சனி, ஜூலை 4

நந்தனார்

tut-temple.blogspot.com: திருநாளைப் போவார் ...



கல்பனாக் கதையென்று
காமகோடிக் கதைகட்டியப் பிறகு
கடைகோடிச் சூத்திரன் நான்
கதைச் சொன்னாக் கேட்பேளா

கோபாலக் கிருஷ்ண பாரதியின்
கோணல் வரிகளால்
திருநாளைப் போவார் நாயனார்
திருப்புகழ் திரிக்கப்பட்டதாக

அவாள் உரைத்தாலும்
அறுபத்து மூவரில்
அவனொரு நாயனார் - அவன்
அனலில் எரித்ததை கேளுங்கள்

கொள்ளிடக் கரையினிலே
ஆதனூர் சேரியிலே
புலையராய் வகுத்த
பெருஞ்சாதியில் பிறந்தவன்

நமச்சிவாயனை
நாளெல்லாம் நினைத்து
புறத் தொண்டுப்
புரிந்த நாயகன்

ஆடுதல் பாடுதலோடு
அர்ச்சனைக்கு கோரோசனை
பேரிகைகளுக்காகப் போர்வைத்தோல்,
விசிவார் கொடுத்தவர்

குலப் பிறப்பிற்கேற்றக்
குறுந் தொண்டெனக்
கோயில் கொண்டவன்
குளிர்ந்தான் மகிழ்ந்தான்

திருப்புன்கூர் திருத்தலத்தில்
தெருவில் நின்று
எம்பெருமானை
இசைப்பாடி வேண்டுகிறான்

வந்தவனை
வாவென உள்ளழைக்காது
நந்தியை நகர்த்தி
நல்லதொரு தரிசனம் அளித்தான்

ஆனந்த கூத்தாடியை
அனுதினமும் நினைத்திருக்க
அவ்வாடலரசனைச் சிதம்பரத்தில்
அவன்தலத்தில் காண நினைத்திட்டான்

ஆயினும்
அவன் குல நிலையெண்ணி
நாளைப் போவேமென
நாட்களைக் கழித்தான்

இன்னல் தரும்
இழிப் பிறப்பன்றோ
இறைவனைக் காண
இடைஞ்சல் என மருகினான்

எந்நாட்டுடையோன்
ஏக்கம் அறிந்து
என்று வந்தாயென
கனவில் கேட்டார்

தீ முழ்கி வந்தால்
திவ்ய தரிசனமென
தீர்த்துச் சொல்லி
திரை மறைந்தான்

தீட்சிதர்கள் கனவிலும்
திரிபுரம் எரித்தவன் தோன்றி
தீவார்த்து அனுப்பென
தீர்ப்பெழுதியதால்

தெற்கு வாசலில்
தீ மூட்டி காத்திருந்தனர்
திருநாளைப் போவோம் வந்தார்
திருசிற்றம்பலம் என்றார்

அந்தணர் கண்களுக்கு
ஆலகாலனிடம் போவது தெரிந்தது
அவனுடனருந்தோருக்கு - அவன்
சென்றவிடம் காணாதுத்  தவித்தனர்

தெற்கு வாசலுக்கு
தீட்டு என்பதால்
எழுப்பியச் சுவர் – நாளதுவரை
திறக்கப்படவே இல்லை

இந்துவாய் இருக்கலாம் நீ
இனமானம் இருப்பதாய் – வேண்டாம்
மனிதன் என்றுரைத்தாலும்
மாட்சிமை தங்கிய நீதிமன்றம்

உத்திரவு வழங்காது
மடச் சுவரை இடிக்காது
காத்திருப்போம்
காலங் காலமாய்  தோழனே 

5 கருத்துகள்:

அ. வேல்முருகன் சொன்னது…

http://www.kamakoti.org/tamil/dk6-19.htm

அ. வேல்முருகன் சொன்னது…

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// மடச் சுவரை இடிக்காது //

மடமை...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இணைப்பிலும் வாசித்தேன்...

இரண்டாவது இணைப்பை கீழுள்ளவாறு கொடுக்கலாம்...

https://ta.wikipedia.org/wiki/திருநாளைப்_போவார்_நாயனார்_சனி,_ஜூலை_04,_2020_2:19:00_முற்பகல்

அ. வேல்முருகன் சொன்னது…

தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...