செவ்வாய், ஜூன் 22

கடை

 





வருமானத் திற்குவழி வாழ்வழிக்கும் கள்ளோ
பெருமான் கடைத்திறக்கப் போராட்ட மில்லையோ
தீர்க்கமா மூடாது திக்கெட்டும் விற்கவா
தேர்ந்தெடுத் தாய்புது தேர்


எதிரணியாய் கேள்வி ஏகமாய் கேட்க
அதிகார நாற்காலி ஆட்பட்டக் கையோடு
அத்தனையும் மறந்து அரசு நடத்திட
நித்தமுமுண் டென்றார்இந் நீர்


பெருந்தொற்றுக் காலத்தில் பொய்யான பிம்பம்
பொருளோ டாயிரம் போட்டுக் கொடுக்க
இருளகற்றும் தேவனென்று இச்சகம் பேசும்
பெருங்கனவில் ஏமாற்றம் பார்!

அம்மா





தன்நலங் கருதாது தோன்றலின் வாழ்வினை
என்நாளும் வேண்டுவது ஏற்றமிகு அன்னை
கனவை விதைப்பதும் கற்றுத் தருவதும்
அன்பைப் பொழிவது மவள்


சேய்வளர்ந்து செல்வச் சிறப்போடு வாழ்ந்தாலும்
தையலால் மாதாவை தீயாய் வதைத்தாலும்
சேய்க்கு நோயென்றால் சோர்ந்தே அரற்றும்
நேயம் மிகுந்தவள் தாய்


அற்புத வாழ்வினிலே அம்மா எனிலன்பு
பொற்பாதம் பின்தொடர பொன்னான வாழ்வு
உறவென ஓராயிரம் உன்னைத் தொடர்ந்தாலும்
சிறந்தவள் தாயென எண்

சனி, ஜூன் 19

உழவன்

 






உலகம் உயர்வுற ஊனுறக்க மின்றி
நிலத்தைப் பயிரிட் டுணவை நிதமும்
சகலருக்கும் ஈபவனைச் சாக்காட்டில் வீழா
மிகிழ்வுறச் செய்வதே மாண்பு

செவ்வாய், ஜூன் 15

நாணமற்ற மாந்தன்

 


புல்லறிவாண்மை

குறள் 846:

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.



ஆடைக் கட்டி அற்றத்தை
......ஆங்கே மறைத்து பயனென்
மூடன் குற்றத்தை மறைக்க
......மூடும் ஆடையால் பயனென்
மூடர் நினைப்பர் உயர்வாய்
......முரண றியாத கீழறிவால்
கோடைக்கு ஆடை விடையென
......கோணன் எண்ணும் அறிவால்


திருந்த திருத்தல் சரியே
......திருக்கு மறைக்க பிழையே
வருந்த பெருவாய் நீதியே
......வஞ்ச கனெனில் வீழ்வாயே
பெருங்குற் றந்தனை நாணி
......பிறரறியா நீக்க அழகே
ஒருங்கல் தொடர மனிதா
......உருமறைக் குமாடை வீணே

கற்றும் கல்லார்

 






புல்லறிவாண்மை


குறள் 845:


கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.


அறியாததை அறிந்ததாய்
….. அறிவில்லார் உரைத்திட
அறிந்ததை அறிந்தாலும்
…… அய்யுறுவர் உலகத்தவர்
அறியாததைப் பிழையுடன்
….. ஆங்கே பொழிந்திட
நெறியிலார் இவனென
….. நினைவூட்டி காட்டிடும்


கற்றதைக் கசடற
…… கற்று இருந்திட
மற்றதை அறிந்ததாய்
….. மயக்கிப் பசப்பிட
கற்றவர் ஒப்பிடார்
….. கல்லாமை உணர்வரே
வெற்றியை விரும்பிட 
….. வேண்டாம் பொடிதலே

சனி, ஜூன் 12

நட்பு அறி








நட்பாராய்தல் : 
குறள் எண்:792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்



குற்றம் ஆய்ந்து
.....குணமும் ஆய்ந்து
சுற்றம் கொள்ள
.....சுகமே பெருவாய்
முற்றும் அறியா
.....முதிரும் நட்பில்
முற்றல் மட்டும்
.....முகாரி ஆகும்



பிறக்கும் போதே
.....பின்தொடரும் உறவா
சிறக்கும் நட்பை
.....சீர்தூக்கிப் பார்த்தே
உறவோர் ஆக்கு
.....உவரை ஏற்றால்
பிறகோர் துயரம்
.....பிணக்கா டுவரும்

அன்பா அறிவா






சாதகப் பறவைகள்
.....சாசனம் எழுத
காதக தகப்பன்
.....காதலை முறிக்க
நூதன வழியில்
.....நுண்ணிடைத் தப்ப
மாதவ மாதம்
.....மாறனை மணந்தாளே


காதல் இணைகளுக்கு
.....கனவு சுமையாக
வாதம் வம்பாக
.....வஞ்சியும் குறும்பாக
ஆதன் என்றாள்
.....ஆர்வலன் பழித்தான்
பேதம் பிறக்க
.....பெரும்பிழை என்றானே


அன்புடை நெஞ்சத்தை
.....அறிவியல் விளக்கா
அன்பினை அறிவால்
.....அளந்திட விளங்கா
ஒன்றிட வேண்டில்
.....உயர்தவர் துலையர்
அன்றிலில் இலையென்று
.....அறிவது அழகே

வியாழன், ஜூன் 10

ஒன்றியத்தில் தமிழ்நாடு







அகம்பலக் கொண்ட
....அருமை நாடு
சகலரும் ஒன்றே
.....சட்டம் பாரு
சிகரமாய் வென்ற
....சிங்காரத் தமிழுக்கு
அகரமாய்த் தமிழ்நாடு
....ஆகட்டும் வளநாடு


ஒன்றியம் என்றால்
....உனக்கேன் கவலை
அன்றிலாய் வாழ
....அடித்தளம் அதுவே
அன்றியும் அழைக்க
..... அடிமையா தமிழன்
குன்றிடா ஒன்றியத்தில்
....கூடிடு தமிழனென்றே

கன்னல் தமிழ்








கன்னல் தமிழை
.....கண்ணாய்ப் போற்று
இன்னல் வந்தால்
.....இறந்து காப்பாற்று
என்னில் தாயே
.....எனவே வணங்கு
உன்னில் மொழியே
.....உறவைத் தொடங்கு


அம்பலம் ஏறா
.....அன்னைத் தமிழை
அமணர் வகுத்த
.....அற்புத வழியில்
கம்பன் அல்ல
......காளையர் காப்பர்
நம்பன் முருகன்
.....நம்பி யாருமில்ல


மும்மொழியை வேண்டுவர்க்கு
......முக்கனியின் இனிமையை
செம்மொழியாம் தமிழின்
.....சுவையை கூறிடுவாய்
எம்மொழிக்கும் ஈடில்லை
.....என்னினத்தின் அடையாளம்
அம்மொழியே தமிழாம்
.....அதனால் வாழியவாம்

வெள்ளி, ஜூன் 4

எம்மை இயக்கும் ???.............

 



எம்மை இயக்கும் இறைவன்
யாரோ சிலரறிவார் போலும்
தம்மைத் தூற்றும் நாத்திகனை
தடுதாட் கொள்ளும் நாயகன்
அம்பலத்தில் அடையாள மாகிடவே
அவர்கள் ஆம்மென்று ஆவாரோ
கம்பளம் விரித்தேக் காத்திருக்கும்
கிறித்து அல்லா இந்துவல்ல

நாத்திக வாதத்தில் நாவாய்
நர்த்தன மிடுபவனும் அவனே
ஆத்திகர் அற்புதமாய் ஏய்க்க
அளித்த விளக்க மிதுவே
நித்தமும் காக்கும் இறையெனில்
நிற்கதியாய் மாளும் நிலையேனோ
துதித்தாலும் பக்தியில் லையென
துணையாய் வாரா திருந்தாரோ

இந்திரன் வருணன் என்றே
இல்லாதார் பட்டியல் நீளும்
இந்த வரிசையில் கிரேக்க
ஹீரா ஜுயஸ் தொடரும்
உந்திப் பெருக்க ஏமாற்றி
உதிரம் குடிக்கும் கூட்டத்தை
சந்தியில் நிறுத்திக் கேட்டால்
சூதாய் நம்பிக்கை என்றிடும்

நம்பிக்கை என்றே நால்வர்
நாலுச் சுவற்றுள் துதிக்க
அம்பிகை, அல்ல அவரவர்
ஆண்டவனை தடுப்பர் யாரோ
சம்புகன் ஏகலைவன் ஏமாந்த
சரித்திரம் தொடருமென நினைப்பில்
வம்பிழுக்க நாத்திகனை இயக்குவது
வரனருள் என்று ரைப்பவரோ

மற்ற இறையை மறுதலிக்கும்
மாண்புறு நாத்திகர் இவரே
முற்றும் மறுக்கும் நபரை
முட்டாள் என்றவரும் இவரே
வற்றும் அறிவால் தூற்றி
வழங்கும் பட்டங்கள் பலவே
சீற்றம் தனிந்தே சிவனருள்
சேரட்டும் என்றதனால் வாழ்கவே

வியாழன், ஜூன் 3

இரங்கல் எழுதாத நாளில்லை

 

 


 

இரங்கல் எழுதாத நாளில்லை

     இகலார் என்று யாருமில்லை

அரசன் ஆண்டி பேதமில்லை

     அய்கோ கண்ணில் நீரில்லை

தரணியில் தீராநோய் ஒன்றில்லை

    தீநுண்  மிக்கோத் தீர்வில்லை  

மரணம் ஒன்றும் புதிதில்லை

    மனதிற்குத் தாங்கும் திடமில்லை   

 

பிரம்மனும் பரமனும் துணையில்லை

    பேதையர் நம்பிக்கைக் காக்கவில்லை

அரற்றும் நிலைக்காணத் தாளவில்லை

     ஆதரவாய் அவர்களுக்கு ஒன்றுமில்லை

கிராமம் நகரமென எல்லையில்லை

     காற்றில் பரவத் தடையில்லை

சீரான வாழ்வு திரும்பவில்லை

     சோராதிரு வேறு வழியில்லை

 

ஊரடங்கு நீடிக்க விருப்பமில்லை

      உழைத்து பொருளீட்ட வாய்ப்பில்லை

பாரங்கே தடுப்பூசிக் கிட்டவில்லை

      பலகாலம் காத்திருக்க மனமில்லை

நெருங்கிப் பழகிய உறவில்லை

      நேற்று இருந்தார் இன்றில்லை

சுருங்கி போனது உலகமில்லை

      சுற்றித் திரிந்த நாமன்றோ


மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...