வியாழன், நவம்பர் 18

திருடர்கள்

 



இருவகை இவர்கள்
இல்லாமையால்
இத்தொழிலா – அல்ல
இதில்தான் வளம் கொழிக்குமா

தனியுடமைதனை
தக்கச் சமயத்தில்
தட்டிப் பறிப்பது
சாதாரணத் திருடன் செயல்

எதைக் களவாடுவது
யாரிடம் களவாடுவதென
தீர்மானிக்கும் திருடன்
சாதாரணத் திருடன்

இழப்பெனில்
செல்வத்தை பாதுகாக்க
எதிர்த்து போராடுவோம்
சாதாரண திருடனிடத்தில்

இழந்ததை மீட்க
இ.பி.கோ. வை நம்பி
சிலர் மீட்பர் – சிலர்
இருப்பதையும் இழப்பர்

வளமான எதிர்காலத்தை
உழைக்கும் வாய்ப்பை
கற்கும் கல்வியை
கருணையின்றி பறிப்பர்

வியாபாரத்தை இழப்பாய்
ஆரோக்கியத்தை இழப்பாய்
யாரால் – எந்த திருடனால்
என்றாவது யோசித்தாயா?

திருடனை
திருவாளர் பொதுசனம்
தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல
ஆதரித்துப் பாதுகாப்பது அவரே!!!

சனநாயக கடமையில்
தேர்ந்தெடுக்க அதிகாரமுனக்கு
சாக்கடை நமக்கெதற்கென
ஒதுங்கியிருந்து ஆதரிப்பதும் நீயே

தேர்ந்தெடுத்தவனின் – வீரத்
தீர பெருமையுரைத்து
திருட்டில் பங்குப் பெற்று
பாதுகாப்பதும் நீயே

மலைகள் – ஆறுகள்
குவாரிகளாய்
கிரானைட் பலகைகளாய்
காணாமல் போகும்

கடற்கரை தாதுமணலாய்
கடல் கடந்து செல்லும்
கடலோரம் புதைகுழியாகும்- உன் வாழ்வு
என்னவாகும்

போடாத சாலைகள்
பளபளக்கும்
பொருத்தாத விளக்குகள்
ஒளிவிட்டு எரியும்

கூடங்குளம், ஸ்டெர்லைட்
காவு கேட்கும்
வாடியபோதெல்லாம் வாடியதாய்
வசனம் பிறக்கும்

காடு கழனிகள்
இறால் வளர்ப்பென
களர் நிலமாகும் – வாழ்க்கை
களையிழந்து போகும்

மீத்தேன், ஹைட்ரோகார்பன்
எட்டு வழிச் சாலைகள்
வளர்ச்சியின் வேடத்தை
கச்சிதமாய் ஏற்கும்

நாட்டின் வளங்களை கொள்ளையிட்டு
நமது மகிழ்ச்சியையும் – உடல்
நலத்தை பறிப்பதை
வேடிக்கை பார்க்கிறோம்


பொதுத் துறை நிறுவனங்கள்
பொன் முட்டையிட – அறுத்து
தனியாருக்கு தாரை வார்க்க
நட்ட கணக்கு நம்பப் படுகிறது


அவமானகரமான
கேலிக்குரிய – இச்செயலை
என்ன செய்யலாம்
சிந்தித்தாயா?

நாடு பின்னோக்கிச் செல்கிறது
பார்வையாளனாக – நீண்ட
அமைதிக் கொள்வாயா
பதைப்பதைத்து எழுவாயா

அரசியல்
அது சாக்கடைதான்
எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பாய்
சுத்தம் செய்ய இறங்கு

சாக்கடையில் இறங்கி
சுத்தம் செய்ய
சாதாரணன் தயங்கியதாய்
சரித்திரமில்லை

வேண்டாத வேலையென்று
ஒதுங்கி நிற்காதே
விழுங்கி விடும்
வேலெடு - வீச்சோடு வா

நமது எண்ணிக்கையில்
அவர்கள் இல்லை
ஆயினும் அச்சமேன் - வெற்றிக்கு
ஆர்பரித்து இறங்கு

இல்லையெனில்
பெரும் கார்ப்பரேட்டுகள்
எல்லாத் தொழிலையும் செய்யும்
ஏமாளியாய் வாழ்வாய்

ஆம்…. ஒவ்வொரு
தேசப் பற்றாளனும்
தேசத்தை தூய்மையாக்க நினைத்தால்
தேசம் மக்களுக்கானது

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...