செவ்வாய், அக்டோபர் 24

நெஞ்சமும், அவளும்

 




அறிவாய் தானே

அடைப்பட்டு கிடப்பதை
சிறிதும் கவலை
சிறைமீட்க இல்லையோ
முறிந்தது அன்பென
முகமெதிர் சொல்லி
குறிப்பை உணர்த்த
கூர்மதி நினைக்க

அன்பே என்று
அருகில் வந்தான்
இன்முகம் கண்டு
எனையே மறந்தேன்
புன்னை நிழலில்
பொழுதும் போனது
முன்னை நினைத்தது
முற்றும் மறந்தது

காலங் கடத்தும்
கள்வனைக் கண்டிக்க
ஏலாதோ நெஞ்சே
ஏசாமல் விட்டாய்
கோல முகத்தினை
கோணலாக்க மறந்தாய்
ஆலகாலச் சொல்மறந்து
அமுதமொழி மொழிந்தாய்

அத்தான் அருகிருக்க
அண்டம் சுழலுதே
பித்தான நெஞ்சமும்
பின்னாலே போகுதே
முத்தான சொல்லில்
மூச்சை நிறுத்தினானே
நித்தியம் இதுவென
நினைக்கயில் பிரிந்தானே


செவ்வாய், அக்டோபர் 17

காமம்





கடக்க முடியாததா
கரையற்ற பால்வெளியா
அடக்க முடியாததா
ஆசையின் அளவற்றதா
தொடங்கிடத் தொடருமோ
தொடராதெனில் மாளுமோ
முடக்குமோ முனிவனையும்
முதுமொழி கற்றோரையும்

விருந்தாய் கொண்டால்
விளையும் அன்பு
விருந்தே கதியெனில்
விளையும் துன்பம்
விருந்தெனும் நினைப்பே
விரக்தியில் தள்ளுது
மருந்தென நினைத்தாலும்
மனதைக் குழப்புது

இக்கணமே வேண்டும்
இல்லையேல் என்போரே
சிக்கலில் சிக்குவர்
சிற்றின்ப பாதையில்
சொக்கும் காமம்
சுகமான விருந்தென்று
பக்குவ மடைந்தோர்
பட்டறிவில் தெளிவர்

நினைக்கும் மனதை
நிறுத்திப் பாரு
அனைத்தும் விளங்க
அறிவைக் கேளு
புனைந்த இன்பதுன்பம்
புத்தி உரைப்பதே
எனவே காமம்
இழிவல்ல இனிதுமல்ல

விருந்தின் விளைவோ
விரைவில் முடிவுறும்
அருந்திய சுகங்கள்
அன்றோடு மறையும்
கருத்தாய் உரைப்பேன்
காமம் கட்டுப்பட்டதே
இருப்பினும் மறுப்பேன்
இடறிய சிலருக்கே

புதன், அக்டோபர் 11

பேசிப் பேசிப் பிரிவினையா?




பேசிப் பேசிப்
பேழையில் அமுதம் பருக
யாசிக்கு மிவனை
யாத்திரையில் தொலைத்த தேனோ
ஏசி உன்னை
என்குற்ற மில்லை என்றேனா
ராசி யாகி
ரட்சித்துக் கொள்ளடி என்றேனே


வந்து வந்து
வதைக்கும் எண்ண அலைகள்
பந்தம் தந்து
பலரும் வாழ்த்திய கதைகள்
சந்த நயம்
சரிசெய்ய காலம் அளித்தால்
இந்த உலகம்
இனியது என்று கதைப்பேனோ


உனது முடிவுகள்
உந்தன் தேவையின் பொருட்டு
எனது அன்பும்
எந்தன் தேவியின் பொருட்டு
மனதின் காயமோ
மாறுபடும் உறவின் பொருட்டு
வினாவின் நியாயமோ
விலகியே நிற்கும் இருட்டு


தேவியின் தேவைகள்
தேடிட கிடைத்திட வேண்டும்
புவியில் உள்ளவரை
பூரணநலத் தோடிருக்க வேண்டும்
குவியும் புகழ்தனில்
குதுகலித் திருக்க வேண்டும்
துளியும் என்நினைவு 
துளிர்விடா திருக்க வேண்டும்

செவ்வாய், அக்டோபர் 3

காதற்கணை

 



குறள் 1100

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

 



கனியக் கனியப் பேச
காதல் வளரா
தனித்தச் சொல்மொழிந் தாலும்
தவத்தில் கிட்டா
இனிய கண்க ளிரண்டு
இசைக்கும் மொழியில்
புனிதக் காதல் மலருமே
புவன மெங்குமே


வனைந்த சொற்கள் பலவால்
வாராக் காதல்
சுனைபோல் சுரக்கும் கண்ணில்
சுழலும் பாரீர்
வினையாய் மாறிச் சொற்கள்
விளைவைச் சுருக்குமே
நினைத்த வுடனெழும் காதலில்
நீள்விழி இணையுமே

 

ன்பன்
அ. வேல்முருகன்

 

திங்கள், அக்டோபர் 2

ஐம்புலனின்பம்



அத்தனை இன்பமும்
அவனுட னிருக்க
நித்தமும் கிடைக்க
நிச்சய மேதுமில்லை
வித்தைக ளனைத்தும்
விளைந்திடும் பருவத்தில்
அத்துபடி யாகிட
அனைத்திலும் இன்பமே

ஐம்புல னின்பம்
அவனருகி லிருக்க
இம்மை யில்லல்ல
இளமையில் காணுவதே
கம்பன் வருணித்ததை
கண்களால் காண்பதும்
எம்மான் பேசிட
என்றென்றும் கேட்பதும்

வகைவகையா சமைத்து
வாலிபத்தில் உண்பதும்
திகைக்கும் வண்ணம்
திணரும் நறுமணத்தை
வகைக்கொன்றா வாழ்வில்
வரிசையாய் நுகர்வதும்
உவகை கொள்ளின்பம்
உடலுக்கு வேண்டுவதும்

இளமைப் பருவத்தின்
இயல்பான தேவைகள்
களவு மணத்தில்
களிப்புற்று வாழ்ந்ததை
தளர்ந்த பருவத்தில்
தள்ளி வைத்திடலாம்
வளர்ந்த உள்ளங்களே
வாழ்வை ரசியுங்கள்



தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...