வியாழன், மார்ச் 4

சோதிடம்

நாளை என்பது
நம்பிக்கை
நடக்கலாம் என்பது
எதிர்பார்ப்பு
எதற்கதற்கு
நாடவேண்டும்
நாடி சோதிடம்

என்னவாக இருந்தோமென
எல்லோரும் அறிவதால்
என்னவாக வேண்டும்
எனஅறிய ஆசை

பிரச்சனைகளாலும்
பின்னடைவுகளாலும்
பிரம்மித்தால்
எதிர்கொள்வதெப்படி

பிறந்த நேரமும்
பிரம்மன் எழுதியதும்
பிறழாது என
பேதலிப்பதோ புத்தி

பிறழும்
அதனை அணுகி
அடிபணிய வைப்பதே
மானுட சக்தி

வாய்ப்புகள் இருப்பதாக
வாய்மொழியாய் கூறியது
வேத வாக்கென்று
வாளாயிருந்தால்
வாய்க்குமோ – பதவி

உய்யவும் துய்யவும்
உழைப்பும் முயற்சியும்
உண்மையில் முக்கியம்
உதவுமோ கைரேகை சோதிடம்

இருக்கும் நிலையறிந்து
இன்னும் உழைத்தால்
இமயமாகலாம்

நம்பிக்கை இழந்து
நாடி சோதிடம் பார்த்தால்
நடுத்தெருவிலும் நிற்கலாம்

ஆக செயலில்தான்
ஏற்றமும் இறக்கமும்
இடையில்
எதற்கு சோதிடம்

கையில் பணமிருந்தால்
சுக்கிர திசை
கோர்ட்டில் ஜாமீனிலிருந்தால்
ஏழரை நாட்டு சனி

ராகும் கேதும்
ரணமல்ல
சுக்கிரனும், சந்திரனும்
சந்தோஷமல்ல
அவ்வாறு நினைக்கும்
மனமும் நம்பிக்கையும்

செவ்வாயும் புதனும்
சோதிடமல்ல – விஞ்ஞானம்
சோதிக்க வேண்டுமானால்
சிந்திக்கும் உறுப்பை செயல்படுத்து

சோதிடத்தில் இவை
உனக்கு ஏழாமிடம்
எனக்கு எட்டாமிடம்
எதனால் வருகிறது

வகுத்த மனமே
வலையில் சிக்கியது
பகுக்கும் ஞானமிருந்தும்
பகற்கனவு காணுது

கிரகப் பெயர்ச்சியில்
கிரகச்சாரம் கணிப்பதாக
கிராதக சோதிடனுரைப்பதை
கிஞ்சித்து நம்பாதே

எதிர்காலம்
எடுத்தியம்பும் இவர்களால்
இறந்தகாலத்தை
இருந்தபடி உரைப்பார்களா

ஏனெனில்…………
இறந்தகாலம்
ஒரு காலத்தில்
எதிர்காலமாய் இருந்ததுதானே

அறுதியிட்டு கூறாமல்
ஆகலாம் என
இயம்பும் இவர்கள்
ஈவிரக்க மில்லாதவர்கள்
உண்டி கொழுக்க
ஊருக்கு பொயுரைப்பர்
எதிர் காலமாததால்
ஏமாறுவது பலர்

நிகழ்தகவு – இரண்டு
நிஜம்தானே
நடக்கும் – நடக்காது
இதற்கெதற்கு
சோதிடம்

செயலின் முடிவு
எப்படியுமிருக்கலாம்
செய்வதை பொருத்தே
செயம் ஆகிறது

ஆகவே
செயத்திற்கான வழியை
சிந்திப்போம்
சிந்திப்பதை துண்டிக்கும்
சோதிடத்தை நிந்திப்போம்

கருத்துகள் இல்லை:

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...