ஞாயிறு, செப்டம்பர் 18

மரணம் எந்த நொடி



எந்த நொடி
எந்த நிமிடம்
எந்த நாள்
எங்ஙனம் அறிவேன்

மரணத்தை யோசிக்கிறேன்
மாறும் உலகில் - மாறுமோ,
மறுதலிக்குமோ
மானுட வாழ்வு

மன அழுத்தங்கள்
மரணத்தை யாசிக்கின்றன
ஆசைகளின் ஓட்டத்தில்
மாத்திரைகள் நீட்டிக்கின்றன

சுகமான மரணம்
எங்ஙனம் நிகழும்
சுவாச வலியின்றியா
சுற்றியிருப்பவர்களுக்கு வலியின்றியா

உடல் உபாதைகளும்
திடமற்ற மனதும்
கடமைக்கு வாழாது
கானகத்தை நாடுதோ

போதுமா வாழ்க்கை
மோதுகின்ற கேள்வியில்
வாதிடுகின்றன – வாழ்வு
உனக்காகவா அல்ல குடும்பத்திற்கா

நீயில்லா உலகில்
நீடித்திருக்கும் குடும்பம்
தீயில் வெந்திட
தேடுகிறாயோ காரணங்கள்

நீதியும் நேர்மையும்
உனக்கானதல்ல
சாதிச் சமூகத்தின்
ஆதிக்கச் சொல்லாடல்கள்

சேர்த்தச் சொத்துக்கள்
சோர்ந்திராதே எனச் சொல்லுமோ
ஆர்பரித்த அன்பு
அடுத்த வேளையை நோக்குமோ

போதித்தப் புத்தனும்
பூமிக்குள்ளே
சாதித்த மன்னனும்
சமாதிக்குள்ளே

அறிவியல்
அறிவை வளர்க்குமா
அறியா மரணத்தை
ஆராய்ச்சி செய்யுமா

நாற்பதாண்டு வாழ்வை
எழுபதாண்டிற்கு நீடித்தது
ஏற்பதா மறுப்பதா
யார் தீர்மானிப்பது

உலகின் முதல் செல்வந்தனா
உலகின் முதல் ஏழையா
அவரவர் மனமெனில்
அவர்களின் மனநிலை

மனநிலைக் காரணிகள்
மரணத்தை யாசிக்கின்றன
புறநிலைக் காரணிகள்
பூபாளத்தை நேசிக்கின்றன

பருவநிலை மாற்றங்கள்
பாடம் நடத்துகின்றன
உருவமற்ற, உருவமுள்ள
கடவுளும் மாண்டு போகின்றன

மூப்பது வந்திட
முடங்குவது உடலா
கடந்து செல்லும் வாழ்வில்
காப்பதும் கடவுள்ளில்லையா

உற்ற உறவுகள்
உறுதுணையா
பற்றற்றிரு எனும்
பட்டினத்தான் போதனையா

மரணத்தின் சிந்தனைகள்
மாறி மாறி வந்துச் செல்ல
இரணங்களா
இல்லாத காரணங்களா

இயங்கும் உலகில்
இவை மனப்பிறழ்வென
இனம் காணுவோமா
எக்கேடுக்………… செல்வோமா

கற்றதனால் ஆன பயன்
கடவுளைத் தொழுவதா
மற்றதனால் மரணத்தை
மாற்ற முயல்வதா

தேடல் முடிந்ததா
தேவை முடிந்ததா
வாடிய உனைக் கண்டு
வாட ஒருவருமில்லையோ

நூறாண்டு வாழ்வு
நூலாகி போனதே
ஐம்பதை தாண்ட
அவ்வாழ்வும் சலித்ததே

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...