ஞாயிறு, பிப்ரவரி 23

முத்தத்தில் முழ்கடிடா













மோகத்தில் திளைப்போமடா
மெய்மறந்து கற்போமடா
ஏகாந்த வேளையில்
ஏழிசைதனை இசைத்திடடா

தாகத்தினைத் தணித்திட
தண்ணிலவா குளிர்ந்திட
யாகத்தினை நடத்திடு
யௌவனம் விழிக்குமடா

சொற்சுவை தன்னில்
சொக்கிட வைத்தவனே
பொற்புடை அரிவையை
போற்றத் தெரியாதோ

காற்றின் மொழிதனில்
காதலை அறியலையோ
பாற்கடல் அமுதத்தை
பரிமாற விரும்பலையோ

சித்தத்தில் நிறைந்தவளை
சிணுங்க வைக்காதே
புத்தனாகிப் புலனொடுக்கிப்
பூவையை வருத்தாதே

பித்தம் தெளிவதற்குள்
பிரபஞ்சம் முடிவதற்குள்
மொத்தத்தில் கைப்பற்றி
முத்தத்தில் முழ்கடிடா


                                 அ. வேல்முருகன்

திங்கள், பிப்ரவரி 17

மும்மொழிக் கல்வி












மும்மொழிக் கல்வி
மூத்தக்குடி தமிழனுக்காம்
முட்டாள்கள்
முகாரி பாடுகிறார்கள்

ஏட்டுக் கல்வி
இந்தி பேசுபவர்களுக்கு
இரண்டா? ஒன்றா?
கேட்பது யார்?

அமெரிக்காவில்
அகன்ற மார்புள்ளவர்களின்
அறிவார்ந்த பதில்களை
அகிலமே வேடிக்கை பார்த்தபின்

கயமையோடு
கல்விக்கு காசு மறுப்பவன்
காட்டுமிராண்டியா
கல்வித் துறைக்கு ............

தேசியக் கல்விக் கொள்கை
தேசிய இனத்தை அழிக்கவா?
தேமதுரத் தமிழை
தேசங் கடத்தவா?

சிங்கப்பூர், மலேசியா
இலங்கை, மொரிசியஸ்
இங்கிலாந்து கனடா - என
சிறக்கும் தமிழை

இங்கிருக்கும் கட்சிகள்
இனவுணர்ச்சியற்று
இராமா இராமா - என
இறைஞ்சுவார்களா?

மொழியொரு கருவியே
எனினும் வழிவழி வந்த
இனத்தின் அடையாளமே
எனவே உரிமையுமானதே

அறிவல்ல
அத்தனை மொழி அறிவது
நெறியல்ல
நெற்றிகண் திறப்பினும்.....

கற்பது நன்றென
கயவர்கள் கதைத்தால்
வீழ்வது தமிமெனில்
வேடிக்கைப் பார்ப்பாயா?

தமிழனாய் இருப்பதனால்
தரணியில் இந்தியனானாய்
இந்தி படிப்பதனால்
இங்குநீ யாராவாய்?

தேவையெனில் - எவரும்
தேர்ச்சியுறுவர்
ஜெர்மன், ஜப்பான்
சீன, கொரிய மொழிதனில்

செயற்கை நுண்ணறிவு
சில நொடிகளில்
பெயர்க்கும் மொழிதனை
சிரமத்திலேன் கற்க வேண்டும்

புரணாங்களையும்
வரலாற்று திரிபுகளையும்
புதிய கல்வி என்றால்
புறம் தள்ளுவோம்

கழுத்தறுத்துக் கொண்டே
காருண்யமிக்கவானாய்
கபடநாடகம் நடத்துவது
காசி தமிழ் சங்கமமன்றோ

நிதி மறுத்து
நிராதரவாய் நிறுத்தினாலும்
நிராகரிப்போம்
மும்மொழித் தாக்குதலை

கூட்டாட்சியில்
கூழைக் கும்பிடுபவனுக்கும்
உரிமைக் குரலெழுப்பவனுக்கும்
நீதி வேறு வேறானால்

ஒன்றியத்தில்
உனக்கென்ன வேலை
உம்மென்று இருப்பாயா?
உலகம் கவனிக்க ஓங்காரமிடுவாயா?

சனி, பிப்ரவரி 15

அழகெனும் மாயை

 












கட்டழகு என்றே
காளைகள் தடுமாற
தொட்டுப் பழகிட
தொலைந்தன மாயை

வெண்ணிலவு அழகென்ற
விளக்கவுரை கற்பனையே
எண்ணங்களில் ஏற்படும்
எழில்யாவும் சொற்சுவையே

நிறத்தில் தேடுவதும்
நிகரென உரைப்தும்
அறமென அறியாது
அழகை ஆராய்வது

மாயப் பிசாசென்று
மாதரை பழித்து
காயம் பொய்யென
கதைத்ததை மாற்றிட

மானமும் அறிவும்
மனிதருக்கு அழகென
ஊனச் சமூகத்தில்
ஊட்டிய பகுத்தறிவால்

விழைவு ஏதென்று
வீதியில் காணீர்
அழகெனும் மாயை
அகன்றது பாரீர்

                                    அ. வேல்முருகன்

வெள்ளி, பிப்ரவரி 14

பிப்ரவரி - 14















ஐம்பதிலும் ஆசை வரும்
அந்நாளில் பாடியதை
அத்தான் "ஐ லவ் யூ" என்றாள்
அத்தியாயம் தொடரட்டுமென்றேன்

பிப்ரவரி - 14
பிரபஞ்சத்தின் பிரமோற்சவமென
பிரகடனப்படுத்த
பிராட்டியின் கோரிக்கை

ஆகட்டும் தேவி
அடியேனின் காதல்
ஆயுள் உள்ளவரை
அர்பணிக்கப் பட்டதென்றேன்

காதல் மட்டுமா
கட்டியவள் கண்நோக்க
கன்னத்தில் முத்தமொன்று
கமுக்கமாய் வைத்தேன்

பற்றாக்குறை கணக்கொன்றை
பட்டியலிட்டாள்
தீர்க்க கூடியதுதான் - ஆயினும்
திருப்தி அடைவாளா?

மணக்கும் மல்லிகை
மன்னவனின் ஆசையென்றாலும்
மந்தைகளின் தேர்வாக
ஒற்றை ரோசா

நிலவரம் தானறிந்து
நிபுணர்கள் பலரிணைந்து
நினைவு பரிசென்று
நிறைத்திருந்தனர் நாளங்காடிதனை

அது இதுவென்று
அத்தனையும் வேண்டுமென்று
அட்டவணை தயாரிக்க
அனாதிகாரணம் அறிவாயா?

பித்தாக நானிருக்க
புதிராக அவளிருக்க
முத்தாய்ப்பா வர்த்தகம்
முன்னேற்றம் காணுது

ஓவ்வொரு நாளும்
ஒன்றாய் அமர்ந்து
ஓராயிரம் கதை பேசி
ஒட்டி உறவாடுதன்றோ காதல்

இன்றினிய நாள் மட்டும்
இலக்கணப் போலியாய்
ஏனிந்த ஏற்பாடு
ஏக்கத்துடன் வாழவா

காசிருக்கோ இல்லையோ
கண்மணி - நின்
கண்ணசைவில் பிறக்கும்
காதல் தினம் தினமே

                                அ. வேல்முருகன்

வியாழன், பிப்ரவரி 6

ஊழ்துணை










வாட்டி வதைக்கும்
வஞ்சிக் கொடியே
ஆட்டிப் படைக்க
அஞ்சி இருப்பேனோ
ஈட்டிச் சொற்கள்
ஈர்க்கம் பாகிட
நீட்டிக்குமோ உறவு
நீயே கூறடி

பாட்டின் இராகம்
பாடுபவர் அறிவர்
ஏட்டின் கருத்தை
எவரும் தெளிவர்
ஊற்றின் கண்ணில்
ஊசியை நுழைக்காதே
கூட்டின் இனிமையை
கூத்தாடி உடைக்காதே

ஊழ்துணை நீயென
உலகம் அறியும்தானே
வாழ்வின் சுவையை
வர்த்தகமா பார்க்காதே
தோழனின் துணையை
தொடுதலோடு இணைக்காதே
சூழல் எதுவாகினும்
சூன்யத்தை நாடாதே


அ. வேல்முருகன்

காரணங்கள்
















காதல் வேண்டி
கட்டியவளிடம் கோரிக்கை
காதில் வாங்கவில்லை

ஆண்டு முழுதும்
ஆண்டனுபவிக்க
அருள் கேட்க

பட்டத்தரசி
பட்டியலிட்ட காரணங்கள்
பட்டினிக்கே வழி வகுக்க

எட்டூர் பஞ்சாயத்தார்
ஏதேனும் தீர்த்திருந்தால்
எடுத்தியம்ப சரிசெய்யலாம்

ஆடிக்கொன்று
அம்மாவாசைக் கொன்றென
ஆபத் பாந்தனவள்தான்

ஆயினும் பால்நிலவு
ஆசையை தூண்டுவதால்
ஆறுகால பூஜையை வேண்டினேன்

அவளோ, ஆசைக்கு
அளவு வைத்து
ஆட்டிப் படைக்கிறாள்

வேண்டாம் என்று
வேடிக்கைக்காக அல்ல
வேண்டுமென்றே உரைக்கிறாள்

அயர்வாக இருக்கிறதென
அந்தபுரத்திற்கு
அனுமதி மறுக்கிறாள்

ஊதக் காற்று வீசுகையில்
உறக்கம் வருகிறதென
உருட்டுகிறாள்

ஆலாபிக்க ஆரம்பித்தேன்
அர்த்த சாமமாகி விட்டதென
ஆட்சேபிக்கிறாள்

அமுதகானம் பாடி
ஆலிங்கனம் செய்ய
ஆர்வமில்லை என்கிறாள்

எப்போது பார்த்தாலும்
இதே ஞாபகமாக
எட்டி நில்லென எச்சரிக்கிறாள்

வெண்சாமரம் வீசி
விண்ணப்ப மெழுதினேன்
வெக்கையா இருக்கென வெகுள்கிறாள்

என்ன அவசரம்
இவ்வளவு சீக்கிரம்
இம்சை ஆரம்பம் என்கிறாள்

இன்பம் துய்க்க
இத்தனை தடைகளை
எங்ஙனம் தகர்ப்பது

ஒன்றா, இரண்டா
உண்மைதானென உணர்ந்து
ஒதுங்கிச் செல்ல

அடுக்கும் காரணங்களுக்கு
ஆம் என்றிருந்தால்
அடங்கி போவதாகாதா

ஆயினும், அன்பு கிடைக்குமெனும்
அந்த நம்பிக்கையில்தான்
அகிலம் இயங்குது

சனி, பிப்ரவரி 1

தடுதாட்கொள் புராணம்







 

தனித்தீவா நானிருந்தேன்
தடுத்தாட் கொள்ளவந்தாய்
இனியென்ன என்றபோது
இதயமதை தந்தாய்
பனிபடர்ந்த பொழுதிலும்
பாற்கடல் அமுதளித்தாய்
எனினும் ஏனின்று
ஏசிச் செல்லுகிறாய்

அன்பிலே விளைந்ததை
அறிவினால் ஆய்திடாதே
துன்பத்திலே வீழ்வதற்கு
தூபத்தை போடாதே
இன்னலில் விடுபட
இசைவோடு வாழ்ந்திட
கன்னலே கனிவோடு
கண்ணாளனை காத்திடு
 
ஆழிப் பேரலையாய் நீவந்தாய்
ஆடிய தாண்டவ தானறிந்தேன்
ஆழி விரலிட்ட கணையாழியை
ஆலகால மென்றே வீசுகிறாய்
நாழிகை நாளென்ன தேவி
நற்றுணை நானுனக்கு வாராய்
வாழிய தலைவி என்றே
வையம் வாழ்த்திட வாழ்ந்திடவே


                                      அ. வேல்முருகன்


தானமும் தர்மமும்

  ஏற்றத் தாழ்வுகள் ஈகைக்கு காரணமா மாற்றும் நிகழ்வுகள் மாயத்தில் நடக்குமா உயர்வும் தாழ்வும் உழைப்பில் என்றால் வியர்வை சிந்தியும் விடியல் இல்ல...