கலை நாயகன்
காட்டிய ரூபம் அன்று
வேதமூர்த்தியான விஷ்ணுவின்
விஸ்வரூபத் தரிசனம்
பிறப்பு இறப்பு - இன்னும்
பிற இரகசியங்களையும்
அரியே உந்தன்
அழிவற்றப் பெருமையும் கேட்டேன்
உன்வண்ணம் இதுவென
எவ்வண்ணம் வர்ணித்தாயோ
அவ்வண்ணமே உணர்ந்தேன்
அவ்வாறுக் காணத் தகுதியிருப்பின்
அழிவற்ற அவ்வடிவை
அடியேனுக்கு காட்டிடு
மனமயக்கம் நீக்கியவனே
மாரூபத்தைக் காட்டிடு
திருதிருப் பார்வையால்
தெய்வத்தைக் காணமுடியுமோ
தெய்வப் பார்வை
அருள்கிறேன்
திருமேனியை பார்
பார்…….
அனைத்தையும் பார்
அசைவதையும் அசைவற்றதையும்
எதைஎதைப் பார்க்க
விரும்புகிறாயோ
எல்லாவற்றையும் பார்
வசுக்களையும் உருத்திரர்களையும்
அசுவினி தேவர்களையும்
ஆதித்தியர்களையும்
அவர்தம் பரிவாரங்களையும்
பார்
பல நிறங்களாய்
பல வடிவங்களாய்
– என்
தெய்வத் தன்மை
பொருந்திய
உருவங்களைப் பார்
நூறாக ஆயிரமாக
பெருகும் வடிவத்தை
பார்த்ததில்லையே?!
பார்த்தனே பார்
பார்
அங்ஙனம் கண்டதை
அவ்வாறே திருதராஷ்டிரனிடம்
சஞ்ஜயன் உரைத்திட்டு
மேலும் தொடர்ந்தான்
ஆயிரம் சூரியனின்
அளவற்ற ஒளி
அம்மகா புருஷனின்
அற்புத முகவடிவாகும்
ஆயுதம் பலவும்
ஆபரணம் பலவும்
அஃதுடன் முகம்
பலவும்
அர்ஜுனன் கண்டிட
பெருமானின் உலகத்தை
பெருவுருத்தில் கண்டதால்
பெருமகிழ்ச்சிக் கொண்டே
தலைவணங்கிக் கூறினான்
உன் தேகத்தில்
உயிர்கள் பலவும்
பிரம்மனையும் ரிஷிகளையும்
சர்பங்களையும் கண்டேன்
எல்லையற்றவனே
எங்கும் நிறைந்திருப்பவனே
அடி முடியையும்,
நடுவையும்
அடியேன் காணவில்லை
வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட வெளியை
உன்னால் நிறைந்துள்ளது
அதனால் மூவுலகமும்
நடுங்குகிறது
உன் உருவம்
கண்டு
உலகம் நடுங்க
யானும் நடுங்கத்
– தைரியமும்
மன அமைதியும்
அகலுகிறதே
அளவற்றத் தோள்களோடு
அக்னியை வாயாக
உடையோனே
ஆதிநடுவந்த மில்லாதவனே
– நீயே
ஆதிபுருஷன் என
நம்புகிறேன்
முப்பத்து முக்கோடி
தேவர்கள்
வியந்து பார்க்கும்
இறைவா
திறந்த நின்வாய்க்
கண்டு
திக்குதிசை நான்
காணவில்லை
விட்டிற் பூச்சிகள்
வீழும் ஒளி
நோக்கி
அங்ஙனமேத் திருதராஷ்ரானின்
தவப்புதல்வர்கள் நின்வாயில்
உன் செய்கையை
உணரவில்லை நான்
உண்மையில் யார்நீ
உரைப்பாயா! உன்னை
வணங்குகிறேன்
உலகழிக்கும் காலன்
நீயில்லாமலும்
நின் எதிரிகள்
வீழ்வார்கள் - ஆக
நீ எழுந்திரு
துரோணன், பீஷ்மன்
கர்ணன் மற்ற
வீரர்களும்
என்னால் ஏற்கனவே
கொல்லப் பட்டவர்கள்
கலங்காதே
காரணமாய் நீயிருப்பாய்
கொன்றது நானாயிருப்பேன்
வெற்றி உனதேப்
புறப்படு
இடது கையால்
அம்பெய்தும் அர்ஜுனா
பகைவர்களை வென்று
புகழை அடை,
பாராள்
உனது புகழைப்
பேசிட தேவா
உலகம் ஆனந்தமடைகிறது
ராட்சசர்கள் நடுங்குகின்றனர்
சித்தர்கள் வணங்குகின்றனர்
மீண்டும் மீண்டும்
வணக்கங்கள்
நீயே, வாயு,
யமன், அக்னி
வருணன், சந்திரன்,
பிரஜபதி
ஆக ஆயிரம்
வணக்கங்கள்
அடே கிருஷ்ணா
அடே யாதவா
அடே நண்பா
- என்று
அன்பினால் அழைத்திருப்பேன்
மதிப்பு குறைவாக
அவமதிப்பாய் நடந்திருந்தாலோ
அளவிடுதற்கரிய பெருமையுள்ளவனே
மன்னித்தருள வேண்டுகிறேன்
மகனைத் தந்தையும்
நண்பனை நண்பனும்
காதலியைக் காதலனும்
பொறுத்தருள்வது போல
போற்றுதலுக்கு உரியவனே
வீழ்ந்து வணங்குகிறேன்
எனை ஏற்று
பொறுத்தருள வேண்டுகிறேன்
காணாததைக் கண்டேன்
கண்டதால் நடுக்கமுற்றேன்
பழைய உருவை
காட்டி
பயத்தைத் தெளிவிப்பாயா
மகிழ்ச்சிக் காரணமாக
யோகச் சக்தியால்
யாரும் காணாததை
யாம் உனக்கு
காட்டினோம்
பெருந் தவத்தாலோ
வேத யாகங்களாலோ
தானத்தாலோ படிப்பாலோ
பூமியில் காண
இயலாது
கோர உருவங்கண்டு
குழப்பம் வேண்டாம்
பயம் நீங்கி
பழைய உருவத்தை
பார்
இங்ஙனம் சொல்லி
இனிய உருவத்தை
காட்டி
அர்ஜுனனை தேற்றியதை
சஞ்ஜயன் திருதராஷ்டனிடம்
உரைத்தான்
அர்ஜுனா, ஆயினும்
ஒருமுகப்பட்டப் பக்தியால்
உள்ளபடி அறியவும்
எனை காணவும்
அடையவும் முடியும்
எனது பக்தன்
எனை கதியாகக்
கொண்டவன்
எவ்வுயிரையும் வெறுக்காதவன்
எனக்காக வேலை
செய்பவன்
எவன் பற்றற்றவனோ
எது நடந்தாலும்
- தனக்கு
எதிரானதல்ல நினைப்பவன்
என்னை அடைகிறான்
பகவத் கீதையின்
பதினொராவது அத்தியாத்தை
பக்தியில் விளக்கி
விட்டேன்
பகுத்தறிவோடு இப்போது
தெய்வத்தை காண
தெய்வப் பார்வையா
தேவனின் மகிழ்ச்சியா
பட்டிமன்றம் வைத்திட்டான்
ஒரு சூரியனின்
- 100 டிகிரியில்
வதங்குது தேகம்
1000
சூரியனின் ஒளியை
பார்த்தன் பார்த்தது
உண்மையா
உலகின் எல்லாமே
அவனாக இருந்திட
- நாம்
காரணம்தானே
கவலை எதற்கு
கொல்வது அவன்
கொற்றம் நமதெனின்
குதுகலிக்கலாம்
புழல் ஜெயிலென்றால்
யாரும் காணாத
உருவத்தை
யாரும் காணாது
சஞ்ஜயன்
கண்டு கூறுவது
திருதராஷ்ரனின் அருள்தானே
மூவுலம் நடுங்கலாம்
மைத்துனர் நடுங்கலாம்
நாம் பக்திக்
கொண்டாலும்
நமை யொன்றும்
செய்யார்
கொரோனாவில்
கோவிந்தாவானாலும்
குடிக்கக் கஞ்சியில்லை
என்றாலும்
எவ்வடிவிலும் வாரான்
3 கருத்துகள்:
வரிகள் கருமை என்பதிலே புரிந்து கொண்டேன்...
அருமை...
வறுமை கொடியது
மிகவும் கொடியது...
கொரோனாவில்
கோவிந்தாவானாலும்
குடிக்க கஞ்சியில்லை என்றாலும்
எவ்வடிவிலும் வாரான்
உண்மை
அருமை
கருத்துரையிடுக