புதன், ஆகஸ்ட் 14

கணணியும் நானும்


கணணி பற்றிய அறிவு/கேள்வி ஞானம் நமக்கு எப்போது வந்தது என சுத்தமாக ஞாபகமில்லை. 1989 அல்லது  1990 ஆக இருக்க வேண்டும்.   நான் வேலை பார்த்து வந்த தொழிற்சாலைக்கு அருகில் இன்னொரு தொழிலகம் இருந்தது.   கணணி மூலம் இரும்பை  துல்லியமாக அறுக்கும் என அங்கு பணிபுரியும் நண்பர் சொன்னார்.  அவர் நான் பணிபுரியும் தொழிலகத்திற்கு இரும்பில் துளையிட வருவார்.   அதை பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை சொன்னேன். அது CNC தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்திரம். ஒரு மாலை நேரத்தில் அழைக்க, சென்று பார்த்தேன்.  குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் இயங்கிய அந்த கருப்பு வெள்ளை கணணியை கண்டேன்.

நெருங்கிய நண்பன் சிவகுமார் NITT யில் 1992 ல் சேர்ந்து கணணி தொடர்பாக படிக்கும் போது, அவனை கேள்விகணைகளால் துளைத்தெடுத்தேன்.  கணணி என்னவெல்லாம் செய்யும், நாம் என்ன செய்ய வேண்டும்.  அவன் சற்று பிகு செய்து கொண்டான்.  ஆயினும் நமக்கு படிப்பதற்கெல்லாம் அப்போது வசதியில்லை.   C, C++, Cobal, Foxpro.    ஆம் இதெல்லாம் என்ன?

முதுகலை வணிக மேலாண்மை படிக்கையில் ஒரு பாடமாக இந்த C++ programme  எழுதி தேர்ச்சி பெற்றது வேறு விடயம். இன்று C++ என்ன என்று கேட்டால் நிச்சயமாக தெரியாது.

1996 ல் என ஞாபகம் எனது நண்பன் வெங்கடேசன் கணணியில் கடிதம் அடிப்பதை கற்றுக் கொடுத்தான்.   DOS  application போய்  windows 3.1  வந்த நேரம் என நினைக்கிறேன்.( window வில் தட்டச்சு செய்வது எளிதாக இருந்தது) Lotus 123, spread sheet, word இதை Dot Matrix printer ல் அச்சாகி வரும் போது பார்த்ததும், இப்போது lazer jet ல் அச்சாகி வரும் வேகத்தை பார்க்கும் போதும் வளர்ச்சி நன்றாகவே புரிகிறது.
1997 ல் கணணி இருக்கும் அலுவலகத்தில் வேலை.  ஆனால் அதை உபயோகிக்கும் நண்பர்கள் நம்மை உள்ளே அனுமதிக்கவே இல்லை.  அங்கே ஒரு நண்பரை தாஜா செய்து உணவு இடைவேளையின் போது உள்ளே நுழைந்து வண்ணமயமான அந்த பெட்டியை பார்த்தேன்.  எல்லோரும் EDP அறையில் நுழைகிறார்கள் என்று புகார். 
ஒரு கணணியின் விலை ரூ.70000 லிருந்து வேகமாக இறங்கி கொண்டிருந்த நேரம்.  நாமும் ஏன் ஒரு கணணி வாங்க கூடாது என்ற எண்ணம் துளிர் விட்டது. 

நாம் ஒரு கணணியை வாங்க வேண்டும் என்ற விருப்பத்தை  நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.  பாபு எனும் நண்பன், அவனின் நண்பனிடம் சொல்லி ஏற்பாடு செய்வதாக சொன்னான்.  அந்த நண்பர் மிகப் பெரிய நிறுவனத்தில் கணணி maintenance engineer.  உபயோகப்படுத்த இயலாது என்று சொல்லி கழித்து நமக்கு ஒரு கணணி ஏற்பாடு செய்து விட்டார். 

colour monitor என்றால் விலை கூடுதல், CD player  என ரூ. 10000 செலவில் வீட்டிற்கு ஒரு கணணி வந்து இறங்கியது 1998 இறுதியில் என நினைக்கிறேன்.

Hyundai  colour monitor, Pentium 100, 16 MB  RAM, 2GB HDD, CD player, Speaker. இரவும் பகலும் கணணியோடுதான்.  சிவக்குமாரை கூட்டி வந்து காண்பித்தேன்.  பாபுவின் அறிமுகமே சிவக்குமாரால்தான்.

நமக்கு அலுவலகத்திலும் ஒரு கணணி கிடைத்து விட்டது அதுவும் 1998 இறுதியில்.  மறுபடியும் நண்பன் பாபுதான் உதவி.  இணையம் பற்றிய அறிவு அவனிடமிருந்துதான் பெற்றேன்.  கணக்காளான் என்பதால் அலுவல் தொடர்பான tally கற்றுக் கொள்ள வேண்டும் என அவா.  அதுவும் பாபுதான் கற்றுக் கொடுத்தான்.  பிறகு பட்டாபிராமன் எனும் இன்னொரு நண்பன் வளர்த்தெடுத்தான்.  ஆக எந்த பயிற்சி நிலையமும் செல்லாமல் கணணி கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

இமெயில் வசதி அலுவலகத்தில் இல்லை, ஒரு மணி நேரத்திற்கு அப்போது ரூ.25 வசூலிப்பார்கள்.   நண்பன் பாபு மூலம் நான்கு எழுத்தில் rediffmail ல் ID தொடங்கினேன்.  இன்று வரை இருக்கிறது.  வலையில் மேய மாதம் ரூ. 150 செலவு. அலுவலகத்தில் ஒரு மோடம் வாங்கினேன்.  வீட்டிற்கு ரூ.3200 செலவில்  D-link மோடம் வாங்கினேன்.

இந்த நேரத்தில்தான் southindia.com  ல் discussion forum என்ற பிரிவில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.  அதில் நாமும் பங்கு கொண்டோம். முகம் தெரியாதவர்களோடு விவாதம். இனிமையாகதான் இருந்தது. சில மாதங்களில் அந்த வசதி அந்த தளத்தில் இல்லை. 

1983-84 தமிழ் தட்டச்சு பயின்றதால், கணணியில் தமிழில் தட்டச்சு செய்ய அவா கொண்டு, அது தொடர்பான மென்பொருள் தேடியலைந்தது தனிக்கதை…..
கால ஓட்டத்தில் 2007 ல் ஒரு மடிக் கணணி வாங்க நேர்ந்தது.  கணணியை மின்னஞ்சல் பார்ப்பதற்கும், வேறு அலுவலக உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.

2009 மத்தியில் கூக்குளாரிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தேன்.  அப்போது 1998 இறுதிவாக்கில் விவாதம்செய்த Discussion forum நினைவு வர தேடினேன், வந்த விழுந்தன வலை தளங்கள்.  நமக்கு ஒரு தளம் எப்படி செய்வது    என தேடி, 2009 இறுதியில் நமது பெயரில் பதிந்த  முதல் படைப்பு  http://velvetri.blogspot.in/2009/12/86-30-60-2-1.html

தருமி அய்யா அவர்கள் எனது அனுபவத்தை எழுத அழைத்ததால் இங்கே இதை பதிவு செய்கிறேன்.  அவரும் அடியேனும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்.  ஆனால் இங்குதான் (வலையில்) நாங்கள் அறிமுகமானோம்.  எங்களுடைய வேர் இறுக காரணம் சொந்த கிராம பற்று என்றாலும், பல்வேறு கருத்துக்களில் அவரின் எண்ணங்கள் எனக்கும் ஏற்புடையது என்பதால் வேர் இன்னும் இறுகி இருக்கிறது.




5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கிராம பற்றுடன் "கணணியும் நானும்" சுவாரஸ்யம்...! வாழ்த்துக்கள்...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் வேல் முருகன் - பதிவு நன்று - 70000 என்ன - அக்காலத்தில் 180000 க்கு மேசிக் கணீணீ வாங்கி பராமரிப்புச் செலவாக் ஆண்டுக்கு 18000 கட்டியதெல்லாம் நினைவில் இருக்கிறது ( 1983-84) - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கும் நினைவுகள் என்றுமே சுகமானதுதான். பகிர்வுக்கு நன்றி ஐயா

பெயரில்லா சொன்னது…

கணனி அனுபவம் வாசித்தேன் .
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

kowsy சொன்னது…

கணணி அனுபவம் வாசித்தேன்.1998 இல் இருந்து இன்றுவரை உங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக் கணனித் தொடர்பு ப்ளாக் உடன் மேலும் நெருக்கமாகியது அல்லவா. உங்கள் கருத்துக்களுடன் என்றும் இணைவேன் . வாழ்த்துகள்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...