கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 4

ஒன்றிய பிரதிநிதியின் துரோகம்

 



தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, வெகுஜன மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு மசோதாவை அனுப்பினால் ஆறு மாதங்கள் காலம் தாழ்த்தி ஏற்க முடியாது என்பதோடு மட்டுமல்ல உண்மைக்கு புறம்பான காரணத்தை சொல்லி  ஒன்றிய பிரதிநிதி திருப்பி அனுப்புகிறார்.

நீட் தேர்வை கிராமபுற மற்றும் அரசு மாணவர்கள் வற்வேற்கிறார்கள். அவர்கள் அதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

7.5 சதவீத ஒதுக்கீடு தேர்தலுக்காவும், 20 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்பாலும் பெறப்பட்டது. அவ்வொதுக்கீடை இப்போதும் தொடர்வதால் நிராகரிக்க இயலாது.

நீட் தேர்வில் இம்முறை வெற்றிப் பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மத்திய கல்வி முறையில் (CBSE) பயின்ற மாணவர்கள் முதல் 600 பேர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசு மாணவர்கள் ஒதுக்கீடு மூலமே பயனடைந்துள்ளனர்.  ஒதுக்கீடு இல்லையெனில் அவர்களுக்கு இந்த வாய்ப்பும் பறிபோயிருக்கும்.

ஒன்றிய பிரதிநிதியின் துரோகத்தால் அரசு தன் முடிவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.  மத்திய கல்வி முறைக் கல்வி, மாநில அரசு கல்வி முறையில் பயின்ற மாணவர்களை விகிதாச்சார முறையில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்.

இப்படி செயல்படுவதால் ஒதுக்கீட்டின் சதவிகிதம் அதிகரிக்கலாம்.

இதையும் கடந்து கல்வி வியாபாரம் என்றான பின் அதன் கட்டணங்கள் அதிகமாகதான் இருக்கிறது.  98 = 55,50,00,000  என்பது நாட்டின் வளத்தைக் காட்டுகிறது.  அப்படிதான் கல்வியிலும்.

மற்ற இலவசங்களைக் காட்டிலும் எந்தக் கல்வியையும் இலவசமாக கிடைக்கச் செய்தால் நீட் தேர்வுகள் தேவையில்லைதான்.

 

மருத்துவக் கல்வியின் ஒரு ஆண்டு கட்டணங்கள் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இப்படி இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி                                15000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு     600,000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% நேரடி ஒதுக்கீடு   20,00,000

தனியார் நிகர்நிலை பல்கலைகழங்கள்                   25,00,000

 

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு ரூ. 10 லட்சமாக இருக்கிறது. அரசு கல்லூரிக் கட்டணம் தவிர்த்து மற்ற தனியார் கல்வி கட்டணங்கள் ஏறக்குறைய ஒன்றே. ஒரு பாடத்தை ஒரே வகுப்பில் வேறு வேறு மாணவர்கள் இம்மாதிரி கட்டணம் செலுத்தி படிப்பதே இன்றைய மருத்துவக் கல்வி. இலவச தரிசனம் முதல் ரூ 200 வரை கட்டணம் பெற்று தரிசனம் தரும் கடவுள் உள்ள நாட்டில் இப்படிதான் கல்வியும்.  மக்கள் அதற்கு அடிமை. கல்விக்கு மௌனியாக கடந்துச் செல்கிறார்கள்,

இதற்கு தீர்வு காணாமல் நீட்டிற்கு தீர்வு காண்பது பெரிய வெற்றியல்ல.

இது மட்டுமல்ல. நாமக்கல் பிராய்லர் கோழிகள் மன்னிக்கவும், மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். மத்திய மாநில வழி கல்வியானாலும் அங்கே வகுப்புகள் A to Z மட்டுமல்ல AA to Az வரை நடைப் பெறுகிறது. கட்டணம் ரூ 2-3 இலட்சங்கள் நீட் பயிற்சிக்கும் சேர்த்து.

ஆக கல்வி என்பது மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். கொள்ளையடிப்பவர்களுக்காக அல்ல

திங்கள், டிசம்பர் 20

கன்னிகாதானம்


 

தானம்
கன்னிகாதானம்
காலம் காலமாய்
கைத்தலம் பற்றிட

தானம் கொடுக்க
மங்கையென்ன
மாடா, பொருளா
மானுடம்தானே

இணையாய் வாழ
இல்லறம் பேண
இருவரில்
யார் – யாருக்கு அடிமை

மரபென
மாறாது செய்தப் பெற்றோரை
மாற்றும் வல்லமை
மங்கையர்கே உண்டு

கற்றக் கல்வியால்
பகுத்துணர் அறிவால்
மரபுகளை மறுத்து – என்றென்றும்
மகளாக இருக்க வேண்டுமென்கிறாள்

ஆண்டாண்டுக் கால
அடிமைதனை
ஆட்சியர் பணிக் கல்வி
அகற்ற

வேதம் உரைத்ததை
வேண்டாம் என்பது
சனாதனத் தேசத்தில்
விடிவெள்ளிதான்

கலகம் பிறந்தது
கணவனும் ஏற்றான்
கற்றவர் பெருக
கற்கால மடமை மாறுமே

வெள்ளி, மே 8

குழந்தையும் கல்வியும்



சின்னபுள்ள சித்தாளா போகையில
   சிந்தை கொஞ்சம் கலங்குதம்மா
என்னகொடுமை படிக்கும் வயதில
   எட்டணா கூலிக்கு போகுதம்மா
அன்னமில்லா வறுமை காரணத்தால்
    அடிப்படை  கல்வியும் கிட்டலியே
என்னவிலை கொடுத்தா இந்தநிலை
     எந்தன் நாட்டில் மாறுமம்மா


மத்தபுள்ள படிக்க போகையில
    மருகி  நிக்கு  இந்தபுள்ள
கத்தைபுத்தகம் சுமக்கும் ஆசையில
    கனவ வளர்க்கு சின்னபுள்ள
குத்தவாளி யாருயிந்த கொடுமையில
    குறைய  தீர்க்கவும் சட்டமில்ல
வெத்துவேட்டு அரசியல் கூட்டத்தில
      விடியும் வாழ்வின் எல்லை 

புதன், மே 6

எட்டாக் கல்வி



ஆசையா படிக்க போனேன்
   ஆனால் எனக்கு இடமில்லை
கசையடியா நுழைவுத் தேர்வு
   கழிச்சு கட்டும் வழியல்லோ
திசைக்கொரு அரசியல் கட்சிகள்
   தீர்ப்பதா வாக்குறுதி அளிக்குது
வசைப்பட்டு  சாகும் நாங்களோ
   வக்கற்ற கீழான சாதியோ

கிராமத்து பள்ளியில் படிச்சதை
   கேள்வியில் காணம தவிச்சோமே
திறமத்து விட்டோ மென்றே
   தீர்ப்பு எழுதி ஏமாற்றினரே
அறமத்து நடக்கும் ஏலத்தில்
   அய்யகோ   கழிக்கப் பட்டோமே
சுரமத்து ஏதோ படிக்கிறோம்
   சூழ்நிலையில் எங்கோ ஒதுங்குறம்


மேல்மட்ட படிப்பு எங்களுக்கு
  மேட்டினில் இரைத்த நீரோ
கால்பட்டா தீட்டாகுமோ ஐஐடி
   காசிருந்தா  புனிதமா மருத்துவம்
பாழ்பட்ட எங்கள் நிலையோ
    பலவருட சுதந்திரத்தில் தீரலயே 
மல்கட்ட முடியாம தவிச்சே
   மரணத்தை தழுவுகிறோம் அனிதாவா


சனி, ஆகஸ்ட் 27

குலத் தொழில்



செம்படவனோ
செம்மீன்
மரைக்காயாரோ அல்ல
எஸ் & எஸ், ஸ்ரீராம்
அக்மார்க் அய்யர்கள்
அயிரையைப் பிடிச்சு வித்தவங்க

கூறு 5 ரூபாவென்று
கூவி வித்தவன்
குப்பனோ, சுப்பனோ இல்லீங்க
பனியாக்கள்
ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பஜார்
பியானி, அம்பானி

நாலுபேர் தலைமுடி வெட்டி
நானூறுக் கோடிப் பொருளீட்ட
நாவிதனோ நான்
நேட்சுரல்ஸ், கீரின் ட்ரென்ட்
கார்ப்ரேட் முதலைகள்

வெள்ளன எழுந்து
வெளுத்துக் கொடுத்தவனை
வண்ணாரெனப் பெயரிட்டாய்
பிக் லாண்ட்ரி, லாண்ட்ரி பாய்
கடைத் திறந்தாயே
நீ என்ன சாதி

சப்பாத்தி முள் தைக்காதிருக்க
செருப்புத் தந்தவனை
சக்கிலி என்றாய்
மாட்டுத் தோலை இறக்குமதிச் செய்து
செருப்பு செய்யும் – நீ யார்
வெட்கமின்றிச் சொல்
  
சூத்திர பஞ்சமனின் வேலை
சுகமா இருந்தா வா
சாக்கடையைச் சுத்தம் செய்வோம்
கோடிகள் கிடைக்காவிட்டாலும்
குமட்டும் வாசனைப் பெறுவாய்

எனக்கோ எம்பெருமானின் கடாட்சம்
கருவறைக் குள்ளிருந்தால் கிட்டுமென
ஆகம விதிப்படிக் கற்றிருக்கிறேன் – ஆம்
அடியேன் பூசாரியாக வேண்டும்
அவனருளின்றிக் கோடிகள் வேண்டேன்

கிராமத் தேவதைகள்
அரவணைத்து வளர்ந்தவனென்பதால்
மதுரையம்பதியிலோ, காஞ்சியிலோ
மயிலைக் கபாலியோ அல்ல
அரங்கனோ அடியேனை ஏற்க வேண்டும்





செவ்வாய், அக்டோபர் 21

ஆங்கிலம்












அறிவா அற்புதமா
அறிவியலா அஞ்ஞானமா
புரியாச் சொற்பதமா
புரியயவை சாதகமா
தெரியா மொழிகள்
தேவையா சுமையா
சராசரிக்குச் சரியாகுமா
சாப்பாட்டின் பொருளாகுமா

ஆறாயிரம் மொழியில்
ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
பழகிடுவோம் செம்மொழி

மொழியொரு வழியே
மானுடத் தொடர்புக்கு
மொழியா யாவும்
மூடிவைத்தப் பாலாகும்
இழிவா உயர்வா
இதுவென் மொழியென்றிட
தெளிவாய்ப் பகர்வாய்த்
தேன்தமிழ் நம்மொழியென

சிந்தனை மொழிக்கல்ல
சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
நாயன்மா ராக்க வேண்டாமே
நம்தமிழை வளர்க்க
நாமொன்றும் நாண வேண்டாமே

கண்மூடித் தாய்தமிழில்
கண்டதும் இல்லையெனத் தூற்றாமல்
கண்டுபிடிக் கல்வியறிவில்
காணும் பொருளின் சொற்பொருள்
சென்றுபடி மேலதேயம்
சிறப்பான எதையும் கற்றுவா
கற்கண்டுத் தமிழ்மொழியில்
கற்றதைப் பரப்பு வெற்றிபார்

அம்மொழியில் பேசிடவே
ஆனந்தமா அல்ல பெருமையா
செம்மொழித், தமிழுனுக்கு
சேந்தேள் விஷமா கூறுமைய்யா
பன்மொழிப் புலமை
பண்படுத்த வேண்டுமே உன்னை
என்மொழிப் பெருமை
எவரும் பேசிடப் பெருகுமே

ஆங்கிலமொரு மொழிதான்
அதுபோலவே கிரேக்கமும் சீனமும்
இங்கிதமாய்க் கூறாதே
இகலோகம் சுற்றிட உதவாதென
எங்கெல்லாம் போவாய்
எதற்காய்ப் போவாயென சொல்லிடேன்
அங்கெல்லாம் நீபேசும்
ஆங்கில அழகைப் பார்த்திடுவேன்

செவ்வாய், செப்டம்பர் 3

வீரமா?.............................



கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே


பிச்சை எடுக்கும் நிலை உனக்கு ஏற்பட்டாலும் கற்றலை விட்டு விடாதே, கற்பது நன்று என வெற்றிவேற்கை கூறுகிறது

ஒரு குறும்படம் பார்க்க நேரிட்டது. 

ஏழ்மையான குடும்பம், நிலையற்ற வருமானம், அடுத்தவேளை சோறு கேள்விகுறி. பெண் குழந்தையை வகுப்பில் ஆசிரியர் வெளியே துரத்துக்கிறார். வீட்டின் நிலை கடன் வாங்கவும் தாய் தவிக்கிறார்.  ஆயினும் பிள்ளையை தூண்டுகிறார். பெண் பிள்ளையோ தன் சேமிப்பை அம்மாவிற்கு கொடுத்து உதவுகிறது.  ஆனால் தனக்கு வேண்டிய Geometry box வாங்க, கோயில் வாயிலில் அமர்ந்து பிச்சை எடுத்து வாங்கி ஆனந்தப் படுகிறது.

எதிர்மறையாக படம்பிடித்து கல்வி கற்க போராடும் நிலையை சொல்லியுள்ளார். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றும்.................................

ஆனால்

காசுள்ளவனுக்கு கல்வி என்னும் நிலையில் வாழ்கிறோம்


கல்வி அடிப்படை உரிமையன்றோ மனிதனுக்கு


ஆனால், அதை பிச்சை எடுத்தாவது படி என்ற நிலையில் உள்ளது. குறும்படம் பார்த்து கலங்கிய உள்ளங்கள், என்ன செய்ய முடியும், நாலு சொட்டு கண்ணீர்......

இதை எப்படி மாற்றுவது, பணமில்லாதவன் படிக்க முடியாது, கோடிகளில் புரள்பவன் படிப்பது மருத்துவம், இலட்சங்களில் பொறியியல், ஆயிரங்களில் கலை மற்றும் அறிவியல்.

நூறுகளில் வாழ்பவன், எட்டு, பத்தை தாண்டுவதில்லை

வாழ்வில் கடைத்தேற வாய்த்ததை படித்துவிட்டு பகற்கனவு காணுது கூட்டம்.

ஆயினும் அவரவருக்கு ஒரே நாளில் பணக்காரனாக வேண்டுமென ஆசை. அதனால்தான் சூழற்சி முறையில் ஈமு கோழித் திட்டத்தை கடந்து வந்திருக்கிறான்.

 கல்வி என்பது தனிபட்ட உரிமையா? அரசுக்கு இதில் பங்கு இல்லையா, தன் குடிகள் கற்றவர்களாக இருக்க வேண்டும் என எண்ண கூடாதா? அப்படியெனில் அரசின் வேலை குடிகளிடம் வரி வசூலிப்பது மட்டுதானா?

காலை எழுந்தவுடன் துலக்கும் பற்பசையிலிருந்து இரவு படுக்கும் மெத்தை வரை வரிசெலுத்தும் மக்கள் தான் விரும்பிய படிப்பை பிச்சை எடுத்துதான் படிக்க வேண்டும். அதற்கு வள்ளல்கள் வேண்டுமா?

ஏன் இந்த தனியார் மயம்?  யார் வாழ கல்வி தனியார் மயமானது. எதற்கு பிச்சை எடுத்து படிக்க வேண்டும்.  வரி வாங்கும் அரசல்லவா படிக்கவும் வசதி செய்து தரவேண்டும்.

அப்படி கொடுக்காத அரசு என்ன அரசு, பிச்சை எடுத்து படித்துக் கொள் என்று சொன்னால், எத்தனை பேர் பிச்சை எடுப்பான்.

அப்புறம் பிச்சைக்கார நாடு இந்தியா என்பான்

இதை நான் சொல்லவில்லை

அப்போ குறும்படம் எப்படி இருக்க வேண்டும்.  இப்போது அவர் சொல்லட்டும்


வியாழன், நவம்பர் 3

ஆனந்தம்

மகளையும், மகனையும் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன்.  மகள் சொன்னாள், I am happy மகன் சொன்னான் I have bad news.    என்னவென்று கேட்டேன்.

மகள் சொன்னாள் அவளுக்கு மதிப்பெண் பட்டியல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் பெற்றோர் கையொப்பம் தேவையில்லை என ஆசிரியர் சொன்னதாகவும் ஆனால் அப்பட்டியலை பெற்றொரிடம் காண்பித்து இரண்டு நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்களாம்.

90 க்கும் குறைவாக மதிப்பெண் எடுக்கும் போது இரண்டு நாட்கள் தள்ளி கையெழுத்து போட்டு அடுத்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற உறுதி மொழி பெற்று கையொப்பம் இட்டு வந்தேன் கடந்த ஆண்டு வரை. இந்த ஆண்டு நிலை என் மகள் மகிழ்ச்சியோடு இருக்கிறாள்.

படிப்பு என்பது ஒரு துன்பமான நிலை என்பதால் இந்த மகிழ்ச்சி என நினைக்கிறேன்.

மகனுக்கு Reading Exam (படித்தல்),  அவன் சரியாக படிக்காததால் 'C'  Grade   அளித்தார்களாம்.  அது எனக்கு கெட்ட சேதி,

ஆம் அவனை படிக்க பழக்க வேண்டும்

சனி, செப்டம்பர் 17

நீதி

கல்வி கட்டணம் அல்லாது கூடுதல் கட்டணமாக ரூ. ஒரு லட்சம் கேட்க அவரால் செலுத்த இயலவில்லை அதனால் தேர்வு ஏழுத அனுமதிக்க வில்லை.  உயர்நீதிமன்றம் செல்கிறார்.  தேர்வு எழுத அனுமதிக்க உத்திரவிடுகிறது.

ஆனால் மறுமுறையும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை குற்றமிழைத்தார் என்று நீதிமன்றத்தை அணுக நிவாரணம் கல்வி நிறுவனத்திற்கு அபராதம் ரூ,15000.

ஆம்

கல்வி கட்டணங்கள் முதலாளிக்கு,
கல்வி காசுள்ளவனுக்கு

நாமெல்லாம் பிச்சையிடு என்று
வலையில் எழுதுவோம்
நாலுபேர் படிக்க
நாடு கடந்து பணம் அனுப்புவர்
நமது கடமை முடிந்தது
ஆத்ம திருப்தி

இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை இழுத்து மூடினால் என்ன?

ஜனநாயக நாட்டில் ரூ,15000 அபராதமே சரியான வழி

மூடுவது தீவிரவாதம்

வாழ்க ஜனநாயகம்

புதன், ஆகஸ்ட் 3

சமச்சீர்



சீரற்ற நாட்டில்
சமச்சீரென்றால்
சரியா

அம்பானியும்
தாராவியும்
ஒன்றா

அரசு மரத்தடியும்
ஐந்து நட்சத்திரம்
இணையுமா

எதையும் காசால் வாங்குபவனும்
இலவசத்திற்கு ஏங்குபவனும்
எடையில் நிற்பார்களா

அரசு பள்ளி
மெட்ரிக் பள்ளி
அருகில் வரலாமா

அமெரிக்க ஏற்றுமதி
அம்பத்தூர் தொழிற்பேட்டையில்
ஆழ காலூன்றுமா

அவாளும் இவாளும்
அதையே படித்தால்
கலி முத்தாதோ

இரு துருவங்கள்
எந்த அறிவியலில்
சந்திக்கும்

சமச்சீரென்பது
சண்டாளர்களின்
சதியாகும்

பள்ளி செல்லுங்கள்
பழைய பாடம்
படியுங்கள்


அம்மா சொல்கிறேன்
குலகல்வியே
குடும்பத்தை காக்கும்

வியாழன், ஏப்ரல் 28

அடிப்படை உரிமை

6 லிருந்து 14 வயது உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் சொல்கிறது.  அதற்கான சட்டம் இயற்றி ஒர் ஆண்டு முடிந்தும் விட்டது.  தனியார் பள்ளிகள் 25% குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

கொள்ளை அடிப்பவன் கூறுகிறான் அப்போ எனக்கு இன்னொரு வேளை பள்ளியை இயக்க அனுமதி கொடு.  அப்போதும் என்மீது எதையும் திணிக்க கூடாது என்கிறான்.

இலவசம் என்பது அரசியல் கட்சியின் வாக்குறுதி.  அதை அவர்களே நிறைவேற்றுவதில்லை.  தனியார் பள்ளி முதலாளிகள் கேட்பார்களா.  அரசு ஏன் இவர்களுக்கு ஏன் பள்ளி நடத்த அனுமதி கொடுத்தது.

இட நெருக்கடி மிக்க பள்ளிகள்.  அடைத்துக் கொண்டு வரும் பள்ளி வாகனங்கள், ஆய்வுகூடமில்லா பள்ளிகள், விளையாட்டு வசதிகள் துளியும்  இல்லா பள்ளி இயங்கி கொண்டுதானிருக்கின்றன.

படிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.15000 முதல் ரூ.100,000 வரை வசூலிக்கின்றனர். ஆண்டு துவக்கத்தில் தனிக் கட்டணம் என தனி வசூல்.  மக்கள் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர்.  ஆம் ஒவ்வொரு பெற்றோரும் தன்னை விட சிறந்த கல்வி தன் சந்ததி பெற வேண்டும் என்றுதானிருக்கின்றனர்.

அரசுக்கு வரி வாங்குவது மட்டும்தான் தன் வேலை.  சட்டம் இயற்றுவ்து தானும் ஏதோ செய்து விட்டோம் என கணக்கு காட்ட தானே தவிர அமுல் படுத்த அல்ல.

எல்லோரும் படித்து விட்டால்................

தன் வீட்டில் தான் சாப்பிட்ட தட்டு கழுவ ஆள் வைத்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் சிலர் புட்டபர்தியில் எச்சில் தட்டு கழுவி சேவை செய்வார்கள்.  கற்ற கல்வி அப்படி சிந்திக்க வைக்கிறது

சரி இதை விடுங்கள்

எல்லோரும் படித்து விட்டால்................

கொடி பிடிக்க, கள்ள ஓட்டு போட, காசு வாங்கி ஓட்ட போட , அடிதடி வேலை செய்ய ஆள் இல்லாமல் போய் விடும்

அப்புறம் எல்லோருக்கும் வேலை கொடுக்கனும்

அய்யோ அது இன்னொரு அடிப்படை உரிமை

சனி, மார்ச் 20

சீமை படிப்பு

சீமையில் படிச்சா சரக்கு அதிகம் ரொம்ப பேருக்கு நினைப்பு.  பணக்காரன் போனான்.  ஆனா, அந்த பல்கலை கழகம் சிரமம் வேண்டாம் நானே உன் நாட்டுக்கு வந்து பாடம் நடத்தி பட்டம் மட்டும் என் பேரில் தரேன் சொல்லிட்டான்.   மத்திய அரசு சரி என்று சொல்லிடுச்சாம்.  தரமில்லா பல்கலை கழகமுன்னு 47 கழிச்சான்.  ஏன் வெளியூர் பல்கலை கழகத்தை அனுமதிச்சான் யாருக்காவது புரியுதா?

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...