வெள்ளி, டிசம்பர் 5

பாரத் மாதா கீ ஜெய்

 


 










சிக்கந்தர் தர்கா தூணில்
சிவனின் மகனுக்குத் தீபம்
சி.ஐ.எஸ்.எப் சகிதம்
சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி

உளரல்கள் சட்டமாக
ஊர் வேடிக்கை பார்க்க
உடைந்தன மண்டைகள்
உதவாக்கரை மன்றங்களால்

கலவரத்தை தூண்டுவது
கயவாளிகள் என்றிருக்க
காவிகளுக்கு கட்டளையிடுவது
கருப்பு அங்கிகளா

சட்டங்கள் வளைவதால்
சாக்கடைகளின் நாற்றத்தை
சுத்திகரிக்க வேண்டியது
சமூகம்தான் சர்க்காரல்ல

பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரித்தானிய அடிவருடிகள்
பி.என்.எஸ் ஏவினாலும்
பின்வாங்காதே சமூகமே

அரசியல் சாசன பதவியில்
ஆடும் ஆட்டத்தை
ஆண்டவன் அறியாததால்
ஆரியம் வாழ்ந்திடுமோ

பொய்பொய்யா கதைகளை
பொதுவெளியில் கதைத்தாலும்
பொறிதனில் சிக்கி
பொய்மானின் பின் செல்லாதே

இராமனல்ல ஏமாற
சேவற்கொடிச் சேயோனின்
செந்தமிழ் உறவல்லவா
செகத்தினைக் காத்திடு

அ. வேல்முருகன்

சொக்கப்பனை









குன்றிருக்கு மிடமெல்லாம்
குமரனைத் தேடாத சுவாமி
குத்துக்கல்லின் தீபமேற்ற
குபீரென வருவானா

மச்சு பிச்சுவில்
மூச்சு வாங்குவதால்
முருகன் முடங்கினானா
திருப்பரங்குன்றத்தில்

ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில்
அரோகரா ஒலிக்க
இமயமலையில் எதிரொலித்திட
மதுரையம்பதியில் உத்திரவுகளா

விந்திய சாத்பூர மலைகளில்
விடிய விடிய தேடினாலும்
கார்த்திகேயேன்
கண்ணில் தெரிய மாட்டானா

ஏற்காடு, ஏலகிரியில்
எதிர்பட மாட்டாரா
ஏரவாடா சிறையில்
எவரேனும் அடைத்தார்களா

வயநாட்டில்
வாழாத தெய்வத்தை
மேகமலையில் தேடிட
தரிசனம் தருவானோ

சோதியா சொரூபமா தெரிவது
அப்பனா முருகனா
சாதி இந்து
சாமிநாத கூரய்யா

சொக்கப்பனைக் கொளுத்தி
சொக்கனை சோதியாய்
சோதித்த மக்கள்
மலையேறுவதில்லை

அக்கப்போர் அரஜாகம்
அதுவே தாரகமென
அயோதியாய் மாற்றிட
அணி திரண்டாலும்

ஆடு வெட்டத் தடையென்றால்
ஆர்பரித்தும்
கேடு கெட்டர்வர்கள் தீபமேற்ற
கோபத்தோடே எதிர்த்திடும் தமிழகம்

அ. வேல்முருகன்

செவ்வாய், டிசம்பர் 2

சிறப்பு தீவிர திருத்தம் (S I R)

 














ஓட்டுப் போட்டு ஆவதென்ன
ஒட்டுறவு இந்நாட்டில் என்பதுவோ
நாட்டில் தேர்தல் நடப்பது
நயவஞ்சக அரசியலின் நாடகமோ
காட்டாட்சிக் கட்சிகளின் கரங்களை
கடவுளும் கண்மூடி ஆதரிக்குமோ
கூட்டாட்சி தத்துவங்கள் மடியுமோ
கூழைக் கும்பிடே ஜனநாயகமோ

நோய்வாய் பட்ட குடியரசியல்
நோட்டாவால் நிலமை மாறுமா
மாய்ந்து மாய்ந்து போட்டவோட்டு
மக்களாட்சியை கொண்டு வருமா
வாய்ப்பு மொன்றும் இல்லை
வாக்குத் திருட்டை தடுப்பதற்கே
ஆய்ந்து பாருங்கள் மக்களே
ஆட்சி ஆதிகாரம் அதானிக்கே

குடிமகனென குறிப்பெடுத்து போடுமோட்டு
குறியிடும் மையோடு மறையுமோ
அடிப்படை உரிமையென அணிமாறும்
அவ்வுறுப்பினன் பதவிதனைப் பறித்தால்
துடிப்பாகுமோ ஜனநாயகம் - நாட்டில்
துவண்ட வளர்ச்சிகள் மலருமோ
கடினமென கண்காணாப் போனாலும்
கண்முன்னே புல்டோசர் வருமோ

ஓட்டைச் செலுத்தி உரிமையை
உலகிற்கு உணர்த்திய உத்தமர்களே
கட்சிகளை உடைத்து கணக்கை
கூட்டும் வித்தையில் உன்கடமை
வேட்டைக்குத் தகுந்த அணிகளில்
வெள்ளாட்டில் கறுப்பாட்டைத் தேடுவதா
கூட்டணியில் கொள்கை என்பது
கோட்டையில் கொள்ளை அடிக்கதானே

சாமியும் கோமியமும் சக்திமிக்க
சர்க்காரை அமைக்க உதவினாலும்
பூமியில் இவர்களாட்சி மலாந்திட
பூக்குழியில் இறங்கும் ஆணையர்கள்
தாமிரப் பட்டயத்தில் ஆளுநராய்
தமிழகத்தை ஆட்சிபுரியும் பேறுபெற
யாமிங்கு அளித்த ஓட்டு
யமனாய் ஏமக்கு வந்ததிங்கே


அ. வேல்முருகன்

ஜனநாயகத் தூண்கள்

 













நீதிகள் விற்கப்பட
நீங்கள் ஏற்பீரோ
சேதிகள் திரிக்கப்பட
சோர்ந்து இருப்பீரோ
பிரதிநிதிகள் விலைபோக
பேச்சற்றுப் போவீரோ
அரசமைப்பு நிறுவனங்கள்
அடிமையாக ஆமோதிப்பீரோ

தூண்கள் நான்கும்
தூக்கில் தொங்கட்டும்
மாண்புகள் மறைந்து
மானம் போகட்டும்
வீணென்று நினையாது
வினாக்காள் பிறக்கட்டும்
கூட்டோடு மாற்றிட
கூக்குரல் எழுப்புங்கள்


அ. வேல்முருகன்

ஞாயிறு, நவம்பர் 30

காதலின் இராகங்கள்














வேண்டாம் என்பது
வேதவாக் கல்ல
வேள்வியைத் தொடர
வேண்டுகோள் என்றே

மோகன இராகத்தில்
மௌனமாய் சுரங்களை
ஆனந்த பைரவியாக்கி
ஆவலைத் தூண்டினேன்

ஏகாந்த வேளையில்
எதிரிசையின் எதிரொலியில்
எதிர்பார்ப்பின் இராகங்கள்
எதுவென அறிகிறேன்

சேர்ந்திசையில் ஓத்திசைவு
சேட்டைகள் சங்கதிகள்
சிறுசிறு அலங்காரங்கள்
சிறப்பென அளிக்கிறேன்

அரோகணம் அவரோகணம்
அத்தனையும சஞ்சரித்து
அப்பாடா என்றே
ஆனந்தத்தில் திளைத்திருக்க

மோகனத்தில் முகிழ்ந்திருந்தவள்
விழித்தெழுந்து வேண்டுகிறாள்
கிழக்கு வெளுக்கும்வரை
கீர்த்தனைகள் பாடிட

மனநிலை அறிந்து
மச்சங்கள் ஆய்ந்து
சுரங்களின் சுரங்கங்களை
சுருதியில் தேடிட

கல்யாணி இராகத்தில்
கரகரப் பிரியாவை
கலந்து இசைத்திட
கண்ணாட்டி கண்ணயர்ந்தாள்

இந்நாட்டில் ஏதுவேண்டும்
என்னவள் எனைத்தூண்டி
ஏதோதோ இராகத்தை
எனையறிய வைத்தாளே….!!!!


அ. வேல்முருகன்  



சனி, நவம்பர் 15

ஆனந்த முத்தம்














அதிர்வில்லா முத்தத்தில்
ஆனந்தம் ஏதடி
எதிர்பாரா வேளையில்
எத்தனைச் சுகமடி
உதிரம் கொதிக்க
உதடுகள் துடிக்க
கதிகலங்கும் முத்தத்தை
கண்ணே வழங்கடி

வழங்கிட பெறுவது
வாடிக்கை என்றிருக்க
வழக்கொன்று தொடுத்து
வாய்தா கேட்பது
அழகல்ல என்றே
ஆட்சேபனை செய்கிறேன்
இழப்பெனக்கு என்பதால்
இழப்பீடும் கேட்கிறேன்

கோரிக்கை என்றாலும்
கொடுப்பது கடமையடி
ஓரிடம் உதடென்றால்
ஒவ்வொரு அங்கமும்
போரிடும் நிலையாகுது
பொழுதை கழிக்காதே
பீறிடும் ஆசைகளை
பிறைபோல மறைக்காதே

மறைத்திட மறுத்திட
மனமது மருகுது
திறைச்செலுத்த தினம்தினம்
தித்தித்து திகட்டுது
முறையான முத்தத்தில்
மூழ்கிட மூலதனமாகுது
நிறைவென நின்முத்தம்
நினைவில் நிலைக்குது

அ. வேல்முருகன்

இல்லாள் மகிழ.....




கட்டியவளைக்
கட்டியணைத்து
கன்னத்தில் முத்தமிட்டு
காதலடி எனச் சொல்

கவளச் சோறெடுத்து
காயும் நிலவொளியில்
காதலாய் ஊட்டிவிட
அறிவாய் அரிவையின் பார்வை

புன்னை வனத்தில்
புன் சிரிப்புடன்
புதுபுது கதைகளை பேசு
புகலிடமாவாள் உன்னிடம்

கீச்சு கீச்சென்று பேசுவதை
கீரவாணி என்று சொல்
கிச்சு கிச்சு மூட்டுவதை
கிழப் பருவத்திலும் தொடர்

தங்கமே என
தாங்கிப் பிடி
தத்தையெனக் கொஞ்சு
தாரளமாய் அணைத்துக் கொள்

கவிதை வாராதென்றால்
கடிதம் எழுது
காதல் ரசம் சொட்ட சொட்ட
கண்டிப்பாய் கவனிக்கப்படுவாய்

அங்காடிக்கு அழைத்துச்செல்,
ஆச்சரியப் படுத்த
அவள் விரும்பிய
ஆபரணத்தை வாங்கு

அவள் அழுகையை
அலட்சியப்படுத்தாது
அவளோடு சேர்ந்தழுது
ஆதரவாய் இரு

ஒற்றை ரோசாவோ
உனக்குப் பிடித்த ஜாதிமல்லியோ
ஒரு முழமாவது வாங்கி
உன் கையால் சூட்டிடு

ஏழேழு பிறவியும்
என்னிணை நீயேதானென
எண்ணிலடங்கா காரணங்களை
எடுத்துச் சொல்

வடதுருவமோ
தென்துருவமோ
எங்கு வேண்டுமானாலும் செல்
எனினும் திரும்பிவா அவளுக்காக

இத்தனைக்குப் பிறகும்
ஏதோதோ குறைகளை
எண்ணி காண்பிப்பாள்
எனினும் புன்னகையோடிரு

அ. வேல்முருகன்


வெள்ளி, நவம்பர் 7

குறுநகை புரிந்திடு




 











நீ என்னை சந்திக்கும் போதெல்லாம்
இறகுகள் முளைத்து பறக்கிறேன்
உன்னருகாமையில் - நான்
உயிரோடிருப்பதை உணர்கிறேன்

என்றென்றும் எனதானவன் நீ
எனது பகலும் எனது இரவும்
எனது நிழலும் எனது இசையும்
எல்லாமே நீயானதால்

சொல்லிலும் செயலிலும்
சொல்லாத காதலை
என்னில் இருப்பதை
எப்படி அறிய வைப்பேனடா

கோடையில்
கொட்டித் தீர்த்த மழைக்குப் பின்
வானமேடையை அலங்கரிக்கும்
வானவில்லாய்

உன்விழிப் பார்வை
உருவாக்கும் அற்புதங்கள்
என்னில் ஏற்படுத்திய
அதிர்வுகளால் மீளாதிருக்கிறேன்

மனதை நோகடிக்கும் -உன்
மௌனம் கனமானது
குறுநகை புரிந்திரு
குதுகலமாய் நானிருப்பேன்

அ. வேல்முருகன்

வியாழன், அக்டோபர் 9

H1B










H₂O
HbA1c
இதுபோல
H1B இருக்குமோ

கடவுச் சீட்டு அல்லாது
கனவு தேசத்தில் நுழைய
அடிமை ..... அல்ல அல்ல
அனுமதிச் சீட்டாம்

அறிவாளிகளுக்கென
அந்நாளில் வடிவமைத்ததை
அடிமைகளுக்காகவென
மாற்றியமைத்தவர்கள் யார்?

டி. சி. எஸ்., எச். சி. எல்,
இன்போசிஸ், விப்ரோ
இன்னும் சில
மென்பொருள் விற்பன்னர்கள்

2000-3000 டாலருக்கு
சல்லிசாக கிடைக்கும்
சரக்கை வேண்டாமென
ட்ரெம்ப் உரைப்பதேன்

வளரும் இந்தியாவின்
வனப்பைக் குறைக்கவா
வாழும் அமெரிக்கனின்
வாழ்வைச் சிறப்பிக்கவா

ஒராண்டு உழைப்பை
60000-80000 டாலருக்கு
இறக்குமதி செய்ய - கூடுதலாக
90000 டாலரென்றால்

"குய்யோ முய்யோ" வென
கூவாது
"கப்சிப்" என்றிருப்பது
"கார்ப்ரேட் தந்திரமோ"

வந்தேறிகளின் தேசத்தில்
வாழ்வில்லை என்பதால்
வயிறெறிந்தவர்கள்
இருக்கதான் செய்தனர்

அமெரிக்காவை வளப்படுத்தவா
அவதார மெடுத்தாய்
அரிகரன் இல்லையென்றாலும்
அவனவன் தேசம் வளரும்தானே

 

அ. வேல்முருகன்

வியாழன், செப்டம்பர் 25

அறிவேணி ஆசிரியர்

















அறிவேணி ஆசிரியர்
அகரத்தில் ஆரம்பித்து
அறிவியல் ஆயிரம்
அதனுடன் அறநெறி
சிறியோர் நெஞ்சில்
சிறப்புடன் பதித்திட
செறிவுற்ற மாணவனாய்
செயலாற்ற மகிழ்வாரே

கற்போர் யாவரிடமும்
கனவுகளை விதைத்து
பிற்போக்கு எண்ணங்களை
பிழையெனச் சுட்டி
நிற்காதப் பயணத்தில்
நின்நிலை யுணர்த்தி
உற்சாக மளித்திடும்
உறவுதானே ஆசிரியர்

தக்கதொருக் கல்வியை
தாராது தடுத்தே
திக்கற்ற சமுகமா
திருமாலும் வைத்திருக்க
ஏக்கமுற்ற ஏழை
எளியோரின் கல்வியை
சக்தியால் சாதித்தது
சாவித்திரிபாய் பூலேவே

. வேல்முருகன்


ஞாயிறு, செப்டம்பர் 14

நேபாளம்

 









இப்படியெல்லாம்
இந்தியாவின் அண்டை நாட்டில்
இருப்பார்களா மக்கள்

இலங்கை, பாக்கிஸ்தான்
வங்கதேசம் என்றிருந்தது
நேபாளம் வரை வந்து விட்டது

மாடமாளிகைகள்
மந்திரிகளின் வாரிசுகளின்
மகோன்னத வாழ்வு

எளிய மக்களிடம்
ஏன் தீப்பற்ற வைத்தது
சமூக ஊடகங்களை தடுத்ததாலா

அடுத்தாத்து
அடுப்பங்கரையில்
ஏதேனும் புகை…………

மணிப்பூரில்
மாதக்கணக்கில் புகைந்திருக்க
மானுடம் மயங்கிதான் கிடந்தது

அத்தனை அமைப்புகளும்
அடிபணிந்து கிடக்கும் போது
புகையாவது? புடலங்காயாவது?

மக்கள் எழுச்சி
மகுடம் தரித்தவர்களை
மட்டுமா மாற்றும்

மாற்றுச் சிந்தாந்தம்
மக்கள் ஒவ்வொருவரையும்
வாழ்விக்க வாராதோ?

அ. வேல்முருகன்

வெள்ளி, செப்டம்பர் 5

ஓணம்

















ஆயிரமாண்டுகள் கடந்தும்
அத்தப்பூக் கோலமிட்டு
அறுசுவை உணவு படைத்து
அம்மாமன்னனை வரவேற்கின்றனர்

அண்டச் சாரச்சரமும்
அவன் காலடியில் என்றிருக்க
அவனோ மூன்றடி மண்ணிற்கு
அவதாரம் எடுத்தானாம்

மேகக் கூட்டத்திலும்
மாமன்னன் தலையிலும்
மண்தேடிய கதையா?
மக்கள் தலைவனை கொன்ற புனைவா?

பாதாளம் சென்றவன்
பணிந்து கேட்டதனால் விழாவா
பரிதவித்த மக்கள்
பரிவட்டம் கட்டியதாலா

இராவணன், பத்மாசுரன்
நரகாசுரனை அழிக்க
நடமாட விட்ட
நயவஞ்சக கதைகள்

பேரரசனின் பேரன்பில்
பெயர்ந்து போனதால்
மகா பலி என்றானதோ
மாமன்னன் வருவானோ

காலமெல்லாம் நினைவில்
மகாபலியை கொண்டதனால்
ஞாலமெங்குமுள்ள மக்கள்
களிக்கொண்டு விழாவாக்கினரோ

அ. வேல்முருகன்

டொனால்டு டிரம்ப்








கூறையேறி
கொக்கரிக்கும் கோழியை
நிமிர்ந்து பார்த்தாலும்
கடந்துச் செல்வர் மக்கள்

சீனாவிற்கு 100%
இந்தியாவிற்கு 50%
கூடுதல் வரியென்றவனை
குட்டியது உள்ளூர் பஞ்சாயத்து

வானளாவிய அதிகாரமென
வரிந்துக் கட்டியவர்கள்
சரிந்து போனதை
சரித்திரம்காட்டியதை போல

சீனா, இரஷ்யா
இந்தியா வடகொரியா
அணித் திரண்டவுடன்
அஸ்திவாரம் ஆட்டம் கண்டது

ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அயலக மாணவர்களுக்கானதென
அதன் நிதியை மறுக்க
நீதி காத்துக் கொண்டிருக்கிறது

அமெரிக்காவை
அகில உலக வசூல் மயமாக்கிய
ஐந்து இந்தியர்கள்
அமெரிக்காவிற்குத் தேவை

இந்தியக் கடல் உணவுகள்
ஆடை, தோல் பொருட்கள்
கூடுதல் வரியால் தடுப்பது
இந்தியா வளரக் கூடாததாலா

சுந்தர் பிச்சையும்
சத்திய நாடெல்லாவும்
இந்திரா நூயியும்
இன்னும் பலரும்

அமெரிக்காவை வளமாக்கினாலும்
இந்தியாவிற்காக
குரல்கொடுக்க முடியாதவர்களாயினும்
இங்கிருக்கும் நீங்கள் குரலற்றவர்களா



அ. வேல்முருகன்

திங்கள், செப்டம்பர் 1

வீதிக்கொரு கோயில்


 









வீதிக்கொரு கோயிலுண்டு
வீணாக மக்களை பிரித்துக்கொண்டு
சாதிக்கொருச் சாமியுண்டு
சட்டமாக்கி வைத்துக் கொண்டு
ஆதிக்கச்சாதி அத்தனையும்
அவர்களே உயர்ந்தவர்களென்று
சாதிக்க நினைப்பதை
சமாதிக்கு, என்று அனுப்புவதென்று

கேள்விகேட்டது யார்யார்?
கேட்காது முட்டாளாய் வாழ்வதுயார்?
நாளும் நட்சத்திரமும்
நடமாடுமுனை பாதிக்குமென சொன்னவரா?
மீளும்வழி இதுவென்று
மேடைதோறும் முழங்கிய பெரியோரா?
ஏளனசாதி என்பதற்கு
ஏன்உன் சாமியும் அடையாளமாகுதையா!!

சாதிகுல பெருமையெல்லாம்
சரித்திரத்தில் வீழ்ந்து கிடக்குதையா
மேதினியில் மேனிமறைக்கும்
மேலாடைக்கு வரிவிதித்தது யாரய்யா
நீதிவேண்டு மெனில்
நீதுறக்க வேண்டியது சாதியல்ல
ஆதிகுலச் சாமிகளை
அபகரித்த அவதாரக் கடவுள்களை

புத்தனை ஓழித்ததேன்
புத்தியை தீட்டு என்றதனாலே
பித்தான நம்பிக்கையால்
பிறமதக் கடவுளை வெறுத்ததேன்
முத்தான உடன்பிறப்பு
முப்பாட்டன் சாமியை மறுத்திட
தத்துவம் எதுவென்று
தள்ளாடல் வந்தால் நீமானுடனே

மொழியால் உன்னின
முகவரி போதுமென நினைத்தால்
வழிவழி வந்த சாமியும்
வாமனனாய் விரிந்த சாதியையும்
குழித்தோண்டிப் புதைத்திட
கூட்டுறவில் மனிதம் வாழ்ந்திடும்
அதைத்தாண்டி ஆதிசங்கரன்
அவதரித்தாலும் அன்புதான் செழித்திடும்


அ. வேல்முருகன்

வெள்ளி, ஆகஸ்ட் 29

விடியலை நீட்டிக்க

 












துடிக்கத் துடிக்கத்
துவளச் செய்து
கொடியிடைத் தன்னில்
கொட்டும் அடித்து
வடிவழகே வசந்தமே
வசனம் படித்து
அடிமனதில் நங்குரமாய்
அமர்ந்த வேலவா

படிக்கப் படிக்கப்
பசலைத் தீருமோ
முடிவல்ல என்றே
முகக்குறிக் கூறுமோ
விடிவிளக்கு விழிபிதுங்கி
வெட்கத்தில் நாணுமோ
விடியலை நீட்டிக்க
விண்ணப்ப மெழுதுமோ

கடிப்பட்டக் கழுத்தின்
காயத்தை மறைத்து
கொடிபிடித்து குறைத்தீர்க்க
கொழுநனைக் கேட்டவுடன்
அடிமட்டத் தொண்டனாய்
ஆட்சேபனை எதுமின்றி
நொடியில் முத்தத்தை
நூதலில் பதித்திட

செடிதனில் செங்கதிர்
செய்திடும் மாயத்தை
மடிதனில் வீழ்ந்த
மச்சானும் புரிந்திட
நெடிய பயணத்தில்
நேசன் இவனென்று
அடியவள் மனதில்
அச்சாணி ஆனதின்றே


அ. வேல்முருகன்  




வியாழன், ஆகஸ்ட் 28

நாயகன்


 







காளையை அடக்கி
இளவட்டக்கல் தூக்கி
காதலியை கைப்பிடித்தது
கற்காலம்

நஞ்சையும் புஞ்சையும்
தோப்பும் துரவும்
நாயகன் இவனென
நாடியது ஒருகாலம்

மழையோ வெயிலோ
மாதம் ஒன்றானால்
கைநிறையச் சம்பளம்
இதுவும் கடந்தகாலம்

கற்றக் கல்வியால்
ஏற்றப் பணியில்
கற்றைக் கற்றையாய்
கண்மணி ஈட்டுவதால்

இருக்க இடமும்
உடுக்கத் துணியும்
இன்னும் பிறவும்
எவர்தயவும் வேண்டாததால்

அன்றைய நிகழ்வுகளை
ஆற்றாமையில் பரிமாற
ஆம்மென்றோ அல்லவென்றோ
ஆற்றுப்படுத்துபவனே

தன்நிலைக்குத்
தக்கத்தொரு துணையாய்
பொன்மாலைப் பொழுதில்
கைப்பிடித்து வருபவனே


வியாழன், ஆகஸ்ட் 14

வரட்சி

 









மெளனம்
மெல்லியாளிடம்
மொழிவதற்கு ஏதுமில்லை
மன்னனிடமும்

நாட்கள் கடந்தன
இணையர்கள் எதிரெதிர்
நடமாடிக் கொண்டாலும்
நட்பொன்றுமில்லை

காரணமொன்றுமில்லை
வாக்குவாதம்
தாக்குவாதமானாதால்
தாமரையிலைத் தண்ணீரானது

பிடிவாதம்
வாய்ப்புகளை
வாய்தா வாங்கிக் கொண்டிருக்க
வரட்சியே நிலவியது

நீயா நானா என்று
தீண்டாதிருந்த போது
வேண்டா விருப்பாக
ஏதோவொரு விசாரிப்பு

பற்றிக் கொண்டது
பஞ்சும் நெருப்பும்
பார்க்கலாம் - அடுத்த
அமர்களம் எப்போதென

அ. வேல்முருகன்

ஞாயிறு, ஆகஸ்ட் 10

ஆணவத்தின் அடிச்சுவடு

 


 













ஆணவத்தின் அடிச்சுவடு
அச்சனாதன சாதியடுக்கே
ஊனமாக்கிய உன்மனதை
உலுக்கலியே கொலைகளும்

நாணமின்றி மனிதனென
நாட்டில் சொல்லாதே
வீணானச் சாதியை
விட்டொழிய வெல்வாயே

கலப்புமணம் கலகமா
கவர்திழுப்பது பாலினிமா
குலப்பெருமை சிதையுமா
குறத்தியின் முருகனாகிட

உலகெங்கு மில்லா
உயர்சாதி இங்குமட்டும்
விலங்காக இருப்பதேன்
விழித்தெழு மனிதனே

ஆண்டப் பரம்பரை
ஆண்டாண்டு பெருமையா
மாண்ட மன்னரெல்லாம்
மதங்கொணடு திரியலையா

ஊணின்றி உழைத்திட
ஊருவிட்டுப் போகயில
பூணுகின்ற வேடம்
பூரிப்பைத் தருகிறதோ

முறுக்கு பிழிந்து
மூணுவேளைச் சாப்பிட
உறுத்தலில்லை உனக்கு
உழைப்பு என்பதனால்

கிறுக்கா மாறுகிறாய்
கீழ்சாதி அவனென்கிறாய்
இறுகியக் கட்டமைப்பை
ஈடுகாட்டில் எரித்திட்டால்

ஆண்டிகள் அரசனில்லை
அனைவரும் அன்புடையோர்
தீண்டாமை மதங்களில்லை
திருச்சிற்றபலத் திருச்சபையின்

வேண்டாத வேற்றுமைகளை
வெறியாட்டை வேரறுத்து
தோண்டிப் புதைத்திடுவோம்
தோழமையுடன் வாழ்ந்திடுவோம்



அ. வேல்முருகன்

கரிசக் காட்டு காதலி















கரிசக் காட்டுக்
கருத்தம்மா, கனவில்
பரிசம் போட்டேன்
பக்கம் வாயேம்மா

உரிமைக் கோரும்
ஒசந்த மச்சானே
அரிவை வேண்டுவது
அன்பு மட்டுமே

மனசில் நிறைந்தவளே
மாநிறத்து மயிலே
அனல்பேச்சு ஆகாது
அன்பென்றும் மாறாது

அக்குத் தொக்கு
ஆருமில்லை என்றே
சொக்குப்பொடிப் போட்டாலும்
சொக்கிட மாட்டேன்

பருத்தியிலப் பஞ்செடுத்து
பதமாக நூலெடுத்து
ஒருத்தி உனக்கென
ஒருசீலை நெய்தேனடி

முருகன் அழகென்பதும்
முன்கண்ணன் மகனென்பதும்
நெருங்கிடத் தகுதியில்லை
நெஞ்சமதும் ஏற்பதில்லை

உழைத்துக் காத்திட
உறுதியுண்டு நெஞ்சிலே
தழைத்து வாழ்ந்திட
தாரமாய் வாயேன்டி

அழைத்த அன்பனே
ஐந்திணை வாழ்வுதனை
வாழைப்போல் தொடருமெனில்
வாரேன் இணையாக


அ. வேல்முருகன்

முத்தக் கோளாறு

 


 

















அன்பை வெளிப்படுத்த

அனுமதிக்கப் பட்ட – ஓர்

அனிச்சை செயல்

முத்தம் கொடுப்பதே

 

அங்கீகாரத்திற்குப் பின்

அவளிடம் அவனோ

அவனிடம் அவளோ

அனுமதிக் கேட்பதில்லை

 

ஆசையைச் சொல்ல

அதன் போக்கில்

அழுத்தமாய் பதிப்பது

அந்த முத்தம்

 

கோபத்தின் உச்சியில்

கொண்டவன் குளிர

கொடுத்தாலும் மறுத்து

கோளாறு செய்பவன்

 

கொஞ்சி மகிழ்ந்து

கொஞ்சம் விலகினாலும்

கொசுறு கேட்டு

கொட்டமடிப்பது முத்தத்திற்கே

 

கடுந்தவ மிருந்தாலும்

காத்திரு என்றே

கவனித் திருப்பாள்

காய்ச்சல் உச்சமாகிட

 

காரண மாயாமல்

கனப்பொழுதும் கடத்தாமல்

காற்றும் புகுந்திடாமல்

கடையேழு வள்ளலாவர்

 

                              அ. வேல்முருகன்

 


திங்கள், ஆகஸ்ட் 4

முழுநிலவு காயுதடா
















முழுநிலவு காயுதடா
முகங்காட்டிப் போயேன்டா
எழுமாசை கோடிகளடா
என்னவென்று கேளடா

எழுபிறப்பும் என்னுடன்
எழுந்தருள வேண்டுமடா
மழுப்பாமல் மாலையிட
மன்மதப் பயணமடா

பேரின்ப வேள்வியில்
பேதங்கள் ஏனடா
கோரிக்கை வைத்தால்
கொண்டாடிச் செய்திடு

பூரிப்பைக் கண்டு
புதியனத் தேடிடு
பாரியாளை வள்ளல்
பாரியாய் உணர்ந்திடு

அத்தானின் வித்தைகள்
ஆய்வுக் களமாகிட
பித்தான என்மேனி
பிணியைத் தீர்ப்பாயா

ஒத்திசைவா நாமிருக்க
ஒவ்வொரு நாளும்
முத்தத்தில் மூழ்கி
முத்தெடுக்க வருவாயா

                         அ. வேல்முருகன்


புதன், ஜூலை 30

இதுவுமொருத் திருமணம்

 

















நட்டநடு வீதியில்
நாட்டிலுள்ளோர் கூடிட
நாயகன் நாயகியை
இணையாய் ஏற்றுக் கொண்டான்

இட்டத்தோடு
இச்சடங்கு என்றாலும்
எதிர்ப்புகள்
இல்லாமலில்லை

அலங்கார மாளிகையில்லை
ஆங்கொரு கோயிலுமில்லை
மங்கல இசையுமில்லை
மக்கள் சாட்சியாயிருந்தனர்

புத்தாடை அணியவில்லை
அத்தரும் ஜவ்வாதுமில்லை
புழுதிப் படிந்த கூந்தலோடு
கசங்கிக் கிழிந்த சட்டையோடும்

அவர்கள் அன்னியமில்லை
அங்கு வளர்ந்தவர்கள்தான்
ஆயினும் ஈன்றவள்
அழுகிறாள், மகளை அடிக்கிறாள்

வலிகளுக்கிடையே
மகிழ்ச்சி - எனினும்
மயான அமைதி
மாலை மாற்றிக் கொண்டனர்

திலகமிட
குலுங்கி அழுகிறாள் தாய்
கண்ணீரோடு நாயகி
அமைதி சாட்சியாய் ஊர்

அவளுக்கும் அவனுக்கும்
ஈர்ப்பு இருந்ததால்
ஊர் சாட்சியானது
ஒரு காதல் வாழ்வானது


                                     அ. வேல்முருகன்

நட்பின் மேன்மை

 













இழப்பின் பொழுது இன்னலைக் களைந்து
பழகும் மானிடன் பகலவன் ஆவான்
குழப்பம் இருப்பின் குந்தகம் தவிர்த்து
வழக்கைத் தீர்த்து வாட்டம் போக்கி
அளாவி மகிழும் அன்பர் யாரோ
வளர்ப்பர் நட்பை வாழ்நாள் முழுதுமே


அ. வேல்முருகன்


அகங்கார ஆட்டம்

 
















அதிகாரம்
அகங்காரத்தில்
ஆட்டம் போடுகிறது

எல்லையற்ற
எத்தேசதிகாரத்தால்
எதிரியை அடக்க நினைக்கிறது

இழப்பதற்கு
ஏதுமில்லாததால்
எதிரியோ எதிர்த்து நிற்பர்

வீரனைக் கோழையென்று
விவாதித்து
வீணில் மகிழ்வர்

ஊரெல்லாம் தூற்றினாலும்
உறுத்தல் இல்லாது
உலா வருவர்

நடுக்கத்தை
நாற்காலியில் அமர்ந்து
நகையாடி மறைப்பர்

வேதத்தை துணைக்கழைத்து
கொலைக்கானத் தண்டணை
இல்லையெனத் தீர்ப்பெழுதுவர்

பரிபாலினத்தை
பக்கச் சார்புடன்
பகிரங்கமாய் செய்வர்

இயற்கை நீதியின்
இறக்கொடித்து
இறைத் தீர்ப்பென்று கூறுவர்

இத்தனையும் யாதென்று
இங்கிருப்போர் கேட்போரானால்
இதுதான் நாட்டுநடப்பு என்பேன்

அ. வேல்முருகன்

வியாழன், ஜூலை 10

சூட்சமம்

















காதல் சொல்ல வந்தேன்
காதுக் கொடுக்க மறுப்பதேன்
வாதம் செய்து வதைப்பது
வாகைச் சூடி மகிழவா
மோத லென்றும் தொடர்வது
மோகம் கொண்டக் காரணமா
மாதம் மும்முறை வருத்தினாலும்
மாயங்கள் செய்வது முத்தமா

ஆசையாப் பேச வந்தால்
அலட்சியம் காட்டு மன்பே
மீசைக் காரனின் பேச்சு
மீட்டும் வீணையா இல்லையா
ஓசை யின்றி இருந்தால்
ஓய்ந்து போக மாட்டேனடி
பூசைக் குரியது நானல்ல
பூவுல கெங்கும் தேடுமன்பே

ஏங்கும் என்னை வருத்தவா
ஏதோதோ சொல்லி வாட்டுற
தாங்கும் மனது என்றாலும்
தாக்குதலில் வீழ்த்திப் பாக்குற
எங்கும் எதிலும் வெற்றி
என்றே கனவில் மிதக்குற
பொங்கும் அன்பு இல்லாது
புன்னகை முகத்தில் மலராது

எதிர்த்துக் கேள்வி கேட்டிட
ஏனடி முகத்தச் சுருக்குற
அதித அன்பில் அப்படி
அதட்டி வைப்பேன் என்கிற
பதித்த பாவன சீதாராம்
பழகிக் கொள்ளப் பார்க்கிறேன்
சுதியினி சேர்ந்திசையில் மாறாத
சூட்சமம் அறிந்தே நடக்கிறேன்

புறக்கணிப்பு

 













புறக்காரணிகளைச் சொல்லி
புறக்கணிப்புக்குப்
பொழிப்புரை எழுதுகிறாய்
புகலிடம் கேட்டவனிடம்

முடிவுகளைத் தீர்மானித்துவிட்டு
அன்பை
ஆய்வுக்கு உட்படுத்துகிறாய்
ஆட்சேபனைகள் கூடாதென்கிறாய்

மென்னிதயம்
என்பொருட்டா மாறியது
அன்பை ஆறறிவால் பார்க்க
கல்லாக்கிக் கொள்ளச் சொன்னதோ

ஏனெதெற்கென
ஏதும் கேட்கமால்
ஆம் போடுவதாயிருந்தால்
ஆகட்டும் பார்க்கலா மென்கிறாய்

உடனிருக்கவும்
ஊர்ச் சுற்றவும்
உத்தரவுகளை நிறைவேற்றவும்
உமா பதியாயிருக்க வேண்டுகிறாய்

அசலனமற்று
அஞ்சலி செலுத்த
ஆயுத்தமாகிறாய்
அடைக்கலமும் மறுக்கிறாய்

கடந்துச் செல்லக்
காரணங்கள்
கண்டுப் பிடித்தப் பிறகு
காதலாவது கத்திரிக்காயவது


                                            அ. வேல்முருகன்  








திங்கள், ஜூலை 7

அரோகரா...................









சங்கிகளுக்கு
சளைத்தவர்களில்லை என
பழனியில் பட்டம் பெற்றவர்கள்
பதவிகாலம் முடிவடைவதால்

பதினாறு ஆண்டுகள் கழித்து
பக்தக் கோடிகளை
பரவசப் படுத்தப்
பரபரப்பாய் திருச்செந்தூரில்

அரோகரா...................
அவனென்னச் சொல்வது
அறநிலையத் துறை - அதிகாரம்
அடியேனிடமிருக்க

கோடிகளைப் புரளவிட்டு
கொள்கை வெங்காயத்தை
கொற்றவன் புறந்தள்ளி
கோஷத்தை மாற்றினான்

புனித நீரைத் தெளித்து
பாவப் பட்ட மக்களை
இரட்சிப்பதன்றோ ஆட்சியாளர்களின்
பகுத்தறிவு

அறுபடையில்
முதலாம் படை வீட்டை
முருக பக்தர்கள்
முற்றுகை யிட்டதால்

இரண்டாம் படைக்கு
இன்று குடமுழுக்கு
மற்றபடை வீட்டில்
மசூதியில்லை அவர்களுக்கு

குடமுழுக்கு
யாகசாலைகள்
தடங்கலின்றி ஆட்சியைத்
தக்க வைக்குமோ

பொற்றாமரைக் குளங்களும்
ஆறுகால பூஜையும்
ஆழித் தேரோட்டமும்
பொற்காலமென எழுதிட

திராவிட மாடலில்
இறங்காத விலைவாசியை
புறந்தள்ளி பம்மாத்தாய்
குமரனுக்கு அரோகரா .............


                                 அ. வேல்முருகன்

மண்ணாசை மரணங்கள்













பாலஸ்தீனக் குழந்தைகள்
பசியாறத் துடிக்கும்
ஓலமின்னும் ஞாலத்து
மக்களுக்கு கேட்கலியோ?

இஸ்ரேலிய ஏவுகணைகளின்
இரக்கமற்றக் கொலைகளை
ஆசீர்வதிப்பீரோ?... ஐயோவென
ஆர்ப்பரித்து எதிர்ப்பீரோ

மாண்ட மக்களுயிர்
அண்டை நாடுகளை
ஏனடாவெனக் கேட்காது
மோனநிலையில் வைத்தது யார்?

உதவிக் கரம்தனை
ஒடுக்கும் நெதன்யாகுவைத்
தடுக்கும்வழித் தெரியலையோ
தடுமாறித்தான் நிற்குரியோ

அமெரிக்காவின் ஐ. நா. வும்
ஆயுளோடிருப்பதாக அரற்றுது
ஹமாஸும், ஈரானும்
அவர்களிருப்பதாய் காண்பிக்குது

யாரிருந்து என்னசெய்ய
ஒருவேளைச் சோற்றுக்குப்
பெண்டுப் பிள்ளைகள்
போராடிச் சாகுதே

பட்டினிக் கொடுமைதனை
பதறும் காணொளிகளாய்
பாரெல்லாம் சுற்றினாலும்
பதறாமல் விடிகிறதே

அகதி முகாம்களும்
மருத்துவ மனைகளும்
கொலைகள இலக்காக
கூசும் பொய்களோடு

தொண்டு நிறுவனங்களின்
தொடர் உதவிகள்
தொடரக் கூடாதென
இஸ்ரவேலர்கள் தீர்மானிக்க

பிழைப்போமா எனவறியா
பின்னொரு விடியலில்
உழைக்கவும் கற்கவும்
உயிரைக் காக்குதே

மண்ணாசை மரணங்கள்
மகுடங்களை தக்கவைக்க
மரணங்கள் மகுடங்களை
மண்ணில் புதைக்காதோ

                                    அ. வேல்முருகன்

வியாழன், ஜூன் 19

வளமான வாழ்விற்கு














வளமிக்க வாழ்வில்
வசந்தத்தைக் கூட்டவும்
தளரும் பருவத்தில்
தண்டம் தவிர்க்கவும்
இளமையை நீட்டித்து
இனியதாய் மாற்றவும்
களமிறங்கு காலத்தே
காத்திடு ஊணுடலை

ஈரற்குலைக் கொழுப்பு
இதயத்தின் அடைப்பு
இரத்ததில் கொதிப்பு
இதனோடு நீரழிவு
சீராக்க அல்லாடும்
சிந்தனைச் சிற்பிகளே
வாராத போதல்லவா
வழிதனைத் தேடவேண்டும்

நச்சாகும் மாச்சத்து
நாற்பதைக் கடக்க
வஞ்சிரம் வவ்வாலு
வழமையானக் கோழியும்
பச்சைக் காய்கறியும்
பலன்தரும் புரதமாகும்
இஞ்சியோடு எலுமிச்சை
இளைமையைக் கூட்டும்

அஞ்சிடாது சூரியனை
அரைநிமிடம் நோக்கிட
வஞ்சமற்ற உயிரியல்
வழித்துணைக் கடிகாரமாம்
நெஞ்சை நுரையீரலைக்
நஞ்சாக்கா மலிருப்பது
சஞ்சிவினி உண்பதற்கு
சமமென அறிவதாம்

ஆண்டாண்டு காப்பீடு
ஆபத்திற்கு எடுப்பவரே
ஆண்ட பரம்பரையோ
ஆண்டி நிலையோ
பாண்டத்தின் குருதியை
பகுத்தாய பழகிடு
மாண்டப் பின்னே
மருத்துவம் உதவாது

இடைப்பட்ட உண்ணாவிரதம்
எட்டுமணி உறக்கமும்
நடையோடு உடலை
நெளித்து பழகிடு
கொடையாகும் வாழ்வு
கொஞ்சம் மூச்சுவிட
விடையிது மானிடா
விதிதனை மாற்றிட

                              அ. வேல்முருகன்

செவ்வாய், ஜூன் 10

நோய்

 










நோக்கும் கண்களால்
நோயைத் தந்தாய்
நீக்கும் மருத்துவம்
நீயேதான் என்றாய்
தூக்கம் கெடுத்து
துவளச் செய்தாய்
தாக்கும் நினைவுகளால்
தவிக்கவே விட்டாய்

மறதி வேண்டுமென
மனதிடம் கேட்டேன்
துறவுக் கொண்டாலும்
துரத்தும் என்றது
உறவு என்பது
உயிருள்ள வரைதான்
இறவுச் சொல்லும்
இனியில்லை வதைதான்

நினைவுகள் இன்பமென
நியதி ஏதுமில்லை
புனைவுகள் என்றாலும்
புலன்கள் அறிவதில்லை
தினையளவு வெறுப்பு
தீர்ப்பு அளிப்பதில்லை
அனைத்தும் புரிந்தாலும்
அன்புத் தோற்பதில்லை

                                   அ. வேல்முருகன்

புதன், ஜூன் 4

கடைசி வாய்ப்பு











இறுதி வாய்ப்பை
பயன்படுத்தவில்லை என்றால்
தேர்ச்சிப் பெற முடியாத
தேர்வு முற்றுப் பெறும்

பரவாயில்லை ....
வெற்றிப் பெறும் பாடத்தில் 
பயிற்சி எடு 
பாதைக் கூட மாறலாம்

கடைசி பேரூந்து
கைவிட்டால் அன்றிரவு
வனாந்தரத்தில்தான்
உறங்க முடியும்

ஆயினும், மறுநாள்
முதல் பேரூந்து
உங்கள் பயணத்தை
உறுதி செய்யும்

இறுதிச் சுற்று
வெற்றி வாய்ப்பு
யாருக்கு என்று
ஊருக்குச் சொல்லலாம்

தவறுகளிலிருந்து
மானுடம் கற்பது
மற்றுமொரு போட்டியில்
வெற்றிப் பெறத்தானே

கடைசி என்பது
முற்றுப் பெற்றதல்ல
அதற்காக
அலட்சியமாக இருப்பதுமல்ல

ஆயினும்
அகங்கரமாய்
இறுதி வாய்ப்பென்றால்
அடிபணியாதே

ஒவ்வொரு நொடியும்
எவருக்கும்  
புதிய வாய்ப்பை தரும்
ஏமாறாதே?!!


                                    அ. வேல்முருகன்







திங்கள், ஜூன் 2

அறிந்தும் அறியாதது

 









முற்பனிக் காலத்தில்
முத்தழல் பற்றியெரிய
முக்கனிச் சுவையை
முக்காலமும் தேடிட

இணையாய் வாழ
இசைந்தோர் ஒப்பந்தம்
இச்சையும் இடங்கொடுக்க
இடைக்கட்டு நெகிழ்ந்தது

இணக்கம் ஓரிரவா
இன்னுமின்னும் எனும்வரையா
பிணக்குத் தோன்றிட
பிரிவினை வழித்துணையா

எண்ணங்கள் வேறாகி
எதிர்பார்ப்புக் கூடிட
வண்ணங்கள் மாறியே
வருத்தங்கள் உருவாக

முத்தங்கள் பரிமாறி
முந்தானைப் பிடித்திட்ட
முத்தொழில் கற்றவனே
முற்றும் அறியாதாபோது

அம்மணம் அறிந்ததால்
அவள்மனம் அறிந்தாயோ
அங்ஙனமெனில் அவளால்
அங்கீகரிக்கப் படாதவனே

அகத்திணை அறிய
அன்போடு உறவாடு
அகதியாகா திருக்க
அளவளாவு ஆசையோடு

                                   அ.வேல்முருகன்

புதன், மே 21

நளினம்

 













கற்றைக் கூந்தலில் பூச்சூடி
கட்டுடலில் ஆடைச் சூடி
சிற்றிடை தன்னில் சிறையிட்டு
சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே
பற்றற்று வாழ்ந்த பாமரனை
பரிதவிக்க விட்ட பாவைநின்
கொற்றத்தில் ஆட்பட்ட என்னை
கொஞ்சிட தடைகள் ஏனடியோ


நளின அசைவுகளில் அதிர்ந்தது
நாடோ நிலமோ அல்ல
ஒளியின் அழகை ஒய்யாரி
ஒருத்தியால் பெற்ற நானே
களிறும் காளையுங் கடக்க
காதல் கொண்ட நானோ
துளிரு மன்பால் வேண்டுகிறேன்
துணையாய் வாடி வாழ்ந்திடவே

                                     அ. வேல்முருகன்


சனி, மே 10

அடையாளம்






ஆதி மனிதர்கள்
ஆதாம் ஏவாள் போல
அவர்கள் வாழ நினைத்தனர்

தேர்ந்தெடுக்க
தேவனுக்கும் தேவிக்கும்
வாய்பில்லாமலிருந்தது

ஆளுக்காருத் திசையில்
அவர்களின் பயணங்கள்
ஆயினும் சந்திப்பார்கள்

ஆக, அடையாளங்கள்
அநாகரிமென்று
அவர்களுக்குப் பட்டதால்

மோதிரமும் தாலியும்
மோதலின் போது
முன்னிருத்தும் ஆயுதமானதாலும்

மோகன இராகத்தில்
சட்ஜமும் பஞ்சமும் ரசித்தவர்கள்
அபசுரங்கள் கூடாதென்கிறார்கள்

கட்டுப்பாடுகளற்ற
காருண்யவாதிகள்
கலந்திருக்க நினைத்தனர்

கற்பனாவாதிகளுக்கு
காரியங்கள் சலிப்பூட்ட
கடையடைப்புச் செய்தனர்

சனாதானம் ஏற்படுத்தியச்
சடங்குகள்
சல்லி சல்லியா நொறுங்கியது

பொருளாதாரச் சுதந்திரம்
பொருட்சுவையைக் கூட்டாது
பொருட்சிதைவைக் உண்டாக்க

பொருந்தாமை உருவானது
பொருட்படுத்தாதோர் சிலர்
பொங்கியெழுந்தவர் சிலர்

அச்சமென்ன என
உச்ச நீதிமன்றம் சென்று
துச்சாதனன் அவனென்று

வழக்கான்றைத் தொடுத்து
வகை மோசத்திற்கு
வலி நிவாரணம் கேட்க

பொருள் ஆதாரமாக
இருளகற்றும் அறிவு
இல்வாழ்வை முறிக்குமோ

ஆட்சேபனையின்றி
அதிகரித்து வரும் போக்கை
ஆராய்சிதான் செய்ய முடியுமா

குறுக்கு விசாரணையில்
கிடுக்கிப்பிடிக் கேள்விகள்
சிறந்த தீர்ப்புக்கு வழிவகுக்குமா

தனக்கானப் பாதையை
தெளிந்த அறிவில்
வகுக்கத் தெரிந்தவர்கள்

எதற்கும் சம்மதமென
எடுக்கும் முடிவில்
ஏமாற்றப் பட்டால்

இரண்டாண்டுக்குள்
இடறுகிற போது
எடுக்கும் முடிவுகள்

பிரிவுதான் வழியென
அரிய வாழ்வுதனை
எரித்திடாது காத்திடவும்

திருமணம்தான் இலக்கெனில்
தீர்த்துச் சொல்லிக்
காத்திருங்கள்

அன்பு பிணைப்பில்
ஆண்டாண்டு காலம்
அன்றிலாய் வாழ்ந்திடலாம்

பலகாலம் வாழ்ந்தவர்
நிலவோடு உலவுவர்
ஓலமிடுவதில்லை

கண்ணே அமுதே என்றரற்றி
கனியுடன் பழமுண்டு
கசக்குதே என

பூவை நசுக்குவதும்
வண்டை மிதிப்பதும்
பொல்லாப்பில்தானே முடியும்

கற்பழிப்புக் கதையெழுதி
கட்டளை வேண்டுமென்றால்
கடைச்சாரக்கா நீதி

வியாழன், மே 8

பேரண்டத்தின் பேரழகி

 












கெண்டைக் கண்கள்
தண்டைக் கால்கள்
அண்டை அயலார்
அண்ட நினைக்கும்
பேரண்டத்தின் பேரழகி


சிவந்த அதரங்களால்
சிந்தியச் சொற்கள்
அட்சரச் சுத்தமாய்
ஆலாபனைச் செய்திட
ஆனந்தத் தாண்டவமாடினேன்

அலங்காரமா பிறையிலிட்ட
அத்திலகமும் நீரும்
அழகுதனைக் கூட்டவா
உலகம் மறந்து
உன்மத்தம் ஆக்கிடவா

எட்டு மடிப்பும் கலையாத
பட்டுச் ஜரிகைச் சேலையில்
கட்டுக் குலையாதவள்
கட்டுத்தறிக் காளைதனை
கட்டுப் படுத்திட

கால் கையசைத்து
கன்னக்குழி விழ
புன்னகையுடன் கதைக்கும்
கவித்துவ அழகை
கண்ணிமை மூடாது ரசித்திட

இளமையின் வளமையால்
களவுபோன எம்மனதை
கொள்ளைக் கொண்டவள்
உள்ளத்தில் உள்ளதாவென
ஊடுறுவிப் பார்த்திட

கலம்பகம் எழுதி
கலகங்கள் செய்து
காதலாய் பார்த்திட
செயற்கை நுண்ணறிவு
செதுக்கியச் சிற்பமாம்

 


ஞாயிறு, மே 4

கிழவி
















குமரனா நீ
கோபத்துடன்
கோமளவல்லி கேட்க

சுருக்கம் விழுந்ததாவென
சுறுசுறுவென
கண்ணாடியை தேடினவள்

பாட்டி வைத்தியத்தை
பலமுறைத் தேடி
பரிசீலித்துப் பார்க்க ஆரம்பித்தாள்

பப்பாளி, பாசிப்பயிறு
கசகசா என
எக்கச்சக்கமா சோதித்து

மாற்றம் தெரியுதா?
மறுவாரம் கேட்கிறாள்
என் கிழத்தி எனக்கு கிழவிதானே


                                         அ. வேல்முருகன்

முனீர் அகமது -மீனல்

 


மாநிலம் அறியா
மறைக்கப்பட்டத் திருமணம்
மாய வித்தைகளால்
கண்டங்கள் கடந்து அறியப்பட்டது

மாதராய் பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டுமா
முனீரின் மீனல்
முத்தாய்ப்பாய் சொல்வாளா

பாரதியைக் கொண்டாடும்
பாரதப் புதல்வர்கள்
பாகிஸ்தான் பெண்ணை மணந்ததால்
பணிநீக்கம் செய்தனர்

பார்வைகள் பரிமாறி
பாரதத்தின் மருமகளாய்
பலதேசத்து மகளிர்
பாங்குடன் வாழ்ந்திட

பாகிஸ்தான் பகையானதால்
“பாரா மிலிட்டரி”க் காரன்
பாவம் செய்ததாய்
பஞ்சாயத்து முடிவு செய்தது

தாய்வழிச் சொந்தமென்றும்
தகுந்த ஆதாரத்தை
தக்கச் சமயத்தில் பகிர்ந்திருந்தும்
தண்டணை உறுதி செய்யப்படுகிறது

தேச அச்சுறுத்தலென
தேச பக்தர்கள்
தேசிய பத்திரிக்கைகள்
தேம்பி அழுதப்பின்

“பாரா மிலிட்டரி”க் காரனின்
பணிநீக்க உத்தரவு
பாரெல்லாம் அறிந்தபின்
பாதிக்கப்பட்டவனுக்கு அளித்தனர்

2017 -ல் பணியில் சேர்ந்து
2022 -ல் தகவல்கள் அளித்து
2024 -ல் அனுமதிப் பெற்றதாக
2025 -ல் போபாலில் கூறுகிறான்

வயிராற உண்ணவே
"பாரா மிலிட்டரி" பணி 
உயிர் போகுமென்றிந்து
ஒப்படைத்தவனின்  

தீராக் காதலை
தீவிரவாதிகளைப் போல்
தீர்த்து விடாதீர்கள்
தீர்ப்புகள் மாறட்டும்

தீவிரவாதம்
தேசத்தை மட்டுமா சீர்குலைத்தது
மேவிய காதலையும்
மூழ்கடிக்குதே

முனீர் – மீனலை
முடக்கி
மானுடத்தைக் கொல்லாதீர்
மனுநீதியென பிதற்றாதீர்


                                  அ. வேல்முருகன்

ஞாயிறு, ஏப்ரல் 20

தேடல்

 
















இருவருக்குள் இன்னும்
ஏதோதோ தேடல்
எனவே
இணைந்தே இருக்கிறோம்

அன்பிருக்கிறது
ஆயினும்
கொடுபடாதது கொஞ்சமிருப்பதால்
கொஞ்சல்கள் தொடர்கின்றன

அதுபோலவே
எடுப்பதற்கு இன்னுமிருப்பதால்
எதிர்பார்ப்புகள்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது

குறையொன்றுமில்லை என
கூடிக் களித்தப்பின் தோன்றினாலும்
கூட்டாஞ்சோறு
கூவி அழைக்கிறது

தேடலுக்கானத் தேவை
உன்னிடம் எனக்கும்
என்னிடம் உனக்கும்
முற்றுப் பெறாமல் தொடர்கிறது

நிறைவான வாழ்வென்று
நரைபருவத்தில் தோன்றினாலும்
குறையாத காதலே
கூட்டணியின் அச்சாணியானதே

திங்கள், ஏப்ரல் 14

தானமும் தர்மமும்


 






ஏற்றத் தாழ்வுகள்
ஈகைக்கு காரணமா
மாற்றும் நிகழ்வுகள்
மாயத்தில் நடக்குமா

உயர்வும் தாழ்வும்
உழைப்பில் என்றால்
வியர்வை சிந்தியும்
விடியல் இல்லையே

குவியும் சொத்து
கொடுத்துச் சிவக்கவா
புவியின் ராசாவென
புன்னகை பூக்கவா

ஆண்டா னடிமை
ஆண்டாண்டாய் தொடரவா
வேண்டா வெறுப்பா
விதியென் றிருப்பதா

கிடைத்தவன் பிழைக்கவா
கீழானோன் மரணிக்கவா
படைத்தவன் செயலென
பாமரன் ஏற்பதா

மரணத்தின் வாசல்
மாறச் சொல்லுதா
இரக்கத்தின் குணமா
இங்கவை வாழுதா

ஏற்பது இகழ்ச்சியென
எடுத்தியம்பிய ஆத்திசூடி
ஆற்றார் இல்லாத
அகிலம் வேண்டியே

தானமும் தர்மமும்
தரணியில் இல்லையெனில்
மானமும் அறிவும்
மாநிலத்தில் பரவுமே



                                 அ. வேல்முருகன்






செவ்வாய், ஏப்ரல் 8

தமிழ்நாட்டின் சூத்திரங்கள்


 









கேலிக் கூத்துக்கள்
காலிப் பெருங்காயமாச்சு
புலிச் சிங்கமில்லை
மலிவான மனிதனென்றே

உச்ச நீதிமன்றம்
எச்சரித்து விட்டப் பின்னும்
எச்சமாக ஏனின்னும்
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாய்

காவிச் சாயத்தில்
கல்வியை மாற்ற
கூவிக் கொண்டிருந்த
ஆர் என் இரவிக்கு

அரசியலமைப்புச் சட்டம்
அறைந்தே சொன்னது
ஆராய்ந்து கொண்டிருக்க
ஆகமமல்ல - மசோதாக்கள்

ஏற்புடையதில்லையெனில்
எடுத்தியம்பு முப்பது நாட்களில்
ஏவலாளிதான் நீயெனில்
என்னவென கேட்டுச்சொல்

வரையறைதனை வழங்கியதால்
வல்லூறுகளின் மூக்குடைந்தது
திரைமறைவு நாடகங்கள்
தெருவுக்கு வந்தது

திராவிடத் திருநாட்டில்
திரவியம் தேடி வந்தவர்கள்
ஆரியம் பயிற்றுவித்தால்
சூரியன் பகுத்தறிவைப் போதிக்கும்

வள்ளுவரோடு
வள்ளலாரையும் வைகுந்தரைவும்
வலிந்து வருணாசிரமத்திற்குள்
வரையறுத்த வஞ்சகத்தையும்

வெல்லும் தமிழ்நாடு
சொல்லும் சூத்திரங்கள்
எல்லா மாநிலத்திற்குமென
துல்லியமானது பாரடா

                                                அ. வேல்முருகன்


சிந்தித்துச் செயலாற்று














சிந்தித்துச் செயலாற்று
சிக்கலைச் சந்தித்தால்
சந்தித்த மனிதரில்
சான்றோனை நாடு

நாடும் யாவையும்
நன்மை கொடுக்கட்டும்
கொடுக்கும் தன்மையால்
கொஞ்சலும் மிஞ்சட்டும்

மிஞ்சும் வஞ்சியிடம்
மீளத் தஞ்சமோ
தஞ்சமெனில் தலையாட்டும்
தஞ்சாவூர் பொம்மையா

பொம்மையா மக்கள்
போக்கிரிகளை நம்பிட
நம்பிதான் ஏமாறுவர்
நாயகன் வருவானென

வருகின்றத் தலைவனோ
வரியால் வருத்திட
வருத்தத்தை மக்கள்
வாக்கால் மாற்றுவர்

மாற்றத்தை உருவாக்கும்
மக்களின் சீற்றம்
சீற்றம் அறிந்து
சிந்தித்துச் செயலாற்று

அ. வேல்முருகன்

சனி, ஏப்ரல் 5

பனிவிழும் மலர்வனம்















பனிவிழும் மலர்வனம்
பரிதியெழ மனங்கவரும்
இனியன நிகழும்
இணையென நீயாக

எனினும் ஏந்திழையே
எங்குனைக்  காண்பேன்
கனிவுடன் வந்தென்
கரம்தனைப்  பற்றுவாயா

தனித்திருக்கும் தலைவனோடு
தாம்பூலம் தரிப்பாயா
நுனிநாக்குச் சிவந்ததை
நுட்பமாய்  சொல்வாயா

பனிக்காலம் உன்மேனி
பரிபாலிக்க நானாச்சு
வேனிலான் வேட்கையுடன்
விளையாடிட விழாவாச்சு

பொழிப்புரை ஒன்றை
பொருட்சுவை யுடனுரைக்க
விழியோ வினவியது
விடைதனை அறிந்ததும்

செழித்த அதரங்கள்
செருக்குடன் சினந்து
பழிக்கும் அழகினை
பார்த்தால் பரவசமே!

                    அ. வேல்முருகன்


வெள்ளி, மார்ச் 28

விவசாயம் காப்போம்















காடுமேடு திருத்தி
கழனியா இருந்ததை
சூடுசொரணை இல்லாது
சூறையாடி விட்டு

வளர்ச்சி என்று
வாய்சவடால் விடுகிறான்
களர்நில மானவுடன்
கார்ப்பரேட்டு மறையுறான்

சீர்காழியில்
சிதைந்தன நிலங்கள்
சிலகோடி டாலர் ஈட்டி
இறால் பண்ணைகளாய்

இன்றவை தரிசாக - அல்ல
என்றென்றும் தரிசானது
ஏமாந்தது விவசாயியல்ல
எல்லோருமே

கமலையில் நீரிறைத்து
கழினியிலே சேடையோட்டி
களத்திலே நெல்நிறைத்த
காலமெங்கே போச்சு

கருங்கல் கட்டிடமா
கழனியெல்லாம் மாறுது
காசு கிடைக்கிறதென
கண்மூடிக் கொண்டதனால்

வேம்பு, புளியமரங்கள்
வீதியை அகலமாக்க
வீழ்த்தப் பட்டது
வெயிலோ அதிகரித்தது

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதான நெல்வகையை
அடுத்த தலைமுறைக்கு
அவரவர் பாதுகாக்க

மண்ணெல்லாம்
மலடாச்சு பூச்சுக்கொல்லியால்
என்னவெல்லாம் செய்யலாம்
நம் விவசாயம் காக்க


                      அ. வேல்முருகன்







களவுமணம்

 















களவுமணம் கலக்கமே
காதல்களம் காண்போர்க்கு
காண்போர் யாவரும்
காதுபட பேசவே

பேசும் செய்திகள்
பெற்றோர் அறிந்திட
அறிந்தும் அறியாததாய்
அரண்தனை பலப்படுத்திட

பலப்படுத்திய செய்தியை
பரிதவிப்பாய் தெரிவித்திட
தெரிந்த தலைவன்
தேவியை மீட்டிட

மீட்டிய இராகத்தில்
மேளதாளம் முழங்கிட
முழங்கிய வேகத்தில்
முத்தங்கள் பரிமாறிட

பரிமாறிய முத்தங்கள்
பாற்கடலாய் உருமாற
உருமாறிய உத்தமி
ஊணுறக்கம் மறந்தாள்

மறக்க முடியுமா?
மன்னவன் பரிசை
பரிசின் காரணம்
பற்றிய களவுமணமே!


                     அ. வேல்முருகன்


செவ்வாய், மார்ச் 11

மெல்லியலாள் மேதினியை ஆளட்டும்






விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் சிறந்திட

சிறந்த கல்வியால்
சிந்தனை பெருகட்டும்
அறத்தின் வழியே
அன்பு பரவட்டும்

பரவும் செய்தியால்
பந்தங்கள் உருவாகட்டும்
அரசும் விழித்து
ஆற்றலை மெச்சட்டும்

மேச்சிடவே மெல்லியலாள்
மேதினியை ஆளட்டும்
அச்சாணி அவளென்றே
ஆன்றோர் வாழ்த்தட்டும்

வாழ்த்தில் மயங்காது
வாழ்க்கை தொடரட்டும்
ஏழ்மையை எதிர்கொள்ள
எல்லையை வகுக்கட்டும்

வகுக்கும் திட்டங்களால்
வாழ்வை மாற்றிடு
மகுடமாகும் உனக்கது
மகிழ்ச்சியாகும் மக்களுக்கு


                                  அ. வேல்முருகன்



பாரத் மாதா கீ ஜெய்

    சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...