புதன், நவம்பர் 15

மரணமா மதங்களுக்கு





நிலையானது ஏதுமில்லை
ஆன்மா இல்லவே இல்லை
துன்பம் உண்டு

தோன்றியது மாறும்/மறையும்
எனக்கு மீறிய சக்தி
எதுவெனக் கேள்

ஆம். உண்மையை
உரக்கச் சொன்னால்
மார்க்கம் மரணித்துப் போகும்

ஆசையே துன்பங்களின்
அடிப்படைக் காரணம்
அய்யோ வேண்டாம் பௌத்தம்

அனைவரும் சமம்
ஆன்மாவே கடவுள், பற்றற்றிரு,
என்றதனால் துரத்தினர் சமணத்தை

கற்பித்தவன் மக்கலி கோசாலர்
கல்வெட்டு ஆதாரமில்லை என்பதால்
கடைபிடிக்கவில்லை ஆசிவகத்தை

கடமையைச் செய்
பலனை எதிர் பாராதே என்றாலும்
கடவுள் அருளியதால் கடைபிடிக்கறோம்

என்னை நம்பு
நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை
என்னையன்றி ஓரணுவும் அசையாது

நால் வருணத்தை படைக்க
நான்முகன்
மூவுலகை காத்திட விஷ்ணு

படைக்கும் மந்திரத்தை படைத்தவன்
அழிக்கும் தொழிலின் நாயகன்
ஆனந்த தாண்டவமிடுபவன்

அண்டச் சராச்சரங்களை
ஆதியும் அந்தமமும் இல்லாதவன்
காத்திடும் பலகதைகள்

இந்துவாக ஒருங்கிணைந்தனர்
அதர்மம் தலைத்தூக்க
அவன் வருவானென காத்திருக்கிறார்கள்

பாவத்தின் சம்பளம் மரணம்
பாவிகளை மிரட்டினாலும்
பாவ மன்னிப்பு உண்டு

பரிசுத்த ஆவியால்
பிறப்பைக் கண்டவர்
மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்

பத்துக் கட்டளைகளை மறந்தாலும்
பாவிகள் இரட்சிக்கப்படுவார்கள்
பக்தியோடு திருச்சபைக்கு வந்தால்

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்

வணக்கத்திற்குரியவன்
அல்லாவை தவிர
வேறு யாருமில்லை

அல்லா அனைத்தையும்
கவனித்துக் கொண்டிருக்கிறான்
தீர்ப்பு வழங்க வருவான்

தொழுகையும், நோன்பும்
மற்ற நற்காரியங்கள்
அல்லாஹ்வுக்கு விருப்பமானவை

துன்பத்தில் உழலும் போது
தேடி அழைப்பாயெனில்
வழி காட்டுவர்

தீய கருமங்கள்
தேவையைப் பொருத்தே
நிகழ்கிறது

எனவே தண்டனைகள்
இவ்வுலகில் கிடைத்தாலும்
மேலுலகில் மன்னிக்கப்படுகிறது
அனைத்தும் நானே
நம்பிக்கையோடு வா
நற்கதி அளிக்கிறேன்

நால்வகை மதங்கள்
நம்பிக்கையை விதைப்பதால்
நீண்டு வளர்கிறது மதம்

என்னையே கடவுளாய் ஏற்பாய்
இருக்கும் கிளைகளெல்லாம்
போலி என்றே உணருங்கள்

ஏமாறும் கூட்டம்
எண்ணிகையில்
பெருகிக் கொண்டிருக்கிறது

காசு உள்ளவன்
கடை திறக்கிறான்
கல்லா நிரப்ப மட்டுமல்ல

அதிகார வர்கமாய்
அய்யோ பாவங்களை
ஆட்டிப் படைக்க

ஆசையைத் துறப்பதும்
அவன் எனக்கு சமமா என்பதும்
அடிப்படையில் வேறு வேறு

ஆக
ஆசிவகம், பௌத்தம்
சமணம் சாமதியானது.





பாலஸ்தீனம் இஸ்ரேலாகிய கதை


















ஆபிரகாமின் புதல்வர்கள்
இஸ்ரவேலரின் குழந்தைகள்
கடவுளை ஒளியாய் கண்டவர்கள்
யூதர்களாம்

யூதனாய் பிறந்தவன்
இறைதூதன் என்றே வந்தான்
இறைவனாக்கப் பட்டான்
கிருத்துவனாக்கப்பட்டான்

அந்த மண்ணிலிருந்தே
அவதரித்த முகமது நபி
தானும் இறைதூதனென்றான்
அல்லாவே கடவுளென்றான்

யெருசலேம் என்பது
அமைதியின் உறைவிடமாம்
மும்மதத்திற்கும்
புனித இடமாம்

கிமு-வில்
கிரேக்கத்தின் அடிமையாய்
கிபி-யில்
இட்லரின் இரையாய் யூதர்கள்

1948 வரை
இஸ்ரேல் எனும் நாடு
உலக வரைபடத்தில்
ஒரு புள்ளியாகவும் இல்லை

நாடு கட்ட யூதர்கள்
பணம் கொடுத்து
பாலஸ்தீனர்களின் பாலையை
பட்டா நிலமாக்கினர்

பத்தாது என முடிவெடுத்து
படைத் திரட்டி ஆக்கிரமித்தனர்
அமெரிக்காவும் இங்கிலாந்தும்
ஆமோதித்தது

இஸ்ரவேலரின் பிள்ளைகள்
பத்துக் கட்டளைகளை
பரிதவிக்க விட்டு
இஸ்ரேலை உருவாக்கினர்

மேற்கு முனையும்
காசா துண்டும்
பாலஸ்தீனர்களின்
பற்றாக்குறை தேசமானது

ஐக்கிய நாடுகள்
ஆட்டத்தை வேடிக்க பார்க்குது
அரபு நாடுகள்
அரற்றிக் கொள்ளுது

பாலஸ்தீனியர்கள்
அவர்கள் மண்ணில்
அந்நியப் பட்டு நிற்கிறார்கள்
அனுதாபங்கள் வேண்டாம்

அகிலத்தின்
அறிவுஜீவி என்று
அரற்றிக் கொள்ளும் யூதன்
மனிதனைக் கொல்கிறான்

பணம் கொடுத்து வாங்கியவன்
பகட்டாய் வாழ்வதும்
பணத்தால் ஏமாந்தவன்
பரதேசியாய் வாழ்வதும்

மதங்கள் போதித்தவையா
மானுடம் மறந்தவையா
மண்ணின் மைந்தர்கள்
மனிதனாய் இருப்பதில்லையா?

பரிசுத்த வேதகாமம்
பாவிகளை உருவாக்குகிறது
தோராவும் குரானும்
குறுக்கே வாராது நிற்கிறது

பாவ மன்னிப்பு
பரலோகத்தில்
பார்த்துக் கொள்ளலாமென
யூதர்கள் யோசித்தார்களா

குழந்தைகளையும்
மருத்துவ மனையையும்
குறிப்பிட்டுத் தாக்கும்
இலக்கானதேன்?

நாடிழந்து
நட்டநடு காட்டில்
கூடாரத்தில் வாழும்
கற்காலச் சூழலேன்

அகதியாய் வெளியேறவும்
ஆங்கே வழியில்லை
எல்லைகளை மூடி
அப்பாவிகளை முடுக்குவதேன்

மானுடமென்பது
மனிதனை மனிதன் நேசிப்பது
மதங்கள் என்றும்
மனிதனை உலகில் பிரிப்பது

மூன்றடி மண் கேட்ட
புராணக் கதை தெரியுமா
இன்று இஸ்ரேல்
ஏவுகணைகளால் கேட்கிறது

ஞாயிறு, நவம்பர் 5

வாழத்தானே இணைந்தனர்

 



கண்கள் கனிய
காதல் அரும்பியது
கைப் பிடிக்க
கழுத்து அறுப்பட்டது

விரும்பிய உள்ளங்கள்
வீம்பான பெற்றோர்கள்
விலையானது உயிர்கள்
விளையுமோ அன்பு

விளைந்த அன்பை
வேரறுக்க நினைத்தது
வேண்டாத சாதியில்லை
வீரதீரமிக்க ஆணாதிக்கமே

வாழத்தானே பெற்றாய்
வாழத்தானே இணைந்தனர்
வழியில் வந்ததெது
வரட்டு கௌரவமா?

சிந்தனைகள் மாறிட
சிந்திய ரத்தங்கள்
சீராக்குமா சமூகத்தை
சீழ்பிடித்து மாளுமா?

சாதியும் கடவுளும்
சரிசமமா யில்லை
சக்ரவர்த்தியும் சமானியனும்
சம்பந்தி யாகுவதில்லை

சந்ததி தழைக்க
சரித்திரம் படைக்க
சமத்துவம் கொடாது
சாக்காட்டைத் தந்தானே

உலக இயக்கத்தின்
உன்னதம் காதலே
உலகறிவற்றவனே
உயிரைக் கொய்தானே

உயிர்கள் ஒன்றென
உணர்ந்திட முடியாதோ
உறவைக் கொண்டாட
உன்மதம் தடுக்குதோ

ஐந்தறிவும்
அன்போடு வாழுதே– உன்
அகங்காரம்
அக்காதலைக் கொல்லுதே

ஊரும் உறவும்
உருகி அழுகிறது
உருவ மழிக்க
ஊழென இருப்போமா

முயன்ற உள்ளங்களை
முகிழ விடாது
முக்கரம் கொன்றாலும்
மூளுமே காதல்தீ

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...