புதன், டிசம்பர் 8

கடவுள் சொத்து – வளர்ச்சிக்கா



உலகளந்து
ஓடியாடி உழைத்து
பிட்டுக்கு மண் சுமந்து
சேர்த்தச் சொத்துக்கள்


மாட மாளிகைகள்
வணிக வளாகங்கள்
விவசாய நிலங்கள்
கல்லூரிப் பள்ளிச் சாலைகள்


வேர்வை முத்துச் சிந்தி
பார்வைக்குக் கட்டணம் வாங்கி
பலகாலம் சேர்த்தச் சொத்தில் - பங்கு
அரசின் வளர்ச்சிக்கா

சொத்து
வாரிசு உரிமைக்கு உட்பட்டது
வாரிசு இல்லையெனில் - அரசுக்கா
ஒன்று விட்ட உறவுக்கா


மரித்த கடவுளின் சொத்துக்களை
வாரிசு உரிமை கோரும்
வகையறா
நீதிமன்றம் வருமோ


இந்திரன் சோமன்
இவர்கள் மாஜி கடவுள்கள்
கிரேக்கத்திலும்
இந்தப் பட்டியல் உண்டு

வகை நான்கு
வழிபட தேவபாஷை - என
வகுத்த கடவுளை
வார்த்தெடுத்த நீதி அரசர்கள்


புதிய காரணங்களை
புனைந்து எழுதுவதால்
கடவுளின் இருப்பை
நீட்டிக்க முயல்கிறார்களோ?


அப்பாவி பக்தர்கள்
அளித்தக் கொடைகள்
தங்க கோபுரமாக
தகதகவென மினுக்க


மினுக்கும் அழகில்
தனது கடவுளென மதிமயங்கி
எந்நாடுடைய சிவனேயென
ஏற்றிப் போற்றிட

கனவில் வந்தே
காப்பாற்று என் சொத்தை
நீதியரசருக்கு
கட்டளையிட்டிருப்பாரோ

அரசின் வளர்ச்சிக்கு
அடிப்படை வருமானம்
திருவிடந்தை பெருமாள் மட்டுமல்ல
திக்கெட்டும் காரணமாக கூடாதாம்


இந்து கோயில் வருமானத்தில்
கல்லூரித் திறப்பதா
கல்விக்கண் திறப்பதா
வேதம் கற்கட்டும்

வேதம் கேட்ட காதுகளில்
ஈயம் ஊற்றியவர்கள்
சூத்திரனிட்ட பிச்சையில்
வேதம் ஓதுகிறார்கள்

ருத்ர பூமி -சிவனுக்கு
பட்டாப் போட்ட இடமா
மானுடம் அமைதிக் கொண்டமிடமா - அல்ல
வீட்டுமனைகளாய் மாறியமிடமா


மலைகள் ஓடைகள்
மாயமாய் மறைய
அரசு ஆவணங்களும்
காசுக்கு மாறும் காலத்தில்

குலநாசமென
கூக்குரலிட்டாலும்
கூசாது மனைகளாய் மாற்றுவான்
கூத்தன் வரவே மாட்டானென்பதால்


சொத்துவரி
தொழில் வரி
மூலதன ஆதாய வரி - இன்னப் பிற
வரிகள் செலுத்துகிறாரா கடவுள்

அறிவுக் கூர்மையால்
அள்ளிச் சேர்த்த வருமானத்தில்
30% அரசு வசூலித்ததா?
முழு விலக்கு அளித்ததா


நீதிமன்றங்கள்
நேர்மையில் விலகுது
மானுடம் காப்பதை மறந்து
மதங்களை காக்க தீர்ப்பெழுதுகிறது


மதங்கள்
மானுடத்தை பிரித்து வைக்க
இயற்கை
இணைத்து வைக்கிறது


இணைவோம்
இறைவனை காணவல்ல
இறைவனின் இருப்பை நீட்டிக்கும்
இ.பி.கோவை மாற்றி எழுதுவோம்

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...