சமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 29

உச்சநீதிக்கு -வாதம் -2

 








பற்பல நம்பிக்கைகள்
பலகாலம் தொடர்ந்திருக்க,
பட்டென மீறுவதால்
பலர் மனது நோகுது.

தொழுவது தொன்மை,
தொடுடையோன் ஆயினும்,
தொடர்பு இல்லை எனில்
தொழுவத்தில் அனுமதி இல்லை.

நம்பிக்கையற்றவர்களுக்கு
ஆலய நுழைவு
அடிப்படை உரிமையா?
தனிப்பட்ட உரிமையா?

வறண்ட பாலைவனத்தின்
வற்றாத நம்பிக்கை
ஓரான் காடுகளில்
ஒளிந்திருக்கிறதா?

கங்கையும் யமுனையும்
புறப்படும் இடத்தில்
புனிதம் புகுத்தப்பட்டதால்
இயற்கை தெய்வமானதோ?

முப்பது கோடி முகமுடையாள்,
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் —
பாரதியின் பொழிப்புரை
மத நம்பிக்கைகளுக்கல்ல.

அரசியலமைப்பின்
அடிப்படை உரிமை
25 மற்றும் 26-ல் வரையறுத்தாலும்,
வழக்கங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

ஒழுங்குபடுத்தும் அதிகாரம்
அரசுக்கு உள்ளதென்றால்,
பெரும்பான்மை மதத்திற்கா
சிறுபான்மை சுதந்திரத்திற்கா?

ஆன்மீகத்தில் அரசின்
ஆராய்ச்சி கூடாதென்றாலும்,
அதன் இயக்கத்தின்
அளவை கட்டுப்படுத்துவது.

அவசியமான நடைமுறையில்
பாதுகாப்பு நோக்கமென்றாலும்,
அவர்களுக்கேற்ப
அடிக்கடி மாற்றப்படும்.

பொறுப்பும் கட்டுப்பாடும்
பொதுவில் என்றாலும்,
பெரும்பான்மை மீறுவது
பெருமை என்றானது.

நம்பிக்கையற்றவர்கள்
நன்னெறி வகுக்க
தகுதியற்றவர்கள் என
நம்பிக்கையாளர்கள் வாதிட.

பெரும்பான்மை தகுதி
இவர்களை தவிர்த்து,
எவரோ அவரே என
அதிகாரம் எழுதி வைத்தது.

இறை மறுப்பாளனும்
இந்து என்றானதால்,
பகுத்தறிவில் - பக்தமான்கள்
நீதி கோருகிறார்கள்.

அரசியலமைப்பில்
அனைவரும்” என்பதும்
அந்தக் கூட்டம் மட்டுமே —
அனைத்து கூட்டமுமல்ல.

சமம் என்றாலும்
சமமில்லை;
வலிமையுள்ளவனே
வகுக்கிறான் நீதி.

பொருத்திருப்போம் —
பொருள் பொதிந்த நீதி,
மானுட தர்மமா
மத தர்மமா என்றே.


வாதம் தொடரும்

. வேல்முருகன்


சனி, ஏப்ரல் 25

சாதி










கண் கலந்து
காதலில் விழுந்து
கரம் பிடித்தேன்

ஒன்னு கலந்து
ஒரு பிள்ளையும் பெத்து
ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன்

வார்த்தெடுத்த வார்த்தைகளின்
வர்ணஜாலத்தை
வஞ்சியவள் இரசித்திருக்க

பேச்சு வழக்கிலே
பேசிக் களிக்கையிலே
எதோவென்று சொன்னேன்

எங்க ஆளுங்க
இதுபோல பேச மாட்டாங்க”
எதார்த்தமாகச் சொன்னாள்

எனினும்
தரம் குறைந்தவர்கள் எனும்
தொனி தொக்கி நின்றதால்

வாடியது முகம்
ஆண்டாண்டு கால
அவச்சொல்லை மாற்றுவதெப்படி?

அந்தத் தெரு மக்களை
இந்தத் தெருவில் இருப்பவர்கள்
அப்படித்தான் அழைப்பார்களாம் ...

அப்படித்தான் ஒருநாள்
உறவுகளோடு
ஓர் ஊருக்குச் சென்றிருந்தேன்

குலம், கோத்திரத்தோடு
குடியிருப்பு எங்கே என
குணமாதான் கேட்டார்கள்

ஒரு சாதிதான் – ஆனா
கொள்வினை, கொடுப்பினை
அக்கூட்டத்தோடு இல்லையென்றனர்

நுண்ணிய அளவில்
மானுடத்தை பிரித்த
சமுகத்தை மாற்ற முடியுமா?

அ. வேல்முருகன்.

 

சனி, மே 10

அடையாளம்






ஆதி மனிதர்கள்
ஆதாம் ஏவாள் போல
அவர்கள் வாழ நினைத்தனர்

தேர்ந்தெடுக்க
தேவனுக்கும் தேவிக்கும்
வாய்பில்லாமலிருந்தது

ஆளுக்காருத் திசையில்
அவர்களின் பயணங்கள்
ஆயினும் சந்திப்பார்கள்

ஆக, அடையாளங்கள்
அநாகரிமென்று
அவர்களுக்குப் பட்டதால்

மோதிரமும் தாலியும்
மோதலின் போது
முன்னிருத்தும் ஆயுதமானதாலும்

மோகன இராகத்தில்
சட்ஜமும் பஞ்சமும் ரசித்தவர்கள்
அபசுரங்கள் கூடாதென்கிறார்கள்

கட்டுப்பாடுகளற்ற
காருண்யவாதிகள்
கலந்திருக்க நினைத்தனர்

கற்பனாவாதிகளுக்கு
காரியங்கள் சலிப்பூட்ட
கடையடைப்புச் செய்தனர்

சனாதானம் ஏற்படுத்தியச்
சடங்குகள்
சல்லி சல்லியா நொறுங்கியது

பொருளாதாரச் சுதந்திரம்
பொருட்சுவையைக் கூட்டாது
பொருட்சிதைவைக் உண்டாக்க

பொருந்தாமை உருவானது
பொருட்படுத்தாதோர் சிலர்
பொங்கியெழுந்தவர் சிலர்

அச்சமென்ன என
உச்ச நீதிமன்றம் சென்று
துச்சாதனன் அவனென்று

வழக்கான்றைத் தொடுத்து
வகை மோசத்திற்கு
வலி நிவாரணம் கேட்க

பொருள் ஆதாரமாக
இருளகற்றும் அறிவு
இல்வாழ்வை முறிக்குமோ

ஆட்சேபனையின்றி
அதிகரித்து வரும் போக்கை
ஆராய்சிதான் செய்ய முடியுமா

குறுக்கு விசாரணையில்
கிடுக்கிப்பிடிக் கேள்விகள்
சிறந்த தீர்ப்புக்கு வழிவகுக்குமா

தனக்கானப் பாதையை
தெளிந்த அறிவில்
வகுக்கத் தெரிந்தவர்கள்

எதற்கும் சம்மதமென
எடுக்கும் முடிவில்
ஏமாற்றப் பட்டால்

இரண்டாண்டுக்குள்
இடறுகிற போது
எடுக்கும் முடிவுகள்

பிரிவுதான் வழியென
அரிய வாழ்வுதனை
எரித்திடாது காத்திடவும்

திருமணம்தான் இலக்கெனில்
தீர்த்துச் சொல்லிக்
காத்திருங்கள்

அன்பு பிணைப்பில்
ஆண்டாண்டு காலம்
அன்றிலாய் வாழ்ந்திடலாம்

பலகாலம் வாழ்ந்தவர்
நிலவோடு உலவுவர்
ஓலமிடுவதில்லை

கண்ணே அமுதே என்றரற்றி
கனியுடன் பழமுண்டு
கசக்குதே என

பூவை நசுக்குவதும்
வண்டை மிதிப்பதும்
பொல்லாப்பில்தானே முடியும்

கற்பழிப்புக் கதையெழுதி
கட்டளை வேண்டுமென்றால்
கடைச்சாரக்கா நீதி

வெள்ளி, ஜனவரி 31

செயற்கை நுண்ணறிவு




செயற்கை நுண்ணறிவு
செல்லாக் காசாக்கியது
செருக்குடனிருந்த அமெரிக்காவை

51 இலட்சம் கோடி
அங்கு காணாமல் போனது
ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை

கொள்ளை நிகழவில்லை
எல்லைக்கு வெளியில்
ஏதோவொரு கண்டுபிடிப்பு

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தை
உடைத்துப் போட்டது

தென்னையில் தேள் கொட்ட
பெரும்பண்ணை அமெரிக்கா
பேயறைந்தது போல் தடுமாறுது

"டீப் சீக்"
டிராகன் தேசத்து
திடீர் வெளியீட்டால்

திருக்குறளாய்
திக்கட்டும் தீர்க்கமானதால்
உலகப் பொதுமறையானது

உள்ளூர் சரக்கைக் காட்டிலும்
உசத்தி யனாதால்
உச்சி மோந்தனர்

அறிவை
அள்ளியணைக்க
அமெரிக்கர்கள் முன்வரிசையில்

"டீப் சீக்" செயலி
தீப்பற்றி எறிய
சிலிக்கான் வேலி உருகியது

எவரும் அறிந்திடவும்
எளிய வழிகளால்
வடிவமைக்கப்பட்டதாலும்

கொள்ளும் சிலவு
கொஞ்சம் என்பதாலும்
கொஞ்சுகிறது அகிலம்

மானுட உழைப்பு
மனிதரில் சிலருக்கு மட்டுமல்ல
பேரண்டத்திற்கும் அல்லவோ?!

புதன், ஏப்ரல் 17

தேர்தல் 2024










நாட்டின் வளங்களை
நாலு பேருக்கு விற்க
நாடி வருகிறார்கள்
நாள் 19 ஏப்ரல் 2024

பத்தல பத்தல
பத்தாண்டுகள் என்றே
பகற்கனவோடு வருபவனை
பாராள அனுமதிப்பாயா?

அக்மார்க் இந்துக்கள்
ஆட்சிக் கட்டிலை
அயோத்தி இராமனிடம் கேட்காது
அர்பன் நக்சல்களிடம் கேட்பதேன்

பொற்கால ஆட்சியாளர்கள்
பொய்மானைத் தேடி
சரயு நதிக்கரைத் துறந்து
இராவண தேசம் வருவதேன்

கோயபல்ஸ் கொள்கை
பொய்களை உண்மையாக்குவதில்லை
உண்மையாய் இருக்குமோ என
உன் உள்ளுணர்வைத் தூண்டுவது

வாக்குறுதிகள்
வெற்றுக் கூச்சல்கள்
நிறைவேற்ற அவர்கள்
மக்களில் ஒருவரல்ல

மாட்சிமை தங்கிய
மன்னராய் வாழ்பவர்கள்
முடிச் சூட்டியப் பின்
மாக்களாய் உனை நடத்துபவர்கள்

பக்தியில் பசுவைத் தொழவும்
புத்தியில் அக்லக்கைக் கொல்லவும்
சிந்தனை உனக்கிருந்தால்
நந்தனை எரித்த வாரிசு நீயே

சனநாயகத் தூண்கள்
வீழ்ந்து கிடப்பதை
எழுப்புமோ உன்வாக்கு
சவக்குழியைதான் ஆழமாக்கும்

நோட்டாவைப் பலப்படுத்திட
நோஞ்சான் சனநாயகம்
விரீட்டெழுந்து
விடியலைத் தருமா?

பதிவாகாத வாக்கும்
பயனற்ற நோட்டாவும்
பெரும்பான்மை என்றானால்
பாசிசமே வெல்லும்

மின்சார விளக்கணைத்து
மெழுவர்த்தி ஏற்றியவர்களே
கைத்தட்டி கொரானாவை
கொல்ல வழிகாட்டியவர்களிடம்

மொழியொரு கருவி
முழக்கமிடும் இனத்தின் அடையாளம்
ஓட்டுக்கு முனகும் உனக்கோ
அவ்வுணர்வு புரியாதெனச் சொல்

வாங்கும் வரிகளை
வாரிவழங்கும் வள்ளலாய்
வடிவமைப்பட்ட கதைகள்
வந்த பெருமழையில் கரைந்தன

ஊழலற்ற உத்தமர் பட்டம்
உச்சநீதி மன்றம் உத்தரவிட
பாரத வங்கி
பல்லிளித்து வழங்கியது

கட்சிகளை உடைத்து
ஆட்சி அமைப்பது
அவர்களுக்கு அத்துபடியான பின்
ஐந்தாண்டு தேர்தல் ஏன்

கட்டளைகளுக்கு பணியாதவர்களை
காராகிரகத்தில் அடைக்க
பூஜ்ய மதிப்பெண்கள்
ராஜ்யத்தோடு ராசியாகி விட்டன

ஓய்வுப் பெற்ற நீதியரசர்கள்
உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கிறார்கள்
எதற்கென்று
யாருக்கும் தெரியவில்லை

ஈ.டி, ஐ.டி., சி.பி.ஐ
நிர்வாகங்கள்
நேர்மை துறந்ததை
நெஞ்சுயுர்த்தி சொல்கிறது

ஏறிய விலைவாசியை
தேடும் கருப்புப் பணத்தில்
வேலைவாய்ப்பை உருவாக்க
தேனாறும் பாலாறும் ஓடுமா

செய்தி ஊடகங்கள்
சப்பாணி ஆனதை
அண்ணாமலை அறிவிக்க
சமூக ஊடகங்கள்தானே மறுக்கிறது

இவையெல்லாம் அறிந்ததால்
“ஏப்ரல்”, “மே” யில்
ஏமாறாதே என்கிறேன்
ஏற்பவர் ஏற்க!! ஏற்காதவர்??!!!!

புதன், மார்ச் 20

மேல்பாதி திரௌபதி




ஆறுகால ஆராதனையின்றி
அம்மன் அவதியுறுவதாய்
ஆங்கொரு புலம்பல்

அரவமில்லாது
ஆலயத்தை திறந்து
ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும்

பக்த கோடிகள்
பக்கம் வந்திடாது
பார்த்துக் கொள்ளவும்

காவல் தெய்வத்திற்கு
கட்டளையல்ல
காவலர்களுக்கு

மேல்பாதி திரௌபதி
நீதியரசருக்கு கட்டுப்பட்டு
சாதிசனத்தைக் கைவிட்டுவிட்டாள்

சூதாட்டத்தில்
சுற்றமும் நாடுமிழந்தாள்
பாண்டவரின் திரௌபதி

சாதிய வெறியட்டாத்தில்
சாத்தியக் கதவுகளைத் திறக்க
நீதிமன்றத்தையே நாடுகிறாள்

தீர்ப்பென்னவோ
வனவாசமாய்தான் இருக்கிறது
எக்காலத் திரௌபதிக்கும்

திறந்தவுடன் மூடி – யாரைத்
திருப்தி படுத்துகிறார்
நீதியரசர்

மாவட்ட ஆட்சியருக்கும்
காவல் கண்காணிப்பாளருக்கும்
தேர்தல் கவலைகள்

ஏற்றத் தாழ்வுகளை
மாற்ற முடியாத தெய்வங்கள்
நீதிமன்றத்தில் ஒளிந்து கொண்டு

தனக்கு பூசைகள் வேண்டுகின்றன
தங்களின் சமுகநீதியை 
தரமுயர்த்துவார்களா பக்தகோடிகள்?!

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...