சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 25

சாதி










கண் கலந்து
காதலில் விழுந்து
கரம் பிடித்தேன்

ஒன்னு கலந்து
ஒரு பிள்ளையும் பெத்து
ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன்

வார்த்தெடுத்த வார்த்தைகளின்
வர்ணஜாலத்தை
வஞ்சியவள் இரசித்திருக்க

பேச்சு வழக்கிலே
பேசிக் களிக்கையிலே
எதோவென்று சொன்னேன்

எங்க ஆளுங்க
இதுபோல பேச மாட்டாங்க”
எதார்த்தமாகச் சொன்னாள்

எனினும்
தரம் குறைந்தவர்கள் எனும்
தொனி தொக்கி நின்றதால்

வாடியது முகம்
ஆண்டாண்டு கால
அவச்சொல்லை மாற்றுவதெப்படி?

அந்தத் தெரு மக்களை
இந்தத் தெருவில் இருப்பவர்கள்
அப்படித்தான் அழைப்பார்களாம் ...

அப்படித்தான் ஒருநாள்
உறவுகளோடு
ஓர் ஊருக்குச் சென்றிருந்தேன்

குலம், கோத்திரத்தோடு
குடியிருப்பு எங்கே என
குணமாதான் கேட்டார்கள்

ஒரு சாதிதான் – ஆனா
கொள்வினை, கொடுப்பினை
அக்கூட்டத்தோடு இல்லையென்றனர்

நுண்ணிய அளவில்
மானுடத்தை பிரித்த
சமுகத்தை மாற்ற முடியுமா?

அ. வேல்முருகன்.

 

வெள்ளி, மார்ச் 1

மதம்






அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது

பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது

மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது

மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது

குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது

நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது

வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது

வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே

திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது

நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது

ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது

பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது

குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது

பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது

அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது

பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது

கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு

வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்

நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்

மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்

சனி, ஜூலை 4

நந்தனார்

tut-temple.blogspot.com: திருநாளைப் போவார் ...



கல்பனாக் கதையென்று
காமகோடிக் கதைகட்டியப் பிறகு
கடைகோடிச் சூத்திரன் நான்
கதைச் சொன்னாக் கேட்பேளா

கோபாலக் கிருஷ்ண பாரதியின்
கோணல் வரிகளால்
திருநாளைப் போவார் நாயனார்
திருப்புகழ் திரிக்கப்பட்டதாக

அவாள் உரைத்தாலும்
அறுபத்து மூவரில்
அவனொரு நாயனார் - அவன்
அனலில் எரித்ததை கேளுங்கள்

கொள்ளிடக் கரையினிலே
ஆதனூர் சேரியிலே
புலையராய் வகுத்த
பெருஞ்சாதியில் பிறந்தவன்

நமச்சிவாயனை
நாளெல்லாம் நினைத்து
புறத் தொண்டுப்
புரிந்த நாயகன்

ஆடுதல் பாடுதலோடு
அர்ச்சனைக்கு கோரோசனை
பேரிகைகளுக்காகப் போர்வைத்தோல்,
விசிவார் கொடுத்தவர்

குலப் பிறப்பிற்கேற்றக்
குறுந் தொண்டெனக்
கோயில் கொண்டவன்
குளிர்ந்தான் மகிழ்ந்தான்

திருப்புன்கூர் திருத்தலத்தில்
தெருவில் நின்று
எம்பெருமானை
இசைப்பாடி வேண்டுகிறான்

வந்தவனை
வாவென உள்ளழைக்காது
நந்தியை நகர்த்தி
நல்லதொரு தரிசனம் அளித்தான்

ஆனந்த கூத்தாடியை
அனுதினமும் நினைத்திருக்க
அவ்வாடலரசனைச் சிதம்பரத்தில்
அவன்தலத்தில் காண நினைத்திட்டான்

ஆயினும்
அவன் குல நிலையெண்ணி
நாளைப் போவேமென
நாட்களைக் கழித்தான்

இன்னல் தரும்
இழிப் பிறப்பன்றோ
இறைவனைக் காண
இடைஞ்சல் என மருகினான்

எந்நாட்டுடையோன்
ஏக்கம் அறிந்து
என்று வந்தாயென
கனவில் கேட்டார்

தீ முழ்கி வந்தால்
திவ்ய தரிசனமென
தீர்த்துச் சொல்லி
திரை மறைந்தான்

தீட்சிதர்கள் கனவிலும்
திரிபுரம் எரித்தவன் தோன்றி
தீவார்த்து அனுப்பென
தீர்ப்பெழுதியதால்

தெற்கு வாசலில்
தீ மூட்டி காத்திருந்தனர்
திருநாளைப் போவோம் வந்தார்
திருசிற்றம்பலம் என்றார்

அந்தணர் கண்களுக்கு
ஆலகாலனிடம் போவது தெரிந்தது
அவனுடனருந்தோருக்கு - அவன்
சென்றவிடம் காணாதுத்  தவித்தனர்

தெற்கு வாசலுக்கு
தீட்டு என்பதால்
எழுப்பியச் சுவர் – நாளதுவரை
திறக்கப்படவே இல்லை

இந்துவாய் இருக்கலாம் நீ
இனமானம் இருப்பதாய் – வேண்டாம்
மனிதன் என்றுரைத்தாலும்
மாட்சிமை தங்கிய நீதிமன்றம்

உத்திரவு வழங்காது
மடச் சுவரை இடிக்காது
காத்திருப்போம்
காலங் காலமாய்  தோழனே 

புதன், ஆகஸ்ட் 2

காவி காதல்




அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அம்மண மாக்கப்பட்டார்கள்
அவர்கள் தலித்தென்பதால்

கண்களால் கனிவது
காதல் உணர்வு
அம் மனஉறவை
அச்சப்படுத்துதல் முறையோ


அயோத்தி இராமனின் 
அக்கினி பரிட்சையில்
அவளுக்கு கிடைத்தது
கற்புக்கரசி பட்டம்

யோகி ஆதியநாத்
காவி ஆட்சியில்
காதலை கருக்கி
காப்பது சாதியை

மதங் கொண்டவர்கள்
மனித உயிர் வதைக்க - நீ
வேடிக்கை பார்க்கவா
வினை ஆற்றவா

மதங்களுக்கு மரணமும்
சாதிகளுக்கு சமாதியும்
காதலால்தான் சாத்தியம் - ஆக
காதல் செய்வீர்

சனி, ஆகஸ்ட் 27

குலத் தொழில்



செம்படவனோ
செம்மீன்
மரைக்காயாரோ அல்ல
எஸ் & எஸ், ஸ்ரீராம்
அக்மார்க் அய்யர்கள்
அயிரையைப் பிடிச்சு வித்தவங்க

கூறு 5 ரூபாவென்று
கூவி வித்தவன்
குப்பனோ, சுப்பனோ இல்லீங்க
பனியாக்கள்
ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பஜார்
பியானி, அம்பானி

நாலுபேர் தலைமுடி வெட்டி
நானூறுக் கோடிப் பொருளீட்ட
நாவிதனோ நான்
நேட்சுரல்ஸ், கீரின் ட்ரென்ட்
கார்ப்ரேட் முதலைகள்

வெள்ளன எழுந்து
வெளுத்துக் கொடுத்தவனை
வண்ணாரெனப் பெயரிட்டாய்
பிக் லாண்ட்ரி, லாண்ட்ரி பாய்
கடைத் திறந்தாயே
நீ என்ன சாதி

சப்பாத்தி முள் தைக்காதிருக்க
செருப்புத் தந்தவனை
சக்கிலி என்றாய்
மாட்டுத் தோலை இறக்குமதிச் செய்து
செருப்பு செய்யும் – நீ யார்
வெட்கமின்றிச் சொல்
  
சூத்திர பஞ்சமனின் வேலை
சுகமா இருந்தா வா
சாக்கடையைச் சுத்தம் செய்வோம்
கோடிகள் கிடைக்காவிட்டாலும்
குமட்டும் வாசனைப் பெறுவாய்

எனக்கோ எம்பெருமானின் கடாட்சம்
கருவறைக் குள்ளிருந்தால் கிட்டுமென
ஆகம விதிப்படிக் கற்றிருக்கிறேன் – ஆம்
அடியேன் பூசாரியாக வேண்டும்
அவனருளின்றிக் கோடிகள் வேண்டேன்

கிராமத் தேவதைகள்
அரவணைத்து வளர்ந்தவனென்பதால்
மதுரையம்பதியிலோ, காஞ்சியிலோ
மயிலைக் கபாலியோ அல்ல
அரங்கனோ அடியேனை ஏற்க வேண்டும்





சனி, ஜூலை 6

நாய்க்கன் கொட்டாய் காதல்



இச்சாதியில் பிறக்க
….இடைச்சாதிக் கண்ணன் அருளோ
பொஞ்சாதி யாயிருக்க
….பெண்ணாய் இருத்தல் போதாதோ
எச்சாதியா இருக்கட்டுமே
….என்னிணை அவனாகக் கூடாதோ
என்சாதிக் கௌரவம்
….எங்களைப் பிரிக்க மீண்டிடுமோ


மனித உயிர்கள்
….மனதால் இணையக் காதல்
இனிய மலர்கள்
….இல்லறம் காண வாழ்தல்
கனிந்த இதயத்தை
….கல்லெறிந்து தாக்கச் சிதைத்தல்
ஏனிந்த ஆயுதத்தை
….ஏற்றன சாதி அரசியல்


தாழ்ந்தவன் இவனென
…..தமுக்க டிக்க யாரிவன்
தோழனை தேர்ந்தேடுத்தே
…..துணையாய் வாழ்தல் தவறோ
வாழ்வை தொடங்க
….வாழ்வழித்த சாதிவெறி – அதனை
வீழ்த்த என்னவழி
.....வீணான சாதியை விட்டொழி



புதன், செப்டம்பர் 14

நாடாத்தி

நேற்று நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், வயது 35 க்குள் இருக்கும். இதுவா முக்கியம்.  அவர் சிறுவயதாக (10-12) இருக்கும் போது உறவுக்காரர் நாடாத்தி உள்ளே வராதே என்று திட்டி அழ வைப்பாராம்.  இத்தனைக்கும் அவர் அந்த சாதியை சேர்ந்தவர் அல்ல.

எத்தனையோ செய்திகள், நாடாத்திகள் மாராப்பு சேலை போராட்டம் அந்த மாவட்டத்தில்தான் நடைபெற்றது.  இந்த சாதியை சேர்ந்த ஆண்கள் செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு அணிய கூடாது இத்தனை கட்டுப்பாடுகள் 80 களில் இறுதி வரை

தன் சாதிக்காரியை திட்ட அவர்கள் மனதில் மட்டமாக  உள்ள சாதியின் பெயரை சொல்லி திட்டிக் கொள்வதில் உள்ள திருப்தி, அதில் பாதிக்கபடும் மனம்........?

இன்னும் கிராமங்களில் இந்த சாதிய படிமம் மாறவில்லை.  நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் சக்கிலிய குடி என்று தனியாக ஊருக்கு வெளியே உள்ளது.  அவர்களிலும் பாகுபாடு.

மனிதன் ஏன் சாதியின் பெயரால் அடுத்த மனிதனை கீழாக பார்க்க வேண்டும். காரணம், நிறமா, பொருளாதாரமா, அல்ல ஆதிக்கத்தால் ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிக்கு அடிபணியுதா?


இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...