ஹிஜாப் – மதஉரிமை
திருநீறு – இந்துத்துவம்
வெறுப்பை விதைக்கும்
வேத விற்பன்னர்களோ
வேண்டாத மதவாதிகளோ
மேற்கூறியவை
நாலு வரியில்
நால் வர்ணத்தையல்ல
நாட்டை பிளவுபடுத்த
முகநூலில் வெளியிட்டவை
பொய்யும் புனைச்சுருட்டும்
பிழைப்பாய் கொண்டவர்கள்
வாழ்வை அழிக்க
வதந்தியை பரப்பினாலும்
ஆய்ந்தறியும் திறன்
அறிவுடைத் தமிழனுக்கு
ஆதியிலிருந்து உண்டென்பதால்
அடியிற் காணும் விளக்கங்கள்
மடிசார், பஞ்சகச்சம்
கொடியிடை மறைக்க
குற்றமேதுமில்லை
கலாச்சாரத்தின் அடையாளமாய்
காணும் ஆடைகளை
கலவரமாய் மாற்றுவதேன்
ஜப்பான், பூட்டான் ஆடைகளை
சீர் செய்ய கிளம்பாமல்
ஹிஜாப் –ல் நுழைவதேன்
பிடி சாம்பலாய்
பிணமான பின் மாறும் உடலில்
தரிக்கும் திருநீறு
சைவத்தின் அடையளாமாம்
இந்துத்துவம் – இங்கே
வந்துதிப்பது எதற்காக
திருமண், சந்தனம்
குங்குமம் குறியீடுகளாய் இருக்கலாம்
குழப்பம் விளைவிக்கவல்ல
புர்கா – மதஉரிமை
காவித்துண்டு – மதவாதம்
பூணூல், உச்சிக்குடுமி
சர்வாதிகார சாதியாய் இருக்கட்டும்
சமுகத்தை பிரிக்காத வரை
மங்களூர் கலவரம்
மானுடத்தின் நிலவரமா
மதவாதத்தின் எதிர்வினையா?
கருப்பு திரவிடமாய்
சிகப்பு கம்யூனிசமாய்
பச்சை விவசாயமாய்
மஞ்சள் மங்களமாய்
மாநிலத்தில் இருக்கையில்
காவி கலவரமாவதேன்?
ஹலால் உணவு - மதஉரிமை
வெஜிட்டேரியன் உணவு – பார்பனியம்
கிடைத்ததை உண்டு
காலத்தை வென்றவன்
ஹலால் அசைவமென்கிறான்
கனியோ காய்கறிகளோ
மனிதன் உண்ண
மண்ணில் விளைந்தவை
குதிரைகளை கொன்று
அசுவமேத யாகம் வளர்த்தவர்கள்
அக்லக்கை கொன்று – தாங்கள்
அசைவமல்ல என்கிறார்கள்
ஆடு, மாடு, கோழிகள்
அறுத்து ஏற்றுமதி செய்பவர்கள்
அவாள்களாக இருக்க
அடுத்தவன் உண்பதை
அவமானமாக சொல்பவனின்
அழுக்கை யார் சொல்வது
மச்ச, கூர்ம, வராகம்
அவதாரங்களா….. மாமிசமா ......
கொல்கத்தா பிராமணனுக்கும்
ஆமைக்கறி சீமானுக்கும் தெரியாதா
அல்லாஹூ அக்பர் – மதஉரிமை
ஜெய்ஸ்ரீராம் – தீவிரவாதம்
இறைவனே மிகப் பெரியவன் எனும்
இஸ்லாத்தின் அல்லாஹூ அக்பரை
இவர்கள் ஏன் சீண்டுகிறார்கள்
ஓம்….
ஓங்காரமாய், பிரணவமாய்
ஒலிக்க ஒரு உபவத்திரமில்லை
ஹரஹர மகாதேவ
அரோகரா, கோவிந்தா ஒலிகளில்
பக்தியே தவழ்ந்தது
புத்தம், சரணம், கச்சாமி
பரலோகத்திலுள்ள பிதாவே
அல்லாஹூ அக்பர்
ஒன்றிணைந்தே இருந்தோம்
மகமாயி, மாரியாத்தா
முருகன், சிவனை
முடக்கவா ஜெய்ஸ்ரீராம்
ஜெய்ஸ்ரீராம் ஒலித்தவுடன்
ஜெக்கம்மா
கெட்டகாலம் பொறக்குது என்றாளே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக