திங்கள், அக்டோபர் 14

பங்குச் சந்தை

 












யாரோ
யாருடையப் பணத்தையோ
திருடிக் கொண்டிருக்கிறார்கள்

பதினாறு இலட்சம் கோடி
பங்குச் சந்தையில் காணவில்லையாம்
பதறாமல் விற்பனை தொடருகிறது

கொண்டுச் சென்றவர் யாரென்றோ
கொள்ளையடித்தவர் யாரென்றோ
பணத்தை பறிக் கொடுத்தவர் கேட்கவில்லை

ஹிண்டன்பர்க் அறிக்கையோ
இழந்த உயிர்களோ
ஏதும் செய்ய முடியாது

சட்டம் அங்கீகரித்த
பட்டவர்த்தன  பகற்கொள்ளை
இலாபமெனப்படுகிறது

உலக மயமாக்கலில்
அயலக நிறுவனங்களின் முதலீடு
உன்னைச் சுரண்டவா  

ஒழுங்கமைப்பட்ட திட்டத்தின்
கீழுள்ள முதலீடுகளின் உத்திரவாதம்
கள்ளத்தனமிக்க ஓர் ஒப்பாரி

ஹர்சத் மேத்தாக்கள்
கேத்தன் பரேக்குகள்
நேற்றைய இராசாக்கள்

சித்ரா இராமகிருஷ்ணன்
மாதபி புச்
இன்றைய இராணிகள்

ஊதிப் பெருக்கப்படும்
ஊக வணிகம்
உலகிற்குத் தேவையா

உழைப்பின்றிக் கிடைப்பதால்
உபரியென்று முதலீடு செய்கிறாய்
உள்ளதும் போனபின் ஏன் அழுகிறாய்

ஞாயிறு, அக்டோபர் 6

எட்டாம் பொருத்தம்

















ஏழெட்டுப் பொருத்தம்
எனக்கும் அவனுக்கும்
வாழட்டும் என்றே
வழியனுப்பி வைத்தது
பாழும் கிணரென்று
பாதகத்தி அறிந்தாலும்
சூழல் இல்லையே
சுற்றத்திடம் சொல்லியழ

மனப்பொருத்தம் இல்லாத
மணவாழ்வு இனிக்குமோ
என்வருத்தம் எதுவென்று
எனையீன்றோர் அறிவாரோ
சினமிருந்தும் கட்டியவனின்
சிறகொடிக்க மனமில்லை
வனவாசம் என்றானபின்
வாழ்விற்கு காரணமில்லை

பொருந்தா வாழ்வுதனில்
பொலிவுற வழியில்லை
இருந்தாலும் கனவுகள்
இருளகற்ற போராடுது
வருந்தாத இணையோ
வளையவளைய வருகுது
திருந்தாத மடங்களுக்கு
திசைக்காட்டியும் விளங்காது

ஆசையா நெருங்கவும்
அன்பேயென அரற்றவும்
யாசகமா கேட்பது
இயற்கைக்கு முரணானது
வேசையென பட்டமளித்து
வேண்டாத பொருளாக்க
காசினியில் இருந்தென்ன
காலனிடம் சென்றாலென்ன

வளரும் பிள்ளைக்காக
வசந்தத்தை மறக்க
உளரும் ஊருக்காக
ஒருவேடம் தரிக்க
தளரும் இளைமைக்கு
தண்டணை கிடைக்க
துளங்கா வாழ்வில்
தூண்டுதல் தானாரோ

சுவர்க்கம் தேடினேன்
சூன்யம் சூழ்ந்தது
சுவாசம் நிறுத்திட
சுவரொன்று தடுத்தது
விவாக ரத்தென்றாலும்
விமோசனம் மறுத்தது
உவர்நில மென்றாலும்
உயிரோடு இருக்கிறேன்

எனக்கான வாழ்வு
என்றுதான் கிட்டுமோ
அனலான நெஞ்சமது
அமைதி அடையுமா
புனலாக புதுவாழ்வு
பூரிப்பை தருமோ
வினாவிற்கு விடையுண்டு
விகற்பத்திற் கேதுமில்லை



சனி, அக்டோபர் 5

பனிபடர்ந்த தேசத்தில் பாவையுன்னைத் தேடுகிறேன்






பனிபடர்ந்த தேசத்தில்
பாவையுன்னைத் தேடுகிறேன்
கனியுதட்டின் காயத்திற்கு
கப்பம்கட்டப் போகிறேன்
இனிதென்று வாங்கியதை
இளஞ்சூட்டில் தருவாயோ?
நனியென்று நாயகனை
நாள்முழுக்க கொஞ்சுவாயோ?

பள்ளத்தாக்கின் பசுமையும்
பாய்தோடும் நீரோடையும்
கொள்ளையிடும் காட்சியால்
கொண்டல் பரவசமாக்க
துள்ளிடும் இளமையோ
தூதொன்றை ஏற்குது
உள்ளங்கள் ஒன்றாகி
உருகிதான் போகுது

முடிவில்லா மலைமுகட்டை
மூடிடும் மேகங்கள்
வடிவழகில் மையலுறும்
வண்டுகளாய் நின்றிட
கொடியொன்று அசைந்து
குழப்பத்தை விளைவிக்க
நொடியொன்றை வீணக்காது
நெஞ்சோடு சாய்ந்தாளே

வெள்ளி, அக்டோபர் 4

வெற்றிக் கழகம்

















கூத்துக் கட்டியவன்
குறைகளை களைவதாய்
கூட்டத்திடையே சூளுரைத்தான்

வசனங்கள் வசீகரிக்க
விண்ணதிர கைத்தட்டல்
மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல

கனவு வளர்த்தான்
கறுப்பை செலவளித்தான்
காசுக்கு கூட்டம் சேர்ந்தது

பலம் வாய்ந்தவனென
பத்திரிக்கைகள் புல்லரித்தன
பகற்கனவு தொடர்கதையானது

புதிய வரவாய்
வெற்றிக் கழகம்
போற்றிப் பாடுமா தமிழகம்

அரிதாரங்களாய்
அவையடக்கம் அறிந்து
அமைதி காத்தவர்கள்

புயலாக வருவதாய்
புழுதியை கிளப்ப
புலிகள் உறுமுகின்றன

மக்களுக்கு
தையல் இயந்திரமும்
தரை டிக்கெட்டும் கொடுத்த

வள்ளல்
ஊழல் பெருச்சாளிகளிடம்
ஒரு சீட்டுக்கு மண்டியிடுவாரா?

கழகங்களில் ஒன்றாய்
கடைச் சரக்கை விற்க
கபட நாடகம் நடத்துவாரா?

ஜோசப்பின் தேசமல்ல
என்றபோது
ஓசன்னா என முனுமுனுக்காதவனா

உழைக்கும்
உங்களை இரட்சிக்க
ஓடோடி வருவான்

ஆட்சி அதிகாரம்
அன்னமிடும்
அட்சய பாத்திரமா

அவர்கள் சொத்தை
நூறாயிரம் மடங்காய்
மாற்றும் தந்திரமா

என்ன செய்வான்
எப்படிச் செய்வான்
ஏதாவது சொன்னானா?

மக்கள் சேவை
மகுடம் தரித்த
தொழிலாக மாறியதாலும்

கொள்ளையடித்தாலும்
குற்றமில்லை என்று
நீதியரசர்கள் தீர்ப்பெழுதுவதாலும்

வெற்றுக் கூச்சலோடு
வெற்றிக் கழகமென வருகுது
விழிப்பாயிரு தமிழா…

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...