ஏழெட்டுப் பொருத்தம்
எனக்கும் அவனுக்கும்
வாழட்டும் என்றே
வழியனுப்பி வைத்தது
பாழும் கிணரென்று
பாதகத்தி அறிந்தாலும்
சூழல் இல்லையே
சுற்றத்திடம் சொல்லியழ
மனப்பொருத்தம் இல்லாத
மணவாழ்வு இனிக்குமோ
என்வருத்தம் எதுவென்று
எனையீன்றோர் அறிவாரோ
சினமிருந்தும் கட்டியவனின்
சிறகொடிக்க மனமில்லை
வனவாசம் என்றானபின்
வாழ்விற்கு காரணமில்லை
பொருந்தா வாழ்வுதனில்
பொலிவுற வழியில்லை
இருந்தாலும் கனவுகள்
இருளகற்ற போராடுது
வருந்தாத இணையோ
வளையவளைய வருகுது
திருந்தாத மடங்களுக்கு
திசைக்காட்டியும் விளங்காது
ஆசையா நெருங்கவும்
அன்பேயென அரற்றவும்
யாசகமா கேட்பது
இயற்கைக்கு முரணானது
வேசையென பட்டமளித்து
வேண்டாத பொருளாக்க
காசினியில் இருந்தென்ன
காலனிடம் சென்றாலென்ன
வசந்தத்தை மறக்க
உளரும் ஊருக்காக
ஒருவேடம் தரிக்க
தளரும் இளைமைக்கு
தண்டணை கிடைக்க
துளங்கா வாழ்வில்
தூண்டுதல் தானாரோ
சுவர்க்கம் தேடினேன்
சூன்யம் சூழ்ந்தது
சுவாசம் நிறுத்திட
சுவரொன்று தடுத்தது
விவாக ரத்தென்றாலும்
விமோசனம் மறுத்தது
உவர்நில மென்றாலும்
உயிரோடு இருக்கிறேன்
எனக்கான வாழ்வு
என்றுதான் கிட்டுமோ
அனலான நெஞ்சமது
அமைதி அடையுமா
புனலாக புதுவாழ்வு
பூரிப்பை தருமோ
வினாவிற்கு விடையுண்டு
விகற்பத்திற் கேதுமில்லை