திங்கள், அக்டோபர் 6

அச்சம் தவிர்


நாளொருமேனி
பொழுதொரு வண்ணம்
போராட்டம் தொடர

ஏனென்றோ
எதற்கென்றோ – எவரும்
கேட்பாரில்லை

இதுவொரு வழிகாட்டியென
இருக்கும் கட்சிகள்
ஏதும் சொல்லையோ

எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளி தேடும்
ஏமாந்த மக்களே

தனியார்மயம்
தாராளமயம் – தந்த
அச்சத்தை பாருங்களேன்

தனியார் பேரூந்துகள் ஓடவில்லை
தனியார் பள்ளிகள் இயங்காதாம் – இவை
பயத்தில் நடக்கிறதோ

வணிகர் கடையடைப்பு
வரத்தை எதிர்பார்த்தா
வரும் கும்பலுக்கு பயந்தா

திரையுலக விரதம்
திரண்ட சொத்தை காக்கவா
தனித்து விடப்படும் அச்சத்திற்கா

பத்திரிக்கையாளர் விரதம்
கொடுக்கும் விளம்பரத்திற்கா
கோபக்கணையில் தப்புவதற்கா

காவேரி தாயை
கர்நாடகத்தில் சிறைவைத்தது
காலத்தின் கோலமா?

கோடநாடே
கர்நாடக சிறையென
நீதி சொல்ல

பிரதிவாதியோ
நீதிக்கு தண்டணையா
நீயெனக்கு சரிசமமா என்கிறான்

உண்ணாவிரத போராட்டம்,
மனித சங்கிலி போராட்டம்,
ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை

வேள்வி யாகம் நடத்துதல்,
பால்குடம் எடுத்து வழிபடுதல்,
அங்கபிரதட்சனம் செய்தல்

மொட்டையடித்தும்
முட்டி போட்டும்
கோயில்களில் நேர்த்தி கடன்கள்

உச்சநீதிமன்றமே
உத்தமியை விடுதலை செய்யென
உதார்கள் (பேனர்கள்)

இத்தனையும் எதற்கு
இன்னும் கொள்ளையடிக்கவா
ஏமாந்தவன் தமிழனென்று சொல்லவா

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல் என்றவன்
ரௌத்திரமும் பழகு என்றிருக்கிறான்

கருத்துகள் இல்லை:

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...