வெள்ளி, பிப்ரவரி 14

பிப்ரவரி - 14















ஐம்பதிலும் ஆசை வரும்
அந்நாளில் பாடியதை
அத்தான் "ஐ லவ் யூ" என்றாள்
அத்தியாயம் தொடரட்டுமென்றேன்

பிப்ரவரி - 14
பிரபஞ்சத்தின் பிரமோற்சவமென
பிரகடனப்படுத்த
பிராட்டியின் கோரிக்கை

ஆகட்டும் தேவி
அடியேனின் காதல்
ஆயுள் உள்ளவரை
அர்பணிக்கப் பட்டதென்றேன்

காதல் மட்டுமா
கட்டியவள் கண்நோக்க
கன்னத்தில் முத்தமொன்று
கமுக்கமாய் வைத்தேன்

பற்றாக்குறை கணக்கொன்றை
பட்டியலிட்டாள்
தீர்க்க கூடியதுதான் - ஆயினும்
திருப்தி அடைவாளா?

மணக்கும் மல்லிகை
மன்னவனின் ஆசையென்றாலும்
மந்தைகளின் தேர்வாக
ஒற்றை ரோசா

நிலவரம் தானறிந்து
நிபுணர்கள் பலரிணைந்து
நினைவு பரிசென்று
நிறைத்திருந்தனர் நாளங்காடிதனை

அது இதுவென்று
அத்தனையும் வேண்டுமென்று
அட்டவணை தயாரிக்க
அனாதிகாரணம் அறிவாயா?

பித்தாக நானிருக்க
புதிராக அவளிருக்க
முத்தாய்ப்பா வர்த்தகம்
முன்னேற்றம் காணுது

ஓவ்வொரு நாளும்
ஒன்றாய் அமர்ந்து
ஓராயிரம் கதை பேசி
ஒட்டி உறவாடுதன்றோ காதல்

இன்றினிய நாள் மட்டும்
இலக்கணப் போலியாய்
ஏனிந்த ஏற்பாடு
ஏக்கத்துடன் வாழவா

காசிருக்கோ இல்லையோ
கண்மணி - நின்
கண்ணசைவில் பிறக்கும்
காதல் தினம் தினமே

                                அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...