என்றே
……. ஆன்றோர் வாழ்த்த வேண்டும்
அந்தம் நீயின்றி வெறுமை
……. ஆயினும் நீவாழ வேண்டும்

புதன், மே 26

காற்று

 



காற்றைத் தென்றலாகப் புயலாகக் 
.....கண்டிருந்த காலச் சூழலிலே 
முற்றத்தின் நிலவொளியில் எம்மை 
......முனைந்துப் பாடிடலாம் என்றதனால் 
கற்றறிந்த தமிழ் துணையிருக்கக் 
......கவிதையில் கேட்டு வைத்தேன் 
இற்றைத் தினத்தில் இறக்குமதி 
......இனத்தில் காற்றிருப்ப தெதனாலே? 

தொற்றால் பற்றாக் குறையா 
......தூய்மை இல்லா முறையா 
வற்றா வளியை வரம்பற்று 
......வஞ்சிக்க வந்த வினையா 
காற்றில் லையென்றுக் கதைப்பர் 
......கற்ற இயற்பியலின் காரணத்தில் 
காற்றில் லையென்றுக் பதறுபவர் 
......கொரானாத் தொற்றின் மரணத்தில் 

வளிநான்கில் குளிர் மேலடுக்கு 
.....வகைமீதிக் காற்றின் கதகதப்பு 
துளிக்காற்றின் விலையை அறிவாய் 
.....தீநுண்மி பரவி யிருக்க 
வளியின் எடையை அறிவாயா 
.....வளர்ந்த விஞ்ஞானம் உதவ 
அளந்தேன் ஐந்தாயி ரதிருநூறு 
......மிலியன் மிலியன் என்றே

எரிக்கும் எண்ணெய் நிலக்கரியால்
.....ஏற்படுவது நைட்ரசன் காற்றாகும்
கரிம வாயுக்கள் நிலைத்திருக்க
.....காடுகள் நிலத்தைப் பாதிக்கும்
கார்பன் எரியா திருக்கக்
.....கார்பன் மோனாக்சைட் உருவாகும்
மருந்தாய் பாலிவினைல் குளோரைட்
.....மானுட உயிரைக் காக்கும்

ஆடிக்காற்றில் காற்றாலை மின்சாரம்
.....ஆனால் தனித்திருக்கும் சம்சாரம்
ஆழிக்காற்றில் கிழத்தியுடன் சஞ்சாரம்
.....ஆனந்த இலக்கியப் பண்பாடும்
கொடியசையக் காற்று வந்ததா
.....காற்றி ருப்பதால் அசையுமே
கொடிகளின் ஒளிச்சேர்கை உயிர்காற்றை
.....கணக்கின்றி உருவாக்கித் தருமே

எலக்ட்ரான் புரோட்டான் நுண்துகள்
....எதிரிடச் சூரியக் காற்றாம்
உலவும் ஓசோன் அகப்புற
.....ஊதாக் கதிரைத் தடுத்திடுமாம்
மழைக்கு ஈரக் காற்றுதென்
......மேற்கில் புறப்பட்டுப் பொழிந்திடும்
கீழடி நாகரிகம் புதையக்
.....காற்றும் புயலுமெனப் புரிந்திடும்


செவ்வாய், மே 25

பொற்காலம்

 

 

குப்தர் சோழர் காலமும்

    குடிகளின் வாழ்வின் முறையும்

ஒப்புவமை இல்லாக் காரணத்தால்

    ஒப்பினர் பெற்காலம் என்றே

அப்பத்தைப் பிட்டு அளித்து

    அன்பைப் போதித் திருந்தாலும்

சப்பாத்தி முள்ளைக் கீரிடமாய்

    சூட்டியதால் புனிதக் காலமானது

 

காமராசர் ஆட்சிப் பொற்காலம்

    கழக ஆட்சி நிகழ்காலம்

கோமளவல் லியாட்சிக் கடந்தகாலம்

    “கார்பரேட்” ஆட்சி இருண்டகாலம்

ஏமாளி மக்கள் எண்ணுவது

     என்று மீளும் பொற்காலம்

சீமான் சீமாட்டி ஆண்டாலும்

    சந்திப்பது என்னவோ கற்காலம்

திங்கள், மே 24

வினை விதைத்தால்

 



குறள் 207

 

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

 

  

பகையுடை வேந்தனுக்கு

  ………  பலவழி  உண்டு மீள்வதற்கு

பகைதனை அஞ்சாது

   ……… பழிபாவச் செயலைச் செய்திட

வகைவகையாய்த் தீவினை

   ……… வழமையாய்த் தொடரும் மானிடனை

மிகையானத் பகையே

   ………  மடியும்வரை தொடர்ந்து அழித்திடும்

 

 

தீயதுச் செய்தவனை

   ……… திரும்பித் தாக்கிக் கொல்லும்

ஆய்ந்தால் அவன்செயல்

   ………. அவனுக்கு என்றே புரியும்

வீயாது என்பது

   ………. வினைக்குத் திணையல்ல என்பதாம்

மாய்க்கும் வரையில்

   ………  மானுடனைத் தொடரும் தீவினையாம்  


ஞாயிறு, மே 23

திருநங்கையர் வாழட்டும்





அர்த்தநாரி ஆண்டவனால்
       ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
       உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
       கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
       புலரியோ ஒன்றுமில்லை


இடப்பக்க உமையவளே
       இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
       மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
       தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
       பலப்படி உயர்ந்திடுவர்


இலக்கின்றிச் சென்றவர்
       இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
       இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
       இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
       நெடும்பயணம் சென்றனர்


பெற்றோர் புறந்தள்ள
       பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
       பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
       அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
       வெஞ்சமரில் வென்றவளே


திருநங்கை வாழட்டும்
       திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
       பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
       உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
       பந்தத்தில் சேர்த்தே


வெள்ளி, மே 21

கொரானா தேவி

     

குற்றுயிராய்க் கொலையுயிராய்
     கொரானாவில் தத்தளிக்க
கற்றறிவு இல்லாத
     கோவைக் குடிசில
தோற்றமுறச் செய்தனராம்
     தேவிக் கொரானாவை
காற்றில் பரவி
     ககனம் நிறைப்பாளோ


நூற்றாண்டு கடந்தும்
     நூல்பலக் கற்றும்
கற்காலக் பிளேக்கை
     கருமாரி விரட்டியதால்
தற்காலத் தற்குறிகள்
     தந்தத் தேவிதான்
முற்றாக ஒழிக்குமோ
     மூச்சைதான் காக்குமா?


இட்டசித்தித் தேவிக்குபின்
     ஈசுவரனும் தோன்றலாம்
தட்டநீட்டிக் காசுபார்க்கும்
     துட்டர்களைக் காணலாம்
மொட்டுவிடும் மூடதனம்
     முளையிலேக் கிள்ளுவோம்
கட்டுப்படும் தடுப்பூசியால்
     கலக்கமின்றி வாழ்வோம்

செவ்வாய், மே 18

என்கண்ணில் இருந்து தப்பாது உலகம்

 


 

என்கண்ணில்  இருந்து  தப்பாது  உலகம்

      ஏமாறப் பிறப்பது எங்கெங்கும் கலகம்

புன்கண் புவனத்தில் ஈராண்டுக் கடந்தும்

    பன்மடங்கு ஆனதே பல்லார் விழுங்குதே

மேனாட்டு அரசு தடுப்பூசியில் தடுக்க

     மேதமைக் கொண்டோர் கோமியத்தை அளிக்க

இந்நாடோ ஓர்ஊசிக்கு பலவிலை நிர்ணயிக்க

      இங்ஙனமே நற்கதியாய் கங்கையில் மிதந்தோம்

    

கைத்தட்டி ஒளியேற்றி விரட்டிட முனைந்தோம்

         கைக்கொட்டி உலகம் சிரித்திடக் கண்டோம்

கொத்துக் கொத்தாய் மடிந்தக் காரணங்கள்

           காற்றை உயிர்காற்றைத் தேடியென அறிந்தோம்   

கற்றுக் கொள்வோம் அவரவரைக் காத்திட

           கட்டுகோப்பும் மூச்சுப் பயிற்சியும் முககவசமும்

இற்றைத் தினத்தில்  இன்றி அமையாததென

           இருக்கும் யாவருக்கும் இனிதாய்ச் சொல்லுவோம்

 

இஞ்சி மஞ்சள்  மிளகு நோயெதிர்ப்பென

           இகலோரும் எடுத்தியம்ப இந்நேரம் கண்டேன்

அஞ்சியரோ  “ஹார்லிக்ஸ்”  “காம்ப்ளான்” பண்டங்கள்

          அந்நோய்க்கு உதவாதென அமைதிக் காத்தனரோ

செஞ்சீனம் தீநுண்மியின் துவக்கம் என்றார்

         செம்மையாய் கையாண்ட அரசு கண்டேன்

அஞ்ஞானங் கொண்ட அந்நாளைய அதிபர்

      அரற்றியப் பலகதைக் கேட்டும் நொந்தேன்

 

 அலட்சியமோ அவசியமோ அவரவர் சுற்றுவது

         ஆயினும் நோயும் வாயும் விரட்டுதே

இலக்கின்றி  இல்லத்தில் அடைப்பட்டுக் கிடந்திட

       ஏற்படும்  மனச்சிக்கலை யார்தான் போக்குவது

கலங்கி நிற்குதே ஒருகூட்டம் பணமின்றி

         கால்தேய நடந்ததே மறுகூட்டம் உறவின்றி

கல்லாது ஒருநிலை தாண்டும் கல்விநிலை

          காலத்தால் வீழ்ந்தோம் கவனிப்பார்  யாருமின்றி

 

 

            

 

திங்கள், மே 17

இயற்கையோடு நீ


 




மண்ணில் விதை முளைக்கும்
மனசில் நீ முளைச்ச
காற்றில் மகரந்தம் பரவும் - நின்
கண்ணில் காதல் பரவும்


மேகமோத் திசை மாறும்
பேதையின் மனம் எனதாகும்
மோகம் கொண்ட மாமனுக்கு - நின்
முகதரிசனமே மருந்தாகும்


மலரும் கொடியும் உயிராகுமே
சிலம்பும் நடையும் உயிரோட்டமே
வளரும் காதலும் இயற்கையாகும் – நின்
வரமே எனது வாழ்வாகுமே


மழையால் மண் செழிக்கும்
மறவன் கண் மயங்கும்
உழைப்பே உயர்வாகும் – நின்
உறவே உன்னதமாகும்

ஞாயிறு, மே 16

என்னாசை மச்சானே….!!

 


என்னைப் பாரும்
     ஏரோட்டும் மச்சானே
புன்னை நிழலில்
     பொழுதுக்கும் பேசலாமா
தென்னை அருகில்
     தெளிந்தச் சுனையில்
மீனாய் நீந்தலாமா
     மன்மதனைக் காணலாமா

அண்டை வெட்டும்
     ஆளா வாரேன்
கெண்டை மீனையும்
     கொண்டு தாரேன்
கண்டாங்கிச் சீலையும்
     கழுத்துத் தாலியும்
கொண்டு வாருமய்யா
     கைத்தலம் பற்றுமய்யா

காட்டைத் திருத்தி
     கருங்குறுவை பயிரிடுவோம்
மாட்டைப் பூட்டி
     மளமளவென நீரைப்போம்
போட்டிக்கு வாருமய்யா
     பொழுதுக்குள் கதிரறுக்க
இட்டம் கொண்டே
     இச்சொன்று தாருமய்யா

வீட்டைப் போல
     வீதியை பாருங்க
ஓட்டைக் குடிசை
     உறவையும் கூப்பிடுங்க
திட்டம் போட்டு
     திரவியம் தேடுவோம்
வாட்டம் இன்றி
     வளமையாய் வாழுவோம்

சனி, மே 15

புதிய கல்வி கொள்கை

 


அறியாததை அறியவும்

     ஆதியைத் தேடி ஓடவும்
அறிந்ததை அகிலத்தில்
     ஆலம் விழுதாய்ப் பரப்பவும்
அறம்தனை வகுத்து
     ஆறறிவு உயிராய் உயரவும்
அறுதியிட்டுக் கூறுவோம்
      ஆகச் சிறந்ததுக் கல்வியென

சுனாமி வந்துச்
      சொத்தைச் சுருட்டி சென்றாலும்
வினாக்களில் விடைதனை
      விரிவாய்த் தேடி படைப்பாய்
கனாக்களில் நிலவை
      காதலியாய்ப் பாடி திரிவாய்
நனவாக்க நாசாவில்
     நிகழ்ச்சி நிரல்தனை வரைவாய்

வள்ளுவன் வகுத்த
      வளமான நீதி நெறிகளை
கள்ளன் வடவன்
      காரியமா மாற்ற முயல்வான்
பொல்லா வேதத்தை
      புதிய கல்வி என்றிடுவான்
கல்வி அழியுமோ
      காப்பாற்றக் கூக்குர லிடுமோ

அழியாதது கல்வி
      ஆயினும் அமைதி காப்பாயா
பழியேதும் அண்டாத
      பொதுவான கல்வி கேட்பாயா
தழலாய்க் குலகல்வி
      தவிர்திடு நினது ஞானத்தால்
விழலாய் ஆகாது
      விதைத்திடுக் கல்வி அழியாது

சனி, மே 8

கண்டாங்கி சீலக்காரி







கண்டாங்கிச் சீலக்காரி
      காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
       திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
       ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
      புதுசுகம் தேடலாமடி


கெண்டைக் காலு
      கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
       தாளம் போடுது
அண்டச் சொல்லுது
       அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
      தாசன் ஆவேன்


வக்கணையா பேசும்
      வேலனே தாசனே
அக்கறையா வாரும்
      அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
      பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
      தாராளமா விளையாடும்


வண்டின் நிலையறிந்து
      வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
     தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
     பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
    ஆயுளை நீட்டிப்போம்


செவ்வாய், மே 4

நந்தவனமோ?

 



சமரசம் உலவுமிடம்
    சச்சரவுகள் தொடருமிடம்
சமயங்கள் பிரிந்தவிடம்
    சாதியும் சம்மணமிடும்
சமமில்லாச் சமுகத்தை
    சாக்காடும் சொல்லுமிடம்
சமர்புரிந்த மானுடம்
    சமரசம் ஆனவிடம்

நெருக்கடி நகரத்தில
    நேரெதிரா நந்தவனம்
நெருடல் ஏதுமில
    நேரடியாச் சொர்க்கமில
ஆறடி நிலமுமில
    அங்கேச் சாம்பலுமில
கூறடிக் கோலமெங்கே
    கூப்பிட்டப் பெயரெங்கே

நல்லதொரு நந்தவனமோ
    நாலுபேருக் கூடுமிடமோ
அல்லல்படு மக்களுக்கு
    அதுவொரு இடுகாடோ
புல்லர் புலையருக்கு
    போகும்வழி இடரிருக்கு
மல்லருக்குக் கடற்கரையில்
    மாடமாளிகைக் கட்டிருக்கு


ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...