புதன், ஜூன் 17

கறுப்பு







வல்லினமா
மெல்லினமா
கறுப்பா – கருப்பா
நிறமா – சினமா

கறுப்பெனில் சினம்
காயம் படபட
ஆறாது………
ஆறாகப் பெருகும்

ஜார்ஜ் ப்ளாயெட்
இயலாது போனான்
ஆயினும் மூச்சு
ஆறாது ஓடுது

நிறம் அவனா
நீங்கள் உயிரா
மாய்வது இனமா
வாழ்வது நீங்களா

பிரெடரிக் டக்லஸ்
ரோசா பர்க்ஸ்
மார்டின் லூதர் கிங்
மாறாத்  தொடர்கதையாய்

அழகற்றவர்கள்
நாகரீகமற்றவர்கள்
வெள்ளை உலகின்
உளவியல் உருவாக்கங்கள்

ரோமனியனுக்குத் துக்கமாக
பெரியாருக்கு எதிர்ப்பாக
அறிவியலாளருக்குக் கருந்துளையாக
வெள்ளையனுக்கு வெறுப்பாக

நீதியின் சின்னமாய்
பகுத்தறிவு வண்ணமாய்
எதிர்பின் அடையாளமாய்
கன்னிச் சாமியாய்

கருப்பு பணமாய்
கறுப்பு ஆடுகளாய் 
கறுப்பு நிறுவனங்களாய் 
கறுப்பின் பட்டியல் நீளலாம்

கருப்பு எதுவென
கதை நாயகி
வரிசைப் படுத்த
பிடித்ததோ கருப்பு

வலியைப் போக்க
புனைந்து எழுதியதால்
பிடித்த நிறமென
பிதற்றி திரிகிறோம்

கருப்பே அழகு
காந்தலே ருசி
கவைக்கு உதவாது
களத்தில் படும் அவமானங்கள்  

சிவப்புப் பச்சையோடு
நீலம் கூடினால்
வெள்ளையாம் – ஏதும்
இல்லையெனில் கருப்பாம்

வண்ணங்களுக்கு இலக்கணம்
வடித்த மனிதனோ
இனங்கள் இயற்கையென
ஏனோ ஏற்க மறுக்கிறான்

அடர் கருப்புக்கு
அந்த நிறம் எடுபடாதென
வெள்ளையை
தேர்ந்தெடுப்பாய்

ஊதா கதிர் வீச்சில்
உடலைக் காக்குமாம்
உள்ளம் தாங்கலியே
உதவாதப் பேச்சில்

கருப்பச்சாமி - எங்கள்
குலத் தெய்வம்
குறத்தி வள்ளியோ
சுப்புணிக்குத் துணை 

வக்கற்றுப் போனால்
வாழ்வில் சங்கரன்
பிச்சை ஏற்றிட
தாழ்ந்துப் போவதில்லை

குல நியதியென
வேத முரைப்பதால்
மேன் மக்களாய் – மற்றோர்
மண் மக்களாய்

கருமை நிறக் கண்ணன்
களவாடினாலும்
கன்னியர்களால்
காதலிக்கப்படலாம்

மைக்கேல் ஜாக்சனின்
பிளாஸ்டிக் முகம் – நீங்கள்
குதுகலித்திருக்கலாம் – ஆயினும்
அவனை கொன்றது

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
இந்தியப் பூர்வகுடிகள்
இனவெறியின்
இலக்குகள்

ஃபேர் அன்ட் லவ்லியால்
நிறத்தை மாற்றலாம்
வெறுப்பவனை
வீழ்த்துவதெப்படி

அழகர்
கள்ளழகரான
தல புராணம்
தமிழனின் வரலாறு

மரபணு மாறுமா
மனங் கலந்தால் – ஆம்
இனங்கள் இணைய
இழிவுகள் மறையலாம்

நிறத்தால் மேம்பட்டவன்
நிலமதில் யாரிங்கே
குணத்தால் அநீதிகண்டு
கொதிப்பாயெனில் மனிதனாவாய்

கருப்போ மஞ்சளோ
எதுவாகவும் இருக்கட்டும்
எனகிங்கு உரிமையில்லையா
நானிங்கு மனிதனில்லையா

உளவியல் மாற்றமும்
பண்பாட்டு ஏற்றமும்
பொருளாதாரச் சமச்சீரும்
சமூகத்தைச் சமத்துவாக்கும்

அதுவரை
வெறுப்பவனை நேசிக்கச் சொல்லும்
வேதங்களை ஒதுக்கிடு
வேரறுக்கப் போராடு



2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... வேதங்களுக்கும் கீதைக்கும் நேர் எதிர் எது என்பது தெரியும் தானே...?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பகுத்தறிவின் வண்ணம்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...