ஞாயிறு, மார்ச் 5

அகலிகை




அகலிகை, சீதை, திரௌபதி,
தாரை, மண்டோதரி - பஞ்ச
கன்னியரென மகாபாரதம் உரைக்க

அவர்களில் அகலிகை
கௌதம ரிஷியின்
மனைக் கிழத்தி

வால்மீகி, கம்பன், துளசி
எழுத்தச்சன், தொரவே
இராமாயணங்களின் அகலிகை

பம்ம, பௌத்த
ஜைன இராமாயணங்களில்
காணாதுப் போகிறாள்

இந்திரனின் இச்சையால்
இராமனின் கால்பட்டு
சாப விமோசனதிற்குக் காத்திருந்தவள்

பாற்கடலைக் கடையத்
தோன்றியக் காமதேனுவை
மகரிஷிகள் ஏற்றனர்

அடுத்து தோன்றியது
வெண்ணிறக் குதிரை
மாவலி மன்னன் கொண்டான்

வெள்ளை யானையையும்
பாரிஜாத மரத்தையும்
தேவேந்திரன் பெற்றான்

அதன் பிறகு
அப்ஸரஸ் புடைச்சூழ
மாகாலட்சுமி தோன்றினாள்

அவளையும் இரத்தின மாலையையும்
ஸ்ரீமன் நாராயணன்
ஏற்றுக் கொண்டார்

மயக்கும் மதுவின் தலைவியை
அரியின் ஆசிர்வாதத்தோடு
அசுரர்கள் கொண்டனர்

அதற்குப் பிறகும்
அவர்கள் கடைய
ஆங்கு தோன்றியது

பேரழகின் உச்சமாய்
வானில் ஒளிரும் நட்சத்திரமாய்
அகலிகைத் தோன்றினாள்

அழகெனில்
அடிதடியும் உண்டல்லா
அங்ஙனமே ஆனது

இந்திரன் இச்சைக் கெண்டான்
கௌதமன் கச்சைக் கட்டினான்
போட்டியில் முடிவென்றான் பிரம்மன்

தேவர்களுக் கிடையேயான
தேடல் போட்டியன்றோ
தேடினர் தேடினர்

இருபக்க தலைக் கொண்ட
கோமளத்தைக் காண்பவருக்கு
பாற்கடல் பெற்றெடுத்த பத்தினி

ரிஷியோ தியானத்தில்
இந்திரனோ உலகப் பயணம்
நாரதர் நன்மை பயத்தார்

கோ சாலைக்கு கூட்டிச் சென்றார்
ஆங்கொரு கன்றீனும் பசுவிற்கு
கன்றின் தலை முதலில் வர

நாரதர் ரிஷியை
அப்பசுவை மும்முறை வலம்வர
பணிக்கிறார்

அங்ஙனம் வலம்வருவது
உலகைச் சுற்றுவதற்கு சமமென
சாட்சி தானென்கிறான் நாரதன்

கைப்பிடித்தான் கௌதமன்
காமத்தீ அடங்காத இந்திரன்
காத்திருந்தான்

அத்தாட்சியாய் சதானந்தன்
அவர்களின் மகவாய்
பிறக்கிறான்

மோகத்தில் வீழ்ந்தவனுக்கு
தாகம் தீறுமட்டும்
அச்சமும் நாணமேது

அவரவர் கற்பனைத் திரனுக்றேப்ப
அகலிகை அலைகழிக்கப் பட்டாள்
மகாபாரத்திலும் மானபங்கப் பட்டாள்

இரங்கநாத, பாஸ்கர, வங்காளி
இராமாயணங்களில் இந்திரன் எனவறிந்தே
இசைந்தாள் எனக் கதைச் செல்கிறது

தேவேந்திரன் துப்பறிவாளனாகி
கௌதமனின் செயல்களை
நோட்டமிடுகிறான்

நாளொன்றைத் தேர்ந்தேடுத்து
கௌசிகனாய் உருமாறி
கருக்கலை விரைவாக்கினான்

மாசு மருவற்றப் பேரழகை
ஆசையாய் ஆராதிக்க
ஒருசாமம் போதுமென

சேவலாய் குரலெழுப்ப
கௌதமன் வெளியேற
ஆவலாய் காத்திருந்தான்

இந்திரன் கௌதமனாய்
அகலிகையை அணைத்தான்
கற்புக்கரசி ஏமாந்தாள்

மாயக் கருக்கலென
ஆயத் தெரியாதக் கௌசிகன்
ஆசிரமம் திரும்பினான்

கண்ட கோலத்தினால்
மூண்ட கோபத்தில்
கல்லாக சபித்தான்

உன்னுருவத்தில் வந்ததனால்
உடனிருக்க அனுமதித்தேன்
என்றாள் அகலிகை

பொல்லாப் பழி விலக
இராமனின் கால்பட
விமோசனமென விலக்களித்தான்

இந்திரா உன்னாசை அல்குலென்பதால்
உடலெங்கும் ஆயிரம் பெறுவாயென
சாபமிட்டான் கௌதமன்

விமோசனம் வேண்டினர் இந்திரனுக்கு
ஆயிரம் கண்ணாக
மாற்றம் பெற்றது சாபம்

வால்மீகி கம்பனென
வரிசையாய் அகலிகையை
வதை செய்த தொன்மத்தில்

வண்ணக் கற்பனைகள்
எண்ணற்றக் கதைகளோடு
கற்புக்கு காரணம் கற்பிக்கிறது

தொன்மம் என்பதால்
தோப்புக் கரணம் போடாதே
எள்ளளவும் ஏற்காதே

காமத்தில் கல்லாயிறு
காலகாலமாய் பெண்ணிற்கு
போதிப்பது ஆண்தானே

மானுடத்தின் கற்பு
மதம் கொண்டவர்களுகில்லை
மானினத்திற்கு மட்டுமே

சுயவரம்
பெண்ணின் விடுதலையா
ஆணின் அடக்குமுறையா

வீரதீர மென்பது
வில்லை உடைப்பதா
எல்லை யறிந்து நடப்பதா

கல்லாமை என்பது
கல் பெண்ணாக - இராமனின்
கால்பட வேண்டுமென்பதா

சீதையின் கற்பைச் சோதிக்க
தீப்புக வைத்தவனா
தீர்பெழுதச் சிறந்தவன்

மானுடத் தோற்றமென்பது
மையலில் தோன்றுவதா
பாற்கடலில் எழுவதா?

தவ வலிமையால்
புவனம் அறியவில்லை எனில்
அவணி ஏது

மலர் நாடும் வண்டாய்
சிலர் மட்டு மிருப்பது
மகரந்தச் சேர்க்கைக்கா

தேனருந்தும் வண்டு
தெவிட்டிட
தேடும் மலர்கள் இரைதானே

இருதலைக் கோமளம்
இகத்தில் இல்லாத போது
இருப்பதாய் பாவித்து

அஞ்ஞான உலகமிதை
அற்புதமென வடித்தே
அகிலத்தை ஏமாற்றுவது

மெய்ஞானமென்று
ஐந்தறிவாய் ஏற்காதே
ஐயுறவு கொள்


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புராணம் இப்படித்தான் - கேவலம்...

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...