காதல் அரும்பியது
கைப் பிடிக்க
கழுத்து அறுப்பட்டது
விரும்பிய உள்ளங்கள்
வீம்பான பெற்றோர்கள்
விலையானது உயிர்கள்
விளையுமோ அன்பு
விளைந்த அன்பை
வேரறுக்க நினைத்தது
வேண்டாத சாதியில்லை
வீரதீரமிக்க ஆணாதிக்கமே
வாழத்தானே பெற்றாய்
வாழத்தானே இணைந்தனர்
வழியில் வந்ததெது
வரட்டு கௌரவமா?
சிந்தனைகள் மாறிட
சிந்திய ரத்தங்கள்
சீராக்குமா சமூகத்தை
சீழ்பிடித்து மாளுமா?
சாதியும் கடவுளும்
சரிசமமா யில்லை
சக்ரவர்த்தியும் சமானியனும்
சம்பந்தி யாகுவதில்லை
சந்ததி தழைக்க
சரித்திரம் படைக்க
சமத்துவம் கொடாது
சாக்காட்டைத் தந்தானே
உலக இயக்கத்தின்
உன்னதம் காதலே
உலகறிவற்றவனே
உயிரைக் கொய்தானே
உயிர்கள் ஒன்றென
உணர்ந்திட முடியாதோ
உறவைக் கொண்டாட
உன்மதம் தடுக்குதோ
ஐந்தறிவும்
அன்போடு வாழுதே– உன்
அகங்காரம்
அக்காதலைக் கொல்லுதே
ஊரும் உறவும்
உருகி அழுகிறது
உருவ மழிக்க
ஊழென இருப்போமா
முயன்ற உள்ளங்களை
முகிழ விடாது
முக்கரம் கொன்றாலும்
மூளுமே காதல்தீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக