வியாழன், பிப்ரவரி 3

காதலி கண்பாரடி

 


காதலி கண்பாரடி
காதலில் வாடுமெனை
சாதக வார்த்தையால்
சக்திமா னாக்கடி
வீதியில் சுற்றுமெனை
விரைவில் காத்திடு
ஆதியில் ஏவாளும்
அங்ஙனமே செய்தாளடி

காதலர் தினமா
காத்திருக்கும் எனக்கேதடி
நாதமோ வேதமோ
நாளும்நின் அருளடி
ஆதலால் அன்பே
அடியவனை ஏற்பதாய்
சாதகப் பதிலை
சங்கேதமாய் உணர்த்தடி

காத்திருக்க வைப்பதா
காதலியுன் சோதனை
பூத்திருக்கும் அன்பினை
புற்பதமாய் எண்ணிட
யாத்திருந்த பாக்களா
யாசகனின் உத்தியா
சாத்தியத்தை உரைத்தால்
சட்டென ஏற்பேனே


மொட்டுக்கள் பூவாக
மோனநிலை யிருக்கு
மெட்டுக்கள் நீயிட்டு
மெய்நலம் கூறாதே
கட்டுக்கள் தளர
காயங்கள் வருமே
சிட்டுக்கள் பறப்பது
சிறையில் அடையவா

விட்டுச் செல்லவா
விருப்பம் சொன்னேன்
எட்டிச் செல்லாதே
என்னினிய காதலே
விட்டிலாய் வீழவா
விழுதுவிட்டு வாழவா
திட்டமிடு பெண்ணே
தீர்ப்பை வழங்கிடு

பிழைகள் இல்லையடி
பிடித்தால் இணைவோம்
தழைத்தல் இயல்படி
தகுதலாக்கு மனதினை
உழைக்கும் உறுதியுண்டு
உறுதுணையாய் நீயுண்டு
அழைத்துக் கொள்ளேன்
அறத்தோடு வாழ்வோம்

ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்த தையிலே
மேகங்கள் மறையலாம்
மேற்திசைக் காற்றிலே
பாகமான வாழ்வில்
பாதியில் கைவிட்டு
போகவாழ்வு வீண்னென்ற
பட்டினத்தான் அறிவாயா

ஞானியாய் மாறவா
நாயகியை நேசித்தேன்
ஏனிந்தச் சிந்தனைகள்
என்றென்றும் பூசிப்பேன்
நானிலமும் வியந்திட
நன்றாய் வாழ்ந்திட
ஆனிப்பொன் அழகே
அத்தானை நினைத்திடு


ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...