சனி, செப்டம்பர் 14

மாற்று தீர்ப்பு எழுதுங்கள்

ஒன்றோடு
ஐந்தென்றால்
முறையாகுமா?

கன்றோடு
காளையென்றால்
நன்றாகுமா?

எட்டும்
நாற்பதும்
இணையாகுமா?

ஏமனில்
எட்டில் திருமணமாகி
எமனை கண்டாள்

இருபதில்
இந்திய தலைநகரில்
இல்லாமல் போனாள்

அகிலமெங்கும்
அவதிபடுவது
பெண்தான்

காமம்
கரு உருவாக
கருவறுக்கல்ல

மிருகமாய் புணர
மனித உயிரதெற்கு
மரித்து போகட்டுமே

மதமா
மழழையை
மணப்பெண்ணாக்கியது

மானுடமே
மழழையை, மாதை
மாற்றி பார்க்குது

மரண தண்டனை
மாற்றம் தருமோ
மனித சமுகத்திலே

நேற்று இன்றென
நெடுங்கதையாய்
தொடர்வதால்

மாற்றி சிந்திப்போம்
வெட்டி விடுவோம்
வேண்டாத உறுப்பை

ஆம்
காயடிப்பது
மிருகத்திற்குதான்




வெள்ளி, செப்டம்பர் 13

ஏலம் நான்கு கோடி...........ஒரு தரம்.........





முதுநிலை மருத்துவ படிப்பு சீட்டுக்கு ஏலம் நடத்துகிறார்களாம். இருக்கும் ஆறெழு சீட்டுக்கு அகப்பட்டவனிடம் பேரம் பேசுகிறார்கள்.  அவன் 4 கோடி தருகிறேன் எனும் போது நீ கூடுதலாக கொடுத்தால் உனக்கு இடம் என்கிறான்.

ஆக 4 கோடி முதலீட்டில் படிப்பவனின் சேவை எப்படி இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிர்ணயிக்கப்பட்ட விலை ஒரு கோடி இன்று ஏலம் நான்கு கோடி அதுவும் ரேடியாலஜி படிப்புக்கு

தேர்வு எழுதியவன் படிக்க முடியாமல் இருக்கிறான். பணம் வைத்திருப்பவன் "பாஸாக" படிக்கிறான்

இளநிலையே 50 இலட்சத்திற்கு போகும் போது முதுநிலை அப்படிதான் என்கிறார்கள்.

ஏன் இப்படி

தேவையோ இல்லையோ, ஒரு SCAN, MRI. 3D Scan, 64 slice இப்படி கமிஷனுக்கு எழுதி தள்ளினால் போதும் கஜானா நிறைந்து விடும்.

சோதனைக்கு இங்கு எலிகள் 130 கோடிக்கு தாண்டி போய் கொண்டிருக்கிறதே.

கோக் இந்தியாவிற்கு வரும் போது சொன்னான். 100 கோடி மக்களில் ஒரு கோடி பேர் தினம் கோக் வாங்கினால் போதும் என்று.  அதே " formula" இங்கேயும்.  அதனால்தான் ஏலம் நான்கு கோடி

99.9 எடுத்தவன் அரசு கோட்டாவில் இடம் கிடைத்து விடும்.  இப்போதும் 99.9 கூட்டம் அதிகமாகி விட்டது. 96%  எடுத்தாலும் இடம் கிடைப்பது குதிரை கொம்பு.

75% எடுத்தவன் பணம் கொடுக்க தயாராகி விட்டான். 

பல் மருத்துவம், அதுவும் விலைதான். பல் வலிக்கு உப்பை தேய்த்து குணமாக்கியவன்.  இப்போது மருத்துவரிடம்.  மீண்டும் மேலே சொன்ன formula.

பெண்கள் BDS படிக்கிறார்கள்.  எத்தனை பேர் அதில் மின்னுகிறார்கள். 

MDS. இதற்கு தனி விலை அதுவும் இலட்சங்களில்தான்.

இப்பொழுதெல்லாம் இளநிலை அதாவது வெறும் MBBS என்றால் மதிப்பில்லை கூடுதலாக ஒரு டிப்ளமோ, அல்லது MD அல்லது FRC இப்படி தகுதிகள் தேவை படுவதாக இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.

மருத்துவம் சேவை என்பதிலிருந்து பணம் காய்க்கும் மரமாக மாறி விட்டதால்தான் முதலாளிகள் இதற்கு வந்து விட்டனர்.  அரசு கை கழுவி விட்டது.

பிறகு, திருமண பேரத்திற்கு கூடுதல் தகுதி

சோதனைக்கு தன்னையே அர்பணித்து மருத்துவத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நாட்டுக்கு அர்பணித்த மக்கள்  இல்லாமல் போய் விடலாம்.

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் இந்த சமூகத்தை காப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் பொய்த்து விட வில்லை

செவ்வாய், செப்டம்பர் 3

வீரமா?.............................



கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே


பிச்சை எடுக்கும் நிலை உனக்கு ஏற்பட்டாலும் கற்றலை விட்டு விடாதே, கற்பது நன்று என வெற்றிவேற்கை கூறுகிறது

ஒரு குறும்படம் பார்க்க நேரிட்டது. 

ஏழ்மையான குடும்பம், நிலையற்ற வருமானம், அடுத்தவேளை சோறு கேள்விகுறி. பெண் குழந்தையை வகுப்பில் ஆசிரியர் வெளியே துரத்துக்கிறார். வீட்டின் நிலை கடன் வாங்கவும் தாய் தவிக்கிறார்.  ஆயினும் பிள்ளையை தூண்டுகிறார். பெண் பிள்ளையோ தன் சேமிப்பை அம்மாவிற்கு கொடுத்து உதவுகிறது.  ஆனால் தனக்கு வேண்டிய Geometry box வாங்க, கோயில் வாயிலில் அமர்ந்து பிச்சை எடுத்து வாங்கி ஆனந்தப் படுகிறது.

எதிர்மறையாக படம்பிடித்து கல்வி கற்க போராடும் நிலையை சொல்லியுள்ளார். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும்.................................

ஆனால்

காசுள்ளவனுக்கு கல்வி என்னும் நிலையில் வாழ்கிறோம்


கல்வி அடிப்படை உரிமையன்றோ மனிதனுக்கு


ஆனால், அதை பிச்சை எடுத்தாவது படி என்ற நிலையில் உள்ளது. குறும்படம் பார்த்து கலங்கிய உள்ளங்கள், என்ன செய்ய முடியும், நாலு சொட்டு கண்ணீர்......

இதை எப்படி மாற்றுவது, பணமில்லாதவன் படிக்க முடியாது, கோடிகளில் புரள்பவன் படிப்பது மருத்துவம், இலட்சங்களில் பொறியியல், ஆயிரங்களில் கலை மற்றும் அறிவியல்.

நூறுகளில் வாழ்பவன், எட்டு, பத்தை தாண்டுவதில்லை

வாழ்வில் கடைத்தேற வாய்த்ததை படித்துவிட்டு பகற்கனவு காணுது கூட்டம்.

ஆயினும் அவரவருக்கு ஒரே நாளில் பணக்காரனாக வேண்டுமென ஆசை. அதனால்தான் சூழற்சி முறையில் ஈமு கோழித் திட்டத்தை கடந்து வந்திருக்கிறான்.

 கல்வி என்பது தனிபட்ட உரிமையா? அரசுக்கு இதில் பங்கு இல்லையா, தன் குடிகள் கற்றவர்களாக இருக்க வேண்டும் என எண்ண கூடாதா? அப்படியெனில் அரசின் வேலை குடிகளிடம் வரி வசூலிப்பது மட்டுதானா?

காலை எழுந்தவுடன் துலக்கும் பற்பசையிலிருந்து இரவு படுக்கும் மெத்தை வரை வரிசெலுத்தும் மக்கள் தான் விரும்பிய படிப்பை பிச்சை எடுத்துதான் படிக்க வேண்டும். அதற்கு வள்ளல்கள் வேண்டுமா?

ஏன் இந்த தனியார் மயம்?  யார் வாழ கல்வி தனியார் மயமானது. எதற்கு பிச்சை எடுத்து படிக்க வேண்டும்.  வரி வாங்கும் அரசல்லவா படிக்கவும் வசதி செய்து தரவேண்டும்.

அப்படி கொடுக்காத அரசு என்ன அரசு, பிச்சை எடுத்து படித்துக் கொள் என்று சொன்னால், எத்தனை பேர் பிச்சை எடுப்பான்.

அப்புறம் பிச்சைக்கார நாடு இந்தியா என்பான்

இதை நான் சொல்லவில்லை

அப்போ குறும்படம் எப்படி இருக்க வேண்டும்.  இப்போது அவர் சொல்லட்டும்


ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...