பணநாயகக் கோணலா
அதிகார மோதலில்
அவர்கள் பலிகடாக்களா…….!!!!!!
அச்சு
காணொளி
சமூகம் என
வகையிருந்தாலும்
வியாபாரம் ஆகுமென்றால்
நிர்வாணக் கும்பமேளாவையும்
அத்திவரதனையும் நேரடி ஒளிபரப்பி
பக்தி வளர்த்த ஊடகம்
இலாப இலக்கு என்பதால்
இரசனை முன்னே நிற்க
இலட்சியம் பின் என்றாக
இன்றைய இழப்புகள்
ஊடகம்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
இடம் வலமென்றாலும்
வளவள என்றிருக்கிறது
அச்சுறுத்தல்கள்
ஆங்காங்கே அனைத்திலும்
ஆம் – “இடம்” இல்லையென
“வலம்” வருகின்றனர்
சிந்தனைகளுக்கு
இடம் கொடுத்ததால்
தேச விரோதியென
தீர்த்துச் சொல்கிறார்கள்
சிந்திக்காதவர்களின் கவசம்
கந்தனிடம் நம்பிக்கை
பகுத்தறிவாளர்களின் கவசம்
பற்றற்றக் கேள்விகள்
அடையாளம் காட்டப்பட்ட
ஊடகவியலாளர்களின்
உளவியல்
உயிர் பயம்தான்
இஸ்லாமிய ஊடகவியலாளர்
இங்குமங்கும் அலைந்து
நான் அவனில்லை – என
நிருப்பிக்கப் பட்டபாடு
வேலையிழைப்பை
வேறு வழியில்
நிவர்த்திச் செய்யலாம்
உயிர்………………………..
களையெடுப்பென
காயடிக்கப்படுவதால்
கார்ப்பரேட் சிறைக்குள்
கருகுமோப் பகுத்தறிவுகள்
கலாநிதி
வீரபாண்டியனை
வெளியேற்றியப் போது
வாளா யிருந்து விட்டு
இந்து
ஆனந்த விகடன்
நியூஸ் 18 என
தொடர்கதையானப் போதும்
உத்திரபிரேசத்தில்
தோட்டா வெடிக்க
ஊமையிருந்தவர்கள்
தமிழகத்தில் தப்புவார்களா?
உழைத்துக் கொடுத்தவர்கள்
ஓரம் கட்டப்படுவதால்
உண்டான எழுச்சியோ - உணர்வால்
உயிர் பெற்றக் காட்சியோ?
தன்னைக் காக்க
தனித்தனியான முயற்சிகள்
நான் அவனில்லையென
அவசரச் சமர்பிப்புகள்
“பால் பாக்கெட்” சேகர்
எச்சு ராஜா
நாராயணன்களுக்கு
சிம்மசானம் கொடுத்து
வலதுக் கருத்துக்கு
வடிகட்டிய முட்டாள்களை
வரவேற்றக் காரணத்தால்
வந்த வினைகள்
நடுநிலைச் செய்திகள்
நக்கிப் பிழைப்பவர்களுக்கு
உள்ளது உள்ளவாறா
ஊமை ஊடகங்கள்
கனக வேலோ
கழக தோழர்களோ
காணாது இருந்தனர் – அவர்களின்
கவலை ஓட்டு மட்டுமே
அம்பானி அடித்தாலென்ன
அய்யர் குதித்தாலென்ன
பொய்யரை இனங்காட்டு
பொதுவாய் இனங்கூடு
அச்சத்தைத் தோற்றுவிக்க
அவனால் முடியுமென்றால்
அடிமைகள் பிரிந்திருக்கின்றன - அவை
இணையாதென அறிந்திருக்கிறான்
அணிதிரள்
மாற்றத்திற்கானச் சங்கம்
குறைகளை தீர்ப்பதற்கா
கொள்கைகளை வளர்ப்பதற்கா
வலுவற்று இருப்பதினால்
வலதுகளின் சர்வாதிகாரமா
வலுபெற வழியென்ன
வாழ்வை இழப்பதுவோ
கழக நண்பர்களோ
கட்சி தோழர்களோ
காப்பார்களோ – அங்கனமாயின்
எதுவரை?
ஓட்டு பொறுக்குவது
உனது நலனுக்கல்ல
ஆட்சி அதிகாரத்திற்கு
அதைத் தக்க வைப்பதற்கு
ஒற்றைத் தேசமாய்
உருமாற்றத் தயாரிப்புகள்
ஒத்தூதும் ஊடகங்கள்
உணர்வற்றக் கழகக் கட்சிகள்
ஹை கோர்ட்டாவது
………….. என்ற போதே
அந்த போலீசும், மன்றமும்
அவர்களுக்கானது என்றானது
சட்டம் தெரிந்தாலும்
சார்போடு இருப்பது
சனநாயகம் என்று
போலீஸ் அறியும்
இரத யாத்திரையில்
இரத்த களறியாக்கி
இராம ராஜ்ஜியத்தை அளிப்பதாய்
சம்புகனை கொல்ல வருகிறார்கள்
கொலைமிரட்டல் விடுப்பது
தரக்குறைவாய் பேசுவது
கேள்விகளுக்குப் பதிலில்லை என்றால்
கோவேறுக் கழுதையாய்க் கணைப்பது
இது வாடிக்கையானப் பொழுது
இந்துக்கள் புண்பட்டதாய்ப் புலம்ப
பார்பனத்திகளும்
பகிரங்கமாய் மிரட்ட
பக்திக்கு எதிராய்
பகுத்தறிவுக் கேள்விகள்
பார்ப்பனன் நெளிய
பாமரன் குழம்ப
ஓட்டு வேட்டைக்கு
உலை வைக்கும்
உதவாத ஊடவியலாளர்களை
டி ஆர் பி க்காக பாதுகாக்கவா முடியும்
நட்டத்தை
நாட்டாமை சரி செய்வார்
நாவண்மைக் கேள்விகளால்
நாடாளும் வாய்ப்பல்லவா போகும்
கைத்தட்டி விளக்கேற்றி
மலர்தூவிப் பாடைக்கு அனுப்பும்
கொரோனாக் காலமிது
கொள்கைக்கு அல்ல
கறுப்பர் கூட்டம்
களப் பலியானது
காவிகள்
கறுப்பாய்தான் இருந்தனர்
புதிய இந்துக்கள்
இறை மறுப்பாளனை
எதிர்ப்பு தெரிவி என
அழுத்தம் கொடுக்கிறார்கள்
கூடுதல் விலைகொடுத்து
ரபேல் விமானம் வாங்குவதும்
கஷ்மீரை முடக்கி வீரமென்பதும்
தேசபக்தி நாடகக் காட்சிகள்
சுற்றுச்சுழியல் கருத்துருக்கு
மாற்றுக் கருத்துரைத்த
பத்மபிரியாவையும்
பதர வைத்தனர்
கருத்துக் கேட்பு
கண்துடைப்புதான்
காவுக் கேட்போமென
காவிகள் எச்சரிக்கின்றனர்
பெரியாரின் மண்ணென்று
பேசாதிருந்தால்
காவி மாலைகள் காத்திருக்கும்
சிலைகளும் சேதப்படும்
பெண்ணைக் கொச்சையாய்
முகநூலில் எழுதியவனை
பிணையில் விடுவித்து
விசுவாசத்தைக் காட்டுது போலீஸ்
செருப்பு மாலை அணிவித்தவனை
ஓராண்டு சிறைக்கு அனுப்புது
பார்பனனுக்கும், சூத்திரனுக்கும்
பேணப்படும் மனுநீதி ஆட்சியல்லவோ
ஆதாரமோ
அவமானமோ
கிஷோர் கே சாமிக்கும்
மாரிதாசுக்கும் இருக்கிறதா என்ன?
சமூக ஊடகம்
வெற்று ஆரவாரமும்
பொய்களை தாங்கும்
சனநாயக தூணாக விளங்க
நகர்புற நக்சல்கள்
நாட்டின் எதிரிகள் என
மண்ணை மக்களை
நேசிப்பவர்களுக்கு பட்டம்
போக்கிரிகள்
பொய்யான பெயரில்
பொய் பரப்பும் – நவீன
செப்பேட்டு ஆவணங்கள்
வரலாறு அவர்களை
வகை பிரிக்கும்
அதுவரை
அமைதிக் காக்காது
சகலரும் சமமென்ற
சங்கை ஊதுங்கள்
சாமான்யனும்
சரியென்றே பின் வருவான்
2 கருத்துகள்:
அருமையான வரிகள்
ஆழமான கருத்துகள்
எழுத்து வசப்படுவது இயல்பாய் வருகிறது
எதை முன்னிருத்தி உங்கள் கொள்கைகளை
எழுச்சிக் காண விழைகிறீர்களோ அதையே
ஏகாதிபத்தியம் நமக்கெதிராய் திருப்பி
பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது.
கடவுள் விசயத்தை பின் தள்ளி மற்றக் கொள்கைகளை
கடத்த முயற்சித்தால் பகுத்து அறிய மக்கள்
முயற்சிப்பார்கள் என்பது அடியேனின் கருத்து.
வாழ்த்துகள் உங்கள் எழுத்திற்கு.
பல நிகழ்வுகளை மீட்டு எடுத்து சிந்திக்க வைத்து விட்டீர்கள்...
நெஞ்சு பொறுக்குதில்லையே...
கருத்துரையிடுக