வியாழன், பிப்ரவரி 6

காரணங்கள்
















காதல் வேண்டி
கட்டியவளிடம் கோரிக்கை
காதில் வாங்கவில்லை

ஆண்டு முழுதும்
ஆண்டனுபவிக்க
அருள் கேட்க

பட்டத்தரசி
பட்டியலிட்ட காரணங்கள்
பட்டினிக்கே வழி வகுக்க

எட்டூர் பஞ்சாயத்தார்
ஏதேனும் தீர்த்திருந்தால்
எடுத்தியம்ப சரிசெய்யலாம்

ஆடிக்கொன்று
அம்மாவாசைக் கொன்றென
ஆபத் பாந்தனவள்தான்

ஆயினும் பால்நிலவு
ஆசையை தூண்டுவதால்
ஆறுகால பூஜையை வேண்டினேன்

அவளோ, ஆசைக்கு
அளவு வைத்து
ஆட்டிப் படைக்கிறாள்

வேண்டாம் என்று
வேடிக்கைக்காக அல்ல
வேண்டுமென்றே உரைக்கிறாள்

அயர்வாக இருக்கிறதென
அந்தபுரத்திற்கு
அனுமதி மறுக்கிறாள்

ஊதக் காற்று வீசுகையில்
உறக்கம் வருகிறதென
உருட்டுகிறாள்

ஆலாபிக்க ஆரம்பித்தேன்
அர்த்த சாமமாகி விட்டதென
ஆட்சேபிக்கிறாள்

அமுதகானம் பாடி
ஆலிங்கனம் செய்ய
ஆர்வமில்லை என்கிறாள்

எப்போது பார்த்தாலும்
இதே ஞாபகமாக
எட்டி நில்லென எச்சரிக்கிறாள்

வெண்சாமரம் வீசி
விண்ணப்ப மெழுதினேன்
வெக்கையா இருக்கென வெகுள்கிறாள்

என்ன அவசரம்
இவ்வளவு சீக்கிரம்
இம்சை ஆரம்பம் என்கிறாள்

இன்பம் துய்க்க
இத்தனை தடைகளை
எங்ஙனம் தகர்ப்பது

ஒன்றா, இரண்டா
உண்மைதானென உணர்ந்து
ஒதுங்கிச் செல்ல

அடுக்கும் காரணங்களுக்கு
ஆம் என்றிருந்தால்
அடங்கி போவதாகாதா

ஆயினும், அன்பு கிடைக்குமெனும்
அந்த நம்பிக்கையில்தான்
அகிலம் இயங்குது

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...