வியாழன், ஏப்ரல் 30

மேகமே...... மேகமே.......

 







அலைந்து திரியும் உனை
அகவை நிறைந்தவளுக்கு
அணியும் பாவாடையாக்கவா?

மலை முகட்டை
மறைத்துச் செல்கிறாயே—
மாராப்பு ஞாபகமா?

சுட்டெரிக்கும் சூரியனை
சூழ்ந்து மறைக்கிறாயே—
சுகமெதுவென காட்டவா?

காதற் கிழத்தியை
காணும் முழுநிலவன்று
காணாது போனாயே!

வேலைவெட்டியில்லா எனக்கு
வேடிக்கை காட்டவா
வெண்மேகமா வந்தாய்?

காலத்தே பயிர் செய்து
கழனி செழிக்கவா
கருமேகமா திரண்டாய்?

முடிவில்லாத பால்வீதியில்
முகிலினமே— எந்த
முகவரியைத் தேடுகிறாய்?

எண்ணற்ற நட்சத்திரங்கள்
ஏன் கண் சிமிட்டுகின்றன?
எனக்காக கேட்டுச் சொல்லேன்.

அலுமினியப் பறவையில்
அருகிருந்து காண வந்தேன்;
அதிரவைத்து அச்சமூட்டினாய்.

ஆயினும் ஆங்காங்கே
பஞ்சுப் பொதிகளாய்
பரவசப்படுத்தினாய்.

நிர்கதியாய், நிர்மூலமாய்
நீல வானம்—
நீ எங்கே சென்றாய்?

நீயின்றி நீரில்லை;
நானிலத்தில் நதிகளோடு
நாங்களும் இல்லை.


. வேல்முருகன்


புதன், ஏப்ரல் 29

உச்சநீதிக்கு -வாதம் -2

 








பற்பல நம்பிக்கைகள்
பலகாலம் தொடர்ந்திருக்க,
பட்டென மீறுவதால்
பலர் மனது நோகுது.

தொழுவது தொன்மை,
தொடுடையோன் ஆயினும்,
தொடர்பு இல்லை எனில்
தொழுவத்தில் அனுமதி இல்லை.

நம்பிக்கையற்றவர்களுக்கு
ஆலய நுழைவு
அடிப்படை உரிமையா?
தனிப்பட்ட உரிமையா?

வறண்ட பாலைவனத்தின்
வற்றாத நம்பிக்கை
ஓரான் காடுகளில்
ஒளிந்திருக்கிறதா?

கங்கையும் யமுனையும்
புறப்படும் இடத்தில்
புனிதம் புகுத்தப்பட்டதால்
இயற்கை தெய்வமானதோ?

முப்பது கோடி முகமுடையாள்,
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் —
பாரதியின் பொழிப்புரை
மத நம்பிக்கைகளுக்கல்ல.

அரசியலமைப்பின்
அடிப்படை உரிமை
25 மற்றும் 26-ல் வரையறுத்தாலும்,
வழக்கங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

ஒழுங்குபடுத்தும் அதிகாரம்
அரசுக்கு உள்ளதென்றால்,
பெரும்பான்மை மதத்திற்கா
சிறுபான்மை சுதந்திரத்திற்கா?

ஆன்மீகத்தில் அரசின்
ஆராய்ச்சி கூடாதென்றாலும்,
அதன் இயக்கத்தின்
அளவை கட்டுப்படுத்துவது.

அவசியமான நடைமுறையில்
பாதுகாப்பு நோக்கமென்றாலும்,
அவர்களுக்கேற்ப
அடிக்கடி மாற்றப்படும்.

பொறுப்பும் கட்டுப்பாடும்
பொதுவில் என்றாலும்,
பெரும்பான்மை மீறுவது
பெருமை என்றானது.

நம்பிக்கையற்றவர்கள்
நன்னெறி வகுக்க
தகுதியற்றவர்கள் என
நம்பிக்கையாளர்கள் வாதிட.

பெரும்பான்மை தகுதி
இவர்களை தவிர்த்து,
எவரோ அவரே என
அதிகாரம் எழுதி வைத்தது.

இறை மறுப்பாளனும்
இந்து என்றானதால்,
பகுத்தறிவில் - பக்தமான்கள்
நீதி கோருகிறார்கள்.

அரசியலமைப்பில்
அனைவரும்” என்பதும்
அந்தக் கூட்டம் மட்டுமே —
அனைத்து கூட்டமுமல்ல.

சமம் என்றாலும்
சமமில்லை;
வலிமையுள்ளவனே
வகுக்கிறான் நீதி.

பொருத்திருப்போம் —
பொருள் பொதிந்த நீதி,
மானுட தர்மமா
மத தர்மமா என்றே.


வாதம் தொடரும்

. வேல்முருகன்


சனி, ஏப்ரல் 25

சாதி










கண் கலந்து
காதலில் விழுந்து
கரம் பிடித்தேன்

ஒன்னு கலந்து
ஒரு பிள்ளையும் பெத்து
ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன்

வார்த்தெடுத்த வார்த்தைகளின்
வர்ணஜாலத்தை
வஞ்சியவள் இரசித்திருக்க

பேச்சு வழக்கிலே
பேசிக் களிக்கையிலே
எதோவென்று சொன்னேன்

எங்க ஆளுங்க
இதுபோல பேச மாட்டாங்க”
எதார்த்தமாகச் சொன்னாள்

எனினும்
தரம் குறைந்தவர்கள் எனும்
தொனி தொக்கி நின்றதால்

வாடியது முகம்
ஆண்டாண்டு கால
அவச்சொல்லை மாற்றுவதெப்படி?

அந்தத் தெரு மக்களை
இந்தத் தெருவில் இருப்பவர்கள்
அப்படித்தான் அழைப்பார்களாம் ...

அப்படித்தான் ஒருநாள்
உறவுகளோடு
ஓர் ஊருக்குச் சென்றிருந்தேன்

குலம், கோத்திரத்தோடு
குடியிருப்பு எங்கே என
குணமாதான் கேட்டார்கள்

ஒரு சாதிதான் – ஆனா
கொள்வினை, கொடுப்பினை
அக்கூட்டத்தோடு இல்லையென்றனர்

நுண்ணிய அளவில்
மானுடத்தை பிரித்த
சமுகத்தை மாற்ற முடியுமா?

அ. வேல்முருகன்.

 

கண்களின் விதி

 














நியூட்டனின்
3வது விதிப்படி
எனை ஈர்க்கும்
எதிர்வினையே

திக்குத் தெரியாத
பரந்த வெளியில்
திசைதனை காட்டுவது
கன்னி உன் கண்களே

காந்த ஊசிபோல்
கன்னி இருக்கும் திசையை
புலனறியும் வித்தை
பூவுலகின் விந்தையே

கன்னியின் கண்களின்
மின்னோட்டக் காந்தப் புயல்
அன்பின் அலைவரிசையில்
அதிர்வெண்களைப் பரப்ப

தாலமி, கோபர்னிகசின்
கோட்பாடுகள் மாறலாம்
எனைச் சுற்றும் பூமியாய்,
உனைச் சுற்றும் சூரியனாய்

அட்சரேகை, தீர்க்கரேகை
சந்திக்கும் புள்ளியில்
சங்கமிக்க
புதுமைகள் படைப்போமடி

ஒளிச்சேர்க்கை விதியின்படி
உனைப் பார்த்தே
என் சுவாசங்கள்
நீடித்திருக்கின்றன

உயிரியல் தத்துவம்,
வேதியியல், இயற்பியலில்
இருந்துவிட்டு போகட்டும்—
இலக்கியமாய் இக் கவிதை


உனக்காக
அ. வேல்முருகன்

புதன், ஏப்ரல் 22

உச்சநீதிக்கு -வாதம் -1

 










படைத்தவனை
பார்க்க அனுமதி வேண்டிட,
பாராமுகமாய் இருந்ததால்
பஞ்சாயத்து.

இயல்புகளுக்கு முரணாக
இறைவன் இருப்பதால்,
இப் பெண்களை
18-ஆம் படியில் பார்க்க விரும்பவில்லை.

அரசியல் சாசனம்
அர்ச்சகர் ஆவதற்கு
அனுமதி 25(2)(பி) கீழ் வழங்கினாலும்,
அதற்கும் தடை விதித்திட.

நிரந்தர பிரம்மச்சாரியின்
நிஷ்டை கலைந்திடுமோ,
நீள்விழி முலையுடைய மாதை
பட்டினத்தான் கண்டது போல்.

ஜெயமாலாவின் வாக்குமூலம்
ஜெயிக்கவில்லை என்றாலும்,
மனோரமா, சுதா சந்திரனுக்கு
அபராதம் விதித்து காத்தனர்.

தீண்ட அனுமதி இல்லை எனில்,
தீர்ப்பு எழுதுவதற்கு முன்
தீண்டித்தான் பார்ப்போம்—
தீர்ப்புகள் திருத்தப்பட?!!



வாதம் தொடரும்
அ. வேல்முருகன்

வெள்ளி, ஏப்ரல் 17

யார் உலகத் தலைவர்









மணி கணக்கில்
நாள் கணக்கில்
வாரக் கணக்கில்
கெடு வைக்கிறார்

நாளை முடிவதற்குள்
நாகரிகத் தொட்டில்
நிலப்பரப்பில் இல்லாது
நிர்மூலமாக்கப் படுமென்கிறார்

ஆதரிக்காத தலைவர்களை
ஆகட்டும், பார்க்கலாம்” என்கிறார்
ஆதரித்த மன்னர்களை
அரங்கத்தில் அசிங்கப்படுத்துகிறார்

சர்வதேச சட்டங்களை
கழிப்பறை காகிதமாக்குகிறார்
ஊரேச மமதையில்
ஒதுக்கித் தள்ளுகிறார்

அணுகுண்டு இருப்பதாய்
ஆலாபிக்கிறார்
ஹார்மேஸ் நீரிணை
அவருடையது என்கிறார்

"நேட்டோ" நாடுகள்
கூட்டில் இல்லையென்றவுடன்
"வீட்டோ" அதிகாரமிருந்தும்
வீரிட்டுப் புலம்புகிறார்

கப்பம் கட்டச் சொல்லி
கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்
எதிர்ப்பவர்களை
கற்காலத்திற்கு அழைக்கிறார்

சரிந்த சந்தையை
சரமாரி பொய்களால்
நிமிர்த்த முயன்று
நிலைகுலைந்து போகிறார்

பல "நாட்டிக்கல்“ தூரம் நின்று
பலமான குரல் எழுப்பி
பணியவில்லை என்றால்.......
பம்மாத்து செய்கிறார்

அவர்களோ, சரணடைவது
சைரஸ் வழிவந்தவர்களின்
சரித்திரத்தில் இல்லையென
வீர முழக்கமிடுகின்றனர்

அ.வேல்முருகன்


 

வியாழன், ஏப்ரல் 16

அன்பெனப்படுவது....










ஆருயிரே என
அள்ளி அணைத்து
அழுந்ததொரு முத்தமிடுவதா?

தினம் தினம்
தளிர் மேனி காணாது
தவித்தேன் என்பதா?

ஆலிங்கனத்தில்
ஆழ்கடல் முத்தெடுக்க
அம் மேனி குளிர்ந்திருப்பதா?

இதயத்தை இயக்கும்
இனிய தேவதையென
விதந்து ஓதுவதா?

அன்பு – என்றும்
அலங்கார வார்த்தைகளை
அள்ளித் தெளிக்க கிடைப்பதா?

ஊரே எதிர்த்தாலும்
உதவிட நானிருக்கிறேனென,
ஓடி வருவது

அவசியப்படும் போது
ஆதரவு கரம் நீட்டுவது,
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது

கோபத்தின் உச்சியில்
குதறி எடுக்காமல்
மதிப்புடன் நடத்துவது

காதலும், ஈர்ப்பும்
கணப்பொழுதில் மாறுகின்ற
காலச்சூழலில் – மாறாதிருப்பது

நொடிப்பொழுது செயலல்ல,
நீண்ட நெடிய பயணத்தின்
நீடித்து நிலைத்துக் கொண்டிருப்பது

. வேல்முருகன்

வெள்ளி, ஏப்ரல் 3

போடுங்கம்மா ஓட்டு









ஜனநாயகத் திருவிழா
ஜனநாயகன் திரைப்படம்
சதிகளால் வரவில்லை என
சந்துக்கு சந்துப் பேசிக் கொள்கிறார்கள்

வேட்பாளர் பட்டியல்
வெளியிட முடியாத கட்சிகள்
வெற்றிப் பெற்றுவிடுவதாய்
கனவு காண்கிறார்கள்

மார்க்சிய-லெனினிய குழுக்கள்
மதவாதிகளை எதிர்கொள்ளாது
திராவிடத்தை
தழுவிக் கொண்டனர்

யார் அழைப்பார்களென
யௌவன வேடமிட்டு
காத்திருந்து காத்திருந்து
யாசகம் கேட்கிறார்கள்

துரோகிகள் என தூற்றிய
துடைப்பக் கட்டைகள்
பட்டுக் குஞ்சம் கட்டி
பல்லக்கில் செல்கிறார்கள்

வளர்ச்சிக்கேற்ப
வழங்கவில்லை இடங்களென
வருத்தங்களிருந்தாலும்
வலதுசாரிகள் வரக் கூடாதென்பதற்காக

இடதுசாரிகளின் இடிமுழக்கம்
வெளியே தெரியாதவாறும்
மாவளவனின் வருத்தத்தோடும்
மையத்தின் தியாகத்தோடும்

கொள்கைக் கூட்டணியென்ற
கோட்பாட்டை மறந்து
ஆர்.எஸ்.எஸ். அடிவருடியை
இணைத்தொரு கூட்டணி

அதிகாரம் வேண்டுமென
அவர்கள் டெல்லிக்கு
ஆவலாய் பறந்து
அமைத்தொரு கூட்டணி

அனாதைகள் இணைந்து
அவர்களிருப்பை
அகிலம் கவனிக்க
அமைந்தது மற்றொரு கூட்டணி

எல்லோரிடமும் பேசி
எங்கும் பேரம் படியாததால்
யாரும் வேண்டாமென
எல்லா இடங்களிலும் போட்டி

இந்தத் திருவிழாவில்
செய்தி ஊடகங்கள்
சில்லறை பார்ப்பதற்காக
சித்திரங்களை காட்டுகின்றன

எல்லோரும் இலவசமென
எழுப்பும் கூவல்களில்
ஏனோ மறந்தோம்
ஏறும் விலைவாசியை

வாக்கெனும் வாய்கரிசியை
வழங்கிய பின்
நேட்டோ போல
நோட்டாவும் உதவாது

ஆக, என்ன செய்யலாம்
ஊரை நிர்வாகம் செய்பவன்
ஊழல் நிகழ்த்துவானெனில்
உடனே நீக்கிட அதிகாரம் கேள்!!



அ. வேல்முருகன்













வரிக்கு மேல வரி.........















அச்சடிக்கும் இயந்திரத்தை
அரசாங்கம் வைத்துக் கொண்டு
அது ஏன்?
வரிக்கு மேல வரிகளை போடுகிறது

உழைத்துக் கிடைக்கும்
ஊதியத்திற்கு
உன்னிடம் கேட்பது
நேரடி வரியாம்

உண்டி வளர்க்க
உப்பு, புளி, மிளகாயோடு
உன் விருப்ப ஆடையணிய
மறைமுக வரியாம்

அலை அலையாய்
அகப்பட்டவனிடம் வாங்குவது
அரசாங்க விதியாம் – அந்த
கடவுளுக்கும் அதே கதியாம்

விலகிச் செல்ல
விழித்துக் கொண்டாலும்
விட்டில் பூச்சி நீ
விளங்கா அரசைக் கவனி

வசூலித்த வரியில்
வார்த்த சாலைக்கு
சுங்க வரியென (Toll)
கூசாமல் கேட்டிடும்

மகிழ்வூர்தி இலட்சமெனில்
பசுமை வரி, சாலை வரி
காப்பீடு, இதரச் செலவோடு
இருமடங்கு ஆகிடும்

பெட்ரோல், டீசலுக்கு
கலால் வரி – காரை
பேரிச்சம்பழத்திற்கு விற்றாலும்
சரக்கு சேவை வரி என்கிறான்

சேமிப்பின் வட்டிக்கு வரி
வசிக்கும் வீட்டிற்கு வரி
வழங்கும் மின்சாரத்திற்கு வரி
வளர்ப்பு பிராணிக்கும் வரி

சொத்து வாங்கினால்
பதிவு கட்டணம்
சொத்தை விற்றால்
இலாபத்திற்கு வரி கட்ட வேண்டும்

நிறுவனம் என்றால்
தொழில் வரியோடு
உரிமம், அனுமதி
சேவை வரியென நீளும்

காமதேனு நீ
வற்றாத மடியுனக்கு
வரிகள் கொட்டுமென
வாட்டுவது குடிமக்களை

அரசின்
அத்தனை வரிகளும்
அம்மக்களை கட்டுப்படுத்தவே
அதற்குதான் சட்டங்களே…!!!!


அ. வேல்முருகன்  







புதன், ஏப்ரல் 1

துபாய்



 











வாழ இயலாத
வரண்ட பாலைவனம்
வாரி வழங்கிய – எரி
வாயு, எண்ணெய்யால்

பூலோக சொர்கமென
புதிய புராணத்தை
பூஜிக்கத் தொடங்கையில்
பூகம்பம் நிகழ்ந்தது

பன்னாட்டு பணக்காரர்கள்
பாம் ஜுமைராக்களில்
புர்ஜ் கலீபாக்களில்
புரண்டு கொள்ள

தங்கத்தில் குடியுரிமை
தந்த மன்னர்
தப்பித்து அமெரிக்காவில்…
தன்னையே காத்துக் கொள்ள

குருக்ஷேத்திரப் போரில்
கௌரவம் என
பஹ்ரைனோடு துபாயும்
அமெரிக்காவை ஆதரிக்க

ஏவுகணைகள், ட்ரோன்களை
எதிர்கொள்ள இயலாத
அமீரகத்தை
அம்போவென விட்டுவிட்டு

தங்க குடியுரிமை
தகரமாய் கூட
தரத்தில் இல்லையென
பறந்து விட்டனர் அப்பாவிகள்

ஆம், அறுபது சதவீத
அந்த நாடோடிகள்
ஆயுள் முக்கியமென
அடுத்த சொர்க்கத்தைத் தேடிட

பன்னாட்டு வர்த்தகத்தின்
வணிகத் திருவிழாக்கள்
இணையில்லை என்றவர்கள்
எங்கோ மறைந்தனர்

வெறிச்சோடிய சாலைகள்
விமான நிலையங்கள்
ஒருவருமற்ற
உயரமான கட்டிடங்கள்

அனாதையாய்
ஆங்காங்கே நிற்கும்
உயர்விலை கார்கள்
செல்லப் பிராணிகள்

காரணம் யாதென்று
மேதினி அறிந்தாலும்
மேட்டிமை கொண்ட
மேற்குலகம் நீட்டிக்கும் போரை

அரசு இயந்திரங்கள்
உம்மென்றோ
ஆம்மென்றோ
உருப்படியாய் ஏதும் செய்யாது

மானுடத்தை காக்க
மக்கள் நாமே
போரை எதிர்த்து
போராடுவோம், வாருங்கள்


அ. வேல்முருகன்

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...