மூத்தக்குடி தமிழனுக்காம்
முட்டாள்கள்
முகாரி பாடுகிறார்கள்
ஏட்டுக் கல்வி
இந்தி பேசுபவர்களுக்கு
இரண்டா? ஒன்றா?
கேட்பது யார்?
அமெரிக்காவில்
அகன்ற மார்புள்ளவர்களின்
அறிவார்ந்த பதில்களை
அகிலமே வேடிக்கை பார்த்தபின்
கயமையோடு
கல்விக்கு காசு மறுப்பவன்
காட்டுமிராண்டியா
கல்வித் துறைக்கு ............
தேசியக் கல்விக் கொள்கை
தேசிய இனத்தை அழிக்கவா?
தேமதுரத் தமிழை
தேசங் கடத்தவா?
சிங்கப்பூர், மலேசியா
இலங்கை, மொரிசியஸ்
இங்கிலாந்து கனடா - என
சிறக்கும் தமிழை
இங்கிருக்கும் கட்சிகள்
இனவுணர்ச்சியற்று
இராமா இராமா - என
இறைஞ்சுவார்களா?
மொழியொரு கருவியே
எனினும் வழிவழி வந்த
இனத்தின் அடையாளமே
எனவே உரிமையுமானதே
அறிவல்ல
அத்தனை மொழி அறிவது
நெறியல்ல
நெற்றிகண் திறப்பினும்.....
கற்பது நன்றென
கயவர்கள் கதைத்தால்
வீழ்வது தமிமெனில்
வேடிக்கைப் பார்ப்பாயா?
தமிழனாய் இருப்பதனால்
தரணியில் இந்தியனானாய்
இந்தி படிப்பதனால்
இங்குநீ யாராவாய்?
தேவையெனில் - எவரும்
தேர்ச்சியுறுவர்
ஜெர்மன், ஜப்பான்
சீன, கொரிய மொழிதனில்
செயற்கை நுண்ணறிவு
சில நொடிகளில்
பெயர்க்கும் மொழிதனை
சிரமத்திலேன் கற்க வேண்டும்
புரணாங்களையும்
வரலாற்று திரிபுகளையும்
புதிய கல்வி என்றால்
புறம் தள்ளுவோம்
கழுத்தறுத்துக் கொண்டே
காருண்யமிக்கவானாய்
கபடநாடகம் நடத்துவது
காசி தமிழ் சங்கமமன்றோ
நிதி மறுத்து
நிராதரவாய் நிறுத்தினாலும்
நிராகரிப்போம்
மும்மொழித் தாக்குதலை
கூட்டாட்சியில்
கூழைக் கும்பிடுபவனுக்கும்
உரிமைக் குரலெழுப்பவனுக்கும்
நீதி வேறு வேறானால்
ஒன்றியத்தில்
உனக்கென்ன வேலை
உம்மென்று இருப்பாயா?
உலகம் கவனிக்க ஓங்காரமிடுவாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக