வியாழன், நவம்பர் 19

தேவதையின் துலாக்கோல்




கருப்பு அங்கிகளின்
கௌரவம் காக்கும்
தேவதையின் துலாக்கோல்
கண்கட்டு வித்தை

விருப்பு வெறுப்பின்றி
விறுவிறுப்பான வியாபாரம்
வியாக்கியானம் தேவையில்லை
அங்கீகரிக்கப்பட்டது

கொள்ளையர்களிடம் மனசாட்சியை
தட்டியெழுப்பும் துலாக்கோல்
இல்லாதவர்களிடம் இரக்கமின்றி
இ.பி.கோவை நீட்டி முழக்கும்

தில்லை நடராசனுக்கு
தீச்சட்டி வாரிசுகள்
தீட்சிதர்கள் மட்டுமேயென – ஆகம
விதியெழுதும் துலாக்கோல்

பளுவிற்கேற்ப
பணம் நிரப்ப
துல்லியமாய் நிற்கும்
துலாக்கோல் – கண்கட்டு வித்தையல்ல

பணம் குறைந்தால்
இ.பி.கோவை ஏற்றி
சட்டம் கடமையை
செய்ததாய் சப்பைகட்டும்

கௌரவ கொலைகள்
காணாத மலைகள்
தாதுமணல் குழிகள்
தப்பிக்கும்வழி – துலாக்கோல்

மாட்சிமை தங்கியவர்கள்
மரபுகளுக்குள் ஒளிந்தனர்
மாண்புகளை காக்கவேண்டுமென
வேதம் ஓதுகின்றனர்

தட்டில் நிறுத்தப்படுவது
குற்றமா? நீதியா?
பணமா? பதவியா?
நேர்மையா? குறியீடா?

சட்டமியற்றுபவன்
சட்டம் படித்தவனா
சமூக அக்கறையாளனா? – அட
ஓட்டுப் பொறுக்குபவன்

ஓட்டுப் பொறுக்கிகளின்
ஓட்டை உடைசலுக்கு
பேரிச்சம் பழமளிப்பது
துலாக்கோலின் வேலை

துல்லியமில்லா துலாக்கோலென
தூக்கியெறிய - பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு
முணுமுணுக்க வேண்டும்

ஊழல் மேடையை
உடைக்கா சுத்தியலை
அடை காப்பதால்
எடையில் மாற்றமில்லை

குடி ஆட்சியில்
நீதி அரசர்கள்
குறுநில மன்னர்கள்
கப்பம் கட்டுகிறார்கள்

பிஆர்பி, வைகுந்தராஜன்
அம்பானி, வேதாந்தா அகர்வால்
டாட்டா பிர்லா இன்னும் பிற
கல்வி வள்ளல்கள்

சதவிகிதங்களில் பேரமென்பதால்
சதவிகிதங்களில் ஆமோதிப்பு – ஆம்
25 சதவிகிதம் ஊழல்
துலாக்கோல் ஒப்புதல்

விசாரணை – விலையென்ன?...
கேள்விதானே? – விலையா?..
கைது!!!! உடன்படுகிறாயா – இது
கட்டை துலாக்கோல்

கேள்விகள் கேட்கப்படும்
ஆம் இல்லையென்றே
அரற்ற வேண்டும் – இல்லையெனில்
புழலுக்கு செல்ல வேண்டும்

எதிர்கேள்வி துலாக்கோலை
எதிர்பதாகும்  - துல்லியமானதை
தென்றலும் தீண்டலாகாது – ஏனெனில்
புயலை உருவாக்கலாகாது

ஒய்யாரக் கொண்டையில்
ஊழலை மறைக்க
ஊரெல்லாம் நாறுதே
“உத்தமன்” வில்லனானே

மூப்பெய்தியது துலாக்கோலென
மரியதையாய் அனுப்புவோமா?
முச்சந்தியில் நிறுத்தி
முத்தான தீர்பளிப்போமா



மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...