வெள்ளி, பிப்ரவரி 4

ஒன்றிய பிரதிநிதியின் துரோகம்

 



தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, வெகுஜன மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு மசோதாவை அனுப்பினால் ஆறு மாதங்கள் காலம் தாழ்த்தி ஏற்க முடியாது என்பதோடு மட்டுமல்ல உண்மைக்கு புறம்பான காரணத்தை சொல்லி  ஒன்றிய பிரதிநிதி திருப்பி அனுப்புகிறார்.

நீட் தேர்வை கிராமபுற மற்றும் அரசு மாணவர்கள் வற்வேற்கிறார்கள். அவர்கள் அதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

7.5 சதவீத ஒதுக்கீடு தேர்தலுக்காவும், 20 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்பாலும் பெறப்பட்டது. அவ்வொதுக்கீடை இப்போதும் தொடர்வதால் நிராகரிக்க இயலாது.

நீட் தேர்வில் இம்முறை வெற்றிப் பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மத்திய கல்வி முறையில் (CBSE) பயின்ற மாணவர்கள் முதல் 600 பேர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசு மாணவர்கள் ஒதுக்கீடு மூலமே பயனடைந்துள்ளனர்.  ஒதுக்கீடு இல்லையெனில் அவர்களுக்கு இந்த வாய்ப்பும் பறிபோயிருக்கும்.

ஒன்றிய பிரதிநிதியின் துரோகத்தால் அரசு தன் முடிவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.  மத்திய கல்வி முறைக் கல்வி, மாநில அரசு கல்வி முறையில் பயின்ற மாணவர்களை விகிதாச்சார முறையில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்.

இப்படி செயல்படுவதால் ஒதுக்கீட்டின் சதவிகிதம் அதிகரிக்கலாம்.

இதையும் கடந்து கல்வி வியாபாரம் என்றான பின் அதன் கட்டணங்கள் அதிகமாகதான் இருக்கிறது.  98 = 55,50,00,000  என்பது நாட்டின் வளத்தைக் காட்டுகிறது.  அப்படிதான் கல்வியிலும்.

மற்ற இலவசங்களைக் காட்டிலும் எந்தக் கல்வியையும் இலவசமாக கிடைக்கச் செய்தால் நீட் தேர்வுகள் தேவையில்லைதான்.

 

மருத்துவக் கல்வியின் ஒரு ஆண்டு கட்டணங்கள் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இப்படி இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி                                15000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு     600,000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% நேரடி ஒதுக்கீடு   20,00,000

தனியார் நிகர்நிலை பல்கலைகழங்கள்                   25,00,000

 

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு ரூ. 10 லட்சமாக இருக்கிறது. அரசு கல்லூரிக் கட்டணம் தவிர்த்து மற்ற தனியார் கல்வி கட்டணங்கள் ஏறக்குறைய ஒன்றே. ஒரு பாடத்தை ஒரே வகுப்பில் வேறு வேறு மாணவர்கள் இம்மாதிரி கட்டணம் செலுத்தி படிப்பதே இன்றைய மருத்துவக் கல்வி. இலவச தரிசனம் முதல் ரூ 200 வரை கட்டணம் பெற்று தரிசனம் தரும் கடவுள் உள்ள நாட்டில் இப்படிதான் கல்வியும்.  மக்கள் அதற்கு அடிமை. கல்விக்கு மௌனியாக கடந்துச் செல்கிறார்கள்,

இதற்கு தீர்வு காணாமல் நீட்டிற்கு தீர்வு காண்பது பெரிய வெற்றியல்ல.

இது மட்டுமல்ல. நாமக்கல் பிராய்லர் கோழிகள் மன்னிக்கவும், மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். மத்திய மாநில வழி கல்வியானாலும் அங்கே வகுப்புகள் A to Z மட்டுமல்ல AA to Az வரை நடைப் பெறுகிறது. கட்டணம் ரூ 2-3 இலட்சங்கள் நீட் பயிற்சிக்கும் சேர்த்து.

ஆக கல்வி என்பது மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். கொள்ளையடிப்பவர்களுக்காக அல்ல

வியாழன், பிப்ரவரி 3

காதலி கண்பாரடி

 


காதலி கண்பாரடி
காதலில் வாடுமெனை
சாதக வார்த்தையால்
சக்திமா னாக்கடி
வீதியில் சுற்றுமெனை
விரைவில் காத்திடு
ஆதியில் ஏவாளும்
அங்ஙனமே செய்தாளடி

காதலர் தினமா
காத்திருக்கும் எனக்கேதடி
நாதமோ வேதமோ
நாளும்நின் அருளடி
ஆதலால் அன்பே
அடியவனை ஏற்பதாய்
சாதகப் பதிலை
சங்கேதமாய் உணர்த்தடி

காத்திருக்க வைப்பதா
காதலியுன் சோதனை
பூத்திருக்கும் அன்பினை
புற்பதமாய் எண்ணிட
யாத்திருந்த பாக்களா
யாசகனின் உத்தியா
சாத்தியத்தை உரைத்தால்
சட்டென ஏற்பேனே


மொட்டுக்கள் பூவாக
மோனநிலை யிருக்கு
மெட்டுக்கள் நீயிட்டு
மெய்நலம் கூறாதே
கட்டுக்கள் தளர
காயங்கள் வருமே
சிட்டுக்கள் பறப்பது
சிறையில் அடையவா

விட்டுச் செல்லவா
விருப்பம் சொன்னேன்
எட்டிச் செல்லாதே
என்னினிய காதலே
விட்டிலாய் வீழவா
விழுதுவிட்டு வாழவா
திட்டமிடு பெண்ணே
தீர்ப்பை வழங்கிடு

பிழைகள் இல்லையடி
பிடித்தால் இணைவோம்
தழைத்தல் இயல்படி
தகுதலாக்கு மனதினை
உழைக்கும் உறுதியுண்டு
உறுதுணையாய் நீயுண்டு
அழைத்துக் கொள்ளேன்
அறத்தோடு வாழ்வோம்

ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்த தையிலே
மேகங்கள் மறையலாம்
மேற்திசைக் காற்றிலே
பாகமான வாழ்வில்
பாதியில் கைவிட்டு
போகவாழ்வு வீண்னென்ற
பட்டினத்தான் அறிவாயா

ஞானியாய் மாறவா
நாயகியை நேசித்தேன்
ஏனிந்தச் சிந்தனைகள்
என்றென்றும் பூசிப்பேன்
நானிலமும் வியந்திட
நன்றாய் வாழ்ந்திட
ஆனிப்பொன் அழகே
அத்தானை நினைத்திடு


ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...