அறிவாய் தானே
அடைப்பட்டு கிடப்பதைசிறிதும் கவலை
சிறைமீட்க இல்லையோ
முறிந்தது அன்பென
முகமெதிர் சொல்லி
குறிப்பை உணர்த்த
கூர்மதி நினைக்க
அன்பே என்று
அருகில் வந்தான்
இன்முகம் கண்டு
எனையே மறந்தேன்
புன்னை நிழலில்
பொழுதும் போனது
முன்னை நினைத்தது
முற்றும் மறந்தது
காலங் கடத்தும்
கள்வனைக் கண்டிக்க
ஏலாதோ நெஞ்சே
ஏசாமல் விட்டாய்
கோல முகத்தினை
கோணலாக்க மறந்தாய்
ஆலகாலச் சொல்மறந்து
அமுதமொழி மொழிந்தாய்
அத்தான் அருகிருக்க
அண்டம் சுழலுதே
பித்தான நெஞ்சமும்
பின்னாலே போகுதே
முத்தான சொல்லில்
மூச்சை நிறுத்தினானே
நித்தியம் இதுவென
நினைக்கயில் பிரிந்தானே