திங்கள், அக்டோபர் 24

தீபாவளி





புராணமோ
புனைந்தக் கதையோ
பொய்களின் மூட்டையோ
பொறுமையாய் கேளுங்கள்

வராக அவதாரத்தில்
பூமாத் தேவியை
தொட்டதால்
பவுமன் பிறக்கிறான்

அரக்கர்களை வென்ற கையோடு
அவளைத் தொட்டதால்
அவதாரத் பிறப்பிற்கு
அரக்க குணமாம்

குணத்தால்
அரக்கனென அழைத்ததால்
அவனுக்கொன்றும்
அச்சமில்லை

பிரம்மனிடம் -சகா
வரம் கேட்க
திருத்தி அளிக்கப்படுகிறது
ஈன்றவளால் இறுதி முடிவென

வராக அவதாரத்தில்
வசதியாய் தொட்டது
கிருஷ்ன அவதாரத்தில்
சத்யபாமாவால் சரிசெய்யப் பட்டது

தனயனென அறியாது
தன்னிணை காக்க
அசுரனை அழித்தாள்
தேவர்களை காத்தாள்

கதை முடிந்ததென
கடுகளவும் நினையாதீர்
கற்பனைகள் தொடரும்
காசியும் இராமேஸ்வரமும் இணையும்

திரேத யுக நாயகன்
திரும்புகிறார் கானக வாழ்விலிருந்து
தீபமேற்றி மகிழ்ந்தனராம் – மக்கள்
தீப ஓளி கதைகள்

2500 ஆண்டுகளுக்கு முன்
ஆணும் பெண்ணும் சமம்
அகிம்சை வாய்மையென்றும்
பற்றற்றிறு பாலுணர்வு துறவென்றும்

வடித்துக் கொடுத்த வர்த்தமானர்
வீடு பேறடைந்த நாளை
தீபமேற்றி வணங்கியதால்
திருநாள் அவர்களுக்கு

போதிமர ஞானம் போதும்
நாடாள வாவென்று - சுத்தோதனன்
நாலுபேரை அனுப்ப
நால்வரும் ஞானம் பெற

காலோதயன் எனும் அமைச்சன்
கபிலவஸ்துவுக்கு
சித்தார்த்தனை
அழைத்து வர

வறியவரும் தீபமேற்றி
வாழ்த்தட்டுமென்று
இருப்பவன் கொடுத்தான்
இருள் விலக மகிழ்ந்தான்

புத்தனின் வருகை
புத்தொளி அளித்ததால் – நாடு
திரும்பிய நன்நாளை
தீபஒளியேற்றிக் கொண்டாடுகின்றனர்

1577 ஓர் அடிக்கல் நட்டு
பொற்கோயிலை கட்டத் துவங்கினர்
அந்நாளை சீக்கீயர்கள்
தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர்

சக்தி சிவனோடு இணைந்து
அர்த்தநாரியாய்
காட்சி அளித்த நாள்
கேதார கௌரி விரதநாள்

மனிதனின் விழாவா
மதங்களின் விழாவா
மானுட வாழ்வில்
மகிழ்ச்சியுறு நாளா???? !!!!!!!!!!!

புதன், அக்டோபர் 5

செத்தப் பின்பு




கொள்ளிச் சட்டியும்
நெய் பந்தமும்
நீராட்டும் இல்லாது
நீத்த உடல் வேகாதா

எள்ளுத் தண்ணியும்
பிண்டமும்
படைக்காட்டா - பாவி
ஆவியா சுத்துவேனா

வாழும் போதே
வகைவகையாய்
யாகங்கள் செய்யாததால்
கர்மபலன்கள் கிட்டாதோ

நாளும் கிழமையும்
நம்மை நினைத்து
நாதியில்லா எனக்கு
திதி கொடுப்பார்களா

கதியற்று எனக்கு நானே
கயாவில் பிண்டமிட்டு
காசியில் காலமானால்
கண்டிப்பாய் மோட்சம் கிட்டுமோ

கடன் பட்டு
கல்விக் கற்று
அயல் தேசம் சென்றவன்
அன்னியமாகி போனான்

எடுத்து போடுவது
யாரென அறிவோமா? – ஆனா
அடுத்தடுத்து ஆசைகள்
நிறைவேறுமா?

செவ்வாய், அக்டோபர் 4

காதல் - நிலையானதா?




பாப்புனைந்து
பம்மாத்து செய்கிறாய்
பார்க்காமல் போனேனென்று
பழிச் சுமத்துகிறாய்

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்காதென்பதும்
இணையாதென்பதும்
இயற்கை நியதி

நிறைகளை ஒதுக்கி விட்டு
குறைகளைப் பட்டியலிட்டு
கறைப் படுத்தவில்லையென
கண்ணீர் வடிக்கிறாய்

புலவன்
பொய்யில் நெய்யொழுகுது
பாவையின் நெஞ்சம்
கல்லென்று கதைத்திடுது

முற்றுப் பெற்றதை
சற்றும் பொருந்தாதை
பாகம் இரண்டென
திரைக்கதை எழுதுது

நினைவுகள்
நீந்திதான் செல்லும்
கடந்துச் சென்றால்தான்
கரையேற முடியும்

வாழ நினைப்பவளுக்கு
வாடி நிற்க முடியுமோ
தடைகளைத் தகர்த்தால்தான்
தடங்களை விட்டுச் செல்லலாம்

பிரபஞ்ச வெளியில்
கானக வாழ்க்கை
அவைகளுக்கானது
நான் – அவள் - அதுவல்ல

திங்கள், அக்டோபர் 3

என்ன செஞ்ச





காதலி
கட்டிய மனைவி
பெற்றெடுத்த பிள்ளை
சட்டென்று கேட்கும் கேள்வி

அவளுக்கு
அது பிடிக்குமென்று
ஆசையாய் வாங்கிக் கொடுத்திருந்தாலும்
என்ன பெரிசா செஞ்சிட்ட

கல்யாண நாளென்று
கல் வைத்த அட்டிகையும்
கையளவு ஜரிகைச் சேலையும்
கட்டியவளோ - முகம் சுழிச்சிட்டா

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தும்
பட்டம் படிக்க அனுப்பி வைத்தும்
இஷ்டம் போல் சுற்றிய
மகன் இக்கேள்வி கேட்டா

ஆணாதிக்க நாயகன்
சாதித்துதான் என்ன
தன்னாசைக்கு வாழ்ந்தா
தவிக்கவிட்டான் இவர்களை

இன்னும் இன்னும் என
எதிர்பார்க்கும்
இவர்களை
எதிர் கொள்ளவதெப்படி

ஞாயிறு, அக்டோபர் 2

காதல் நிலை




நித்திரையில்
சித்திரவதையில்லை
புத்தியும் பேதலிக்கவில்லை – இது
சத்தியமடி

ஒவ்வொருச் சொல்லுக்கும்
பல்வேறு அர்த்தம் கற்பித்து
பாடாய் படுத்தியவளே
திடமாய்தான் இருக்கிறேன்

உச்சரிக்கும் தொணியில்
உடைந்தே போவேன்
சஞ்சரிக்கும் ஆசையில்
சகித்துக் கொள்வேன்

உன் ஒவ்வொரு கோணலுக்கும்
என் வாடிய மனது
துறவறம் நாடாது
துன்பமின்றி இருக்குது

நினைவுகள் வாராமலில்லை – அவை
வினையாற்றுவதில்லை
ஏனைய எச்சங்கள்
எனை வாட்டுவதுமில்லை

இந்நொடியே
என் முன்னாடி
நீ தோன்ற நினைத்தக் காலம்
கடந்தக் காலங்களாயின

சந்தித்தே
சற்றேறக் குறைய
சிலபல காலமாயினும்
சஞ்சலமில்லை மனதில்

அவரவர் வாழ்க்கை என்றே
அன்னியப் பட்டு விட்டோம்
அன்றுனைப் பார்க்க நேரிட
அழகாய்தான் ஒளிந்துக் கொண்டாய்

கண்ணாமூச்சி ஆட்டங்கள்
காலங் கடந்தாலும்
காதலில் அழகுதான்
கணநேர மகிழ்ச்சிதான்

ஆர்பரித்த அன்பு
அடங்கிதான் போனதோ - அல்ல
ஆவல் இருக்கத்தான் செய்கிறது
ஆயினும் அவசரமில்லை

உனை நிந்தனைச் செய்ய – இக்
கவிதை வடிக்கவில்லை
நினை நினைத்த மனதை
ஆற்றுப் படுத்தும் நிலை







நமக்கு மீறின சக்தி






கடவுளா
கட்டிய மனைவியா
காலகாலமாய் தேடியும்
கண்டுபிடிக்க முடியாததா

என்னால் இயலாததை
அவனால் முடியுமாயென சிந்தியாது
ஏதோவொரு சக்தியென
ஏன் தீர்மானித்தேன்

புயல் மழையெனில்
பூட்டிய வீட்டைத் திறப்பதில்லை
வெயில் உச்சமெனில்
வீதியில் நடப்பதில்லை

மழைப் பொழிய
குடையோடு நடக்க
விடைக் கண்டவன்
மின்னலில் மாண்டால்

நமக்கு மீறின சக்தியென்றே
மூளை மழுங்கியிருப்பானா
நாளையே வேறொருவனை
மின்னலில் சாகக் கொடுப்பானா

அளவுக்கதிகமான
வெயிலும் மழையும்
பருவநிலை மாற்றமென
பகுத்தறிந்த மனிதன்

ஜடாமுடியில்
கங்கையை சுமப்பவன்
கமண்டலத்தில் சிக்கிய
காவேரியைத் திறப்பவனின்

கட்டுக்கதைகள்
புத்தியெல்லாம் நிறைந்திருக்க
நமக்கு மீறின சக்தியென
நயமாய் சொன்னானா?

ஐம்பூதங்களைக் கடவுளாய்
அச்சத்தில் ஏற்றாயா
அங்குசத்தில் அடங்காததால்
நமக்கு மீறின சக்தியென்றாயா

பெயரிட்டு அழைத்த புயலில்
சர்வ வல்லமையுள்ளவன்
நமக்கு மீறின சக்தியென
சாக்குச் சொல்லியாப் போனான்

கருந்துளைக்குள் நடப்பதை
கற்றறிந்தவன் தேடுகிறான் – அத்
தேடலின் ஈர்ப்பு விதியால்
கடவுள் காணாமல் போகிறான்

மானுட ஆற்றலுக்கு
பிரபஞ்ச இயக்கவியல்
நமக்கு மீறியதல்ல என்றே
நாளும் சொல்லுது









ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...