செவ்வாய், மே 18

என்கண்ணில் இருந்து தப்பாது உலகம்

 


 

என்கண்ணில்  இருந்து  தப்பாது  உலகம்

      ஏமாறப் பிறப்பது எங்கெங்கும் கலகம்

புன்கண் புவனத்தில் ஈராண்டுக் கடந்தும்

    பன்மடங்கு ஆனதே பல்லார் விழுங்குதே

மேனாட்டு அரசு தடுப்பூசியில் தடுக்க

     மேதமைக் கொண்டோர் கோமியத்தை அளிக்க

இந்நாடோ ஓர்ஊசிக்கு பலவிலை நிர்ணயிக்க

      இங்ஙனமே நற்கதியாய் கங்கையில் மிதந்தோம்

    

கைத்தட்டி ஒளியேற்றி விரட்டிட முனைந்தோம்

         கைக்கொட்டி உலகம் சிரித்திடக் கண்டோம்

கொத்துக் கொத்தாய் மடிந்தக் காரணங்கள்

           காற்றை உயிர்காற்றைத் தேடியென அறிந்தோம்   

கற்றுக் கொள்வோம் அவரவரைக் காத்திட

           கட்டுகோப்பும் மூச்சுப் பயிற்சியும் முககவசமும்

இற்றைத் தினத்தில்  இன்றி அமையாததென

           இருக்கும் யாவருக்கும் இனிதாய்ச் சொல்லுவோம்

 

இஞ்சி மஞ்சள்  மிளகு நோயெதிர்ப்பென

           இகலோரும் எடுத்தியம்ப இந்நேரம் கண்டேன்

அஞ்சியரோ  “ஹார்லிக்ஸ்”  “காம்ப்ளான்” பண்டங்கள்

          அந்நோய்க்கு உதவாதென அமைதிக் காத்தனரோ

செஞ்சீனம் தீநுண்மியின் துவக்கம் என்றார்

         செம்மையாய் கையாண்ட அரசு கண்டேன்

அஞ்ஞானங் கொண்ட அந்நாளைய அதிபர்

      அரற்றியப் பலகதைக் கேட்டும் நொந்தேன்

 

 அலட்சியமோ அவசியமோ அவரவர் சுற்றுவது

         ஆயினும் நோயும் வாயும் விரட்டுதே

இலக்கின்றி  இல்லத்தில் அடைப்பட்டுக் கிடந்திட

       ஏற்படும்  மனச்சிக்கலை யார்தான் போக்குவது

கலங்கி நிற்குதே ஒருகூட்டம் பணமின்றி

         கால்தேய நடந்ததே மறுகூட்டம் உறவின்றி

கல்லாது ஒருநிலை தாண்டும் கல்விநிலை

          காலத்தால் வீழ்ந்தோம் கவனிப்பார்  யாருமின்றி

 

 

            

 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் சிரமம் தான்... இந்த நிலை மாறும் - மாறட்டும்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இதுவும் கடந்து போகும்
கடந்து போக வேண்டம்

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...