கர்நாடக சங்கீதம்
கருவறை பொக்கிஷமா
காப்பாற்ற வேண்டுமென
கதறுதே ஓரு கூட்டம்
ரஞ்சினியும் சுதாக்களும்
ராக ஆலாபனையில்
ரசாபாசம் உள்ளதென்றா
ரசிகையாய் ஆட்சேபிக்கின்றனர்
சுருதிபேதம் உள்ளதாய்
துஷ்யந் ஸ்ரீதர் உரைப்பது
சுத்த கர்நாடகமாய் இல்லாது
சிந்தித்து செயல் படுவதா?
தாளகதி மாறியதோ
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணம் வீசுமென்று
மேடையில் கலகக்குரலோ
இராமா ஏழுந்திருவென
அட்சர சுத்தமாய்
அவாள் மட்டும்தான்
ஆலாபிக்க முடியுமா
இசை மக்களுக்கா
இல்லை கலைக்கா
கோபுர வாதிகளுக்கா
கோபுரத்தின் உள்ளிருப்பவருக்கா
இராமனை பாட வேண்டியவன்
இராமசாமியை பாடியதாலும்
சலாத்துல்லா சலாமுல்லா என்று
இசையை இணைப்பதாலும்
சங்கீத கலாநிதி
அகௌரவம் ஆனது
சங்கீத வித்வத் சபை
சந்திக்கு இழுக்கப்பட்டது
சந்தைக்காக
அமெரிக்கா, பிரான்ஸில்
அரங்கேற்றம் செய்பவர்கள்
காசுக்குதானே விற்கிறார்கள்
கலை
வர்க்க பேதமற்றது
கடைக்கோடி ரசிகனின்
ரசனையை உயர்த்துவதும் அதுவே
பண்ணைபுரத்து ராசைய்யா
பாடியது மக்களிசைதானே
மாநிலமல்ல மண்ணுலகமெல்லாம்
மருகி உருகுதுதானே
உயர்குடி இசையை
ஊருசனம் ரசிக்கல
உன்சாதி மட்டுமே
ஒய்யாரமா நினைக்குது
ஒப்பாரி வைக்கும்
ஒன்றுமில்லா இசையை
ஒருவருக்கும் ஓதாது
ஒளித்து வைப்பதால் உயர்ந்ததா?
பொதுவெளியில்
பொற்காசு கிடைக்குமென்று
பிதற்றலை பரப்புவர்கள்
புனிதமென்று கூவுவதேன்
புறகணிப்பதால்
புனிதம் மீட்கப்படுமோ
புறகாரணிகள் வேறுவேறு
புறந்தள்ளுங்கள் இவர்களை
கற்றலுக்கு உரியவை
கலையும் அதன் நேர்த்தியும்
ஏகலைவன்
எப்போதும் கற்பவனே
ஏனோ
வர்ண பேதத்தை
வாழ்வில் நுழைத்து
வாராது காம்போதி என்றதை
ஆமோதிக்காது - கலை
ஆருக்கும் உரியது
அனைவரும் கற்கலாம்
அது கர்நாடகமாயிருந்தாலும்
இனப் படுகொலை
ஈவெரா வேண்டியதாய்
இட்டுக் கட்டும் காதைகள்
ஏராளமாய் கடந்தும்
பெண்ணடிமை விலக
போராடியப் பெரியாரை
பெண்ணே இழித்துரைப்பது
பேதமை எனினும் பொய்கள்தானே
ஆண்டைகளின் அதிகாரம்
ஆங்கு முடிவுற்றதால்
அவதூறுகளை
அள்ளித்தெளிக்கின்றனர்
அசாதாரணத் திறமையிருந்தும்
அங்கிகாரம் வேண்டி
அவாளாக வேடமேற்றதாய்…….
அதுவொரு விமர்சனம்
கொட்டு அடிக்க
கோமாதா தோல்
அக்லக்கை கொல்ல
கோமாதா புனிதமாகிறது
இந்த அரசியலை
இதுவரை பேசாதவர்கள்
சிந்திக்கச் சொன்னவர் என்றவுடன்
சினம் கொள்கின்றனர்
கலைஞர்களுக்குள்- இது
காலை வாரும் அரசியல்லல்ல
கற்றல் பரவலாக்குவதை
காயடிக்கும் அரசியல்
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக