வியாழன், நவம்பர் 19

தேவதையின் துலாக்கோல்




கருப்பு அங்கிகளின்
கௌரவம் காக்கும்
தேவதையின் துலாக்கோல்
கண்கட்டு வித்தை

விருப்பு வெறுப்பின்றி
விறுவிறுப்பான வியாபாரம்
வியாக்கியானம் தேவையில்லை
அங்கீகரிக்கப்பட்டது

கொள்ளையர்களிடம் மனசாட்சியை
தட்டியெழுப்பும் துலாக்கோல்
இல்லாதவர்களிடம் இரக்கமின்றி
இ.பி.கோவை நீட்டி முழக்கும்

தில்லை நடராசனுக்கு
தீச்சட்டி வாரிசுகள்
தீட்சிதர்கள் மட்டுமேயென – ஆகம
விதியெழுதும் துலாக்கோல்

பளுவிற்கேற்ப
பணம் நிரப்ப
துல்லியமாய் நிற்கும்
துலாக்கோல் – கண்கட்டு வித்தையல்ல

பணம் குறைந்தால்
இ.பி.கோவை ஏற்றி
சட்டம் கடமையை
செய்ததாய் சப்பைகட்டும்

கௌரவ கொலைகள்
காணாத மலைகள்
தாதுமணல் குழிகள்
தப்பிக்கும்வழி – துலாக்கோல்

மாட்சிமை தங்கியவர்கள்
மரபுகளுக்குள் ஒளிந்தனர்
மாண்புகளை காக்கவேண்டுமென
வேதம் ஓதுகின்றனர்

தட்டில் நிறுத்தப்படுவது
குற்றமா? நீதியா?
பணமா? பதவியா?
நேர்மையா? குறியீடா?

சட்டமியற்றுபவன்
சட்டம் படித்தவனா
சமூக அக்கறையாளனா? – அட
ஓட்டுப் பொறுக்குபவன்

ஓட்டுப் பொறுக்கிகளின்
ஓட்டை உடைசலுக்கு
பேரிச்சம் பழமளிப்பது
துலாக்கோலின் வேலை

துல்லியமில்லா துலாக்கோலென
தூக்கியெறிய - பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு
முணுமுணுக்க வேண்டும்

ஊழல் மேடையை
உடைக்கா சுத்தியலை
அடை காப்பதால்
எடையில் மாற்றமில்லை

குடி ஆட்சியில்
நீதி அரசர்கள்
குறுநில மன்னர்கள்
கப்பம் கட்டுகிறார்கள்

பிஆர்பி, வைகுந்தராஜன்
அம்பானி, வேதாந்தா அகர்வால்
டாட்டா பிர்லா இன்னும் பிற
கல்வி வள்ளல்கள்

சதவிகிதங்களில் பேரமென்பதால்
சதவிகிதங்களில் ஆமோதிப்பு – ஆம்
25 சதவிகிதம் ஊழல்
துலாக்கோல் ஒப்புதல்

விசாரணை – விலையென்ன?...
கேள்விதானே? – விலையா?..
கைது!!!! உடன்படுகிறாயா – இது
கட்டை துலாக்கோல்

கேள்விகள் கேட்கப்படும்
ஆம் இல்லையென்றே
அரற்ற வேண்டும் – இல்லையெனில்
புழலுக்கு செல்ல வேண்டும்

எதிர்கேள்வி துலாக்கோலை
எதிர்பதாகும்  - துல்லியமானதை
தென்றலும் தீண்டலாகாது – ஏனெனில்
புயலை உருவாக்கலாகாது

ஒய்யாரக் கொண்டையில்
ஊழலை மறைக்க
ஊரெல்லாம் நாறுதே
“உத்தமன்” வில்லனானே

மூப்பெய்தியது துலாக்கோலென
மரியதையாய் அனுப்புவோமா?
முச்சந்தியில் நிறுத்தி
முத்தான தீர்பளிப்போமா



வியாழன், ஜூன் 18

முத்தம்











அன்பு கொண்டதாலா
ஆசை மூண்டதாலா
ஆர்வம் வந்தததாலா
அவளிட்ட முத்தம்

சத்த மிட்டா
சட்டென்று தொட்டா
சாறு பிழிந்தா
சத்தான முத்தம்

கன்னத்தில் ஒத்தடமா
கனியுதடு பத்திரமா
காதல் வேகத்தில்
கண்டபடி முத்தமா

தேகத் தீண்டலில்
மோகம் தீருமா
முத்தக் கொள்முதலில்
மூச்சடக்க முடியுமா

தொட்டுக் கொள்ளவா
தொடர்பு நீளவா
தட்டு தடுமாறவா
தருகின்ற எண்ணிக்கையில்

ஞாபக முத்தங்கள்
நாயகன் நாயகிக்கிட்டதா
மோக தாகத்தில்
மொத்தமும் மறந்ததா

மறக்காத முத்தம்
திறக்காத புத்தகம்
சுரக்காத அன்பு
சுகம்தாரா முத்தம்

அன்பை  சொல்லவே
அகம் மகிழவே
ஆயுள் நீளவே
அந்த முத்தங்கள்

வையகத்தில் உள்ளவரை
வாழ்வின் சுவையை
வகைவகையாய் வழங்குங்கள்
வற்றாத முத்தங்களாய்


செவ்வாய், ஏப்ரல் 28

கருப்பு சிவப்பு


கருப்புதான் எனக்கு பிடிச்ச "கலரு"
கானா காண்பவனின் போதை பாடலு
இருப்பு இந்தியாவா அமெரிக்காவா சொல்லு
இனபேதம் இல்லையென வாயை மெல்லு

பள்ளுபறை சக்கிலி பஞ்சாயத்து தலைவனா?!
பாராண்ட பரம்பரை பணிவா இருக்கணுமா?
கருப்பின பெண்மணி நகரசபை தலைவரா?
சிவப்பினம் சேவகம் செய்ய தயாரா!

"டியூஸ் பைர்ட்" கருப்பின பெண்மணி
மிசௌரியின் பர்ம நகர தலைவராகிறார்
அசௌகரியமென பதவியேற்பு  உறுதிமொழி சொல்பவர்
அரசின் பதவியிலிருந்து விலகுகிறார்

ஒருவர் இருவரல்ல அனைத்து சிவப்பினமும்
ஓற்றுமையாய் பதவி விலகி சென்றனர்
திருமண வீட்டில் சீப்பை ஓளித்துவிட்டார்கள்
மணவிழா உண்டா இல்லையா? மக்களே!

இனப் பிரச்சினையோ? சிறுபான்மையின அதிகாரமோ?
"அதற்கும் மேலே" பாதுகாப்பின்மைதான் காரணம்!!!
அரசு செயல்படும் ரகசியம் அறியாதோர்
முரசு கொட்டும் இச்செயலை மூடியே வைப்பர்

மேல்தட்டென்பது -  நிறமா, பணமா, அதிகாரமா
தாழ்த்தப்பட்ட தலைமைக்கு இதுவும் காரணமா
மிசௌரியும் மதுரையும் பாரினில் ஒன்றானதா - ஆம்
அமெரிக்கா வல்லரசு இந்தியாவும் வல்லரசு


ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...