செவ்வாய், மே 26

கல்நெஞ்சுக்காரி

 










கல்நெஞ்சென உரைத்திட,
கண்ணீர் வடித்தாய்;
சொல்லொண்ணா வலிகளை
சொற்களில் பதித்தாய்.

அல்லலில் உழலுவதை
அடிமனதில் இரசித்தாய்;
இல்லாளன் என்றாலும்
இறைஞ்சிட வைத்தாய்.

என்னவள் என்பதனால்
எதையும் சகித்தேன்;
அன்னியமாய் அளவளாவ
ஆழ்மனதில் அழுதேன்.

என்னாங்கு எதுகுறை
எந்நாளும் அறியேன்;
உன்னத அன்பிற்கு
உடனுறைதல் என்பேன்.

சன்னிதியில் ஊழியம்
சந்ததம் செய்தாலும்,
என் விதி என்னவோ—
ஏகாந்தம் என்றாச்சு.

நன்னாள் என்றாலோ,
நாளெதற்கு வருகுதென
தன்மானம் கேட்டாலும்
தற்காக்குது நம்பிக்கை

வலிமறைத்து வாழ்ந்திட
வலிமை கொண்டேன்;
சலிப்பே வந்தாலும்
சமாதானமாகிறேன்.

பொலிவிழந்த போதிலும்
புலம்பிடாது இருந்து,
கெலித்தே காட்டுகிறேன்;
கெத்தாக உலவுகிறேன்.

. வேல்முருகன்


திங்கள், மே 25

புல்டோசர் இந்தியா

 







ஆறுகால பூஜையோ,
ஐந்துவேளை தொழுகையோ,
அவரவர் நம்பிக்கை—
அதில் புல்டோசர் ஏன்?

மசூதிகளை இடித்தால்
வீதிகளில் தொழுவோமென
மார்க்கத்தை நம்புபவர்கள்
மறுமொழி உரைத்திட,

இந்துகளுக்கு மட்டுமே
இவன் சேவை என்பதற்கா
இந்நாடு உருவாயிற்று?
அங்ஙனமெனில் அதை மாற்று.

மன்னனென அகங்காரமா?
மக்களுக்கு எதிராய் அரசாங்கமா?
மசூதிகளை இடிக்கவா
மக்களதிகாரம் அளித்தனர்?

அதிகாரமற்ற புல்டோசர்
அமைதியாய் இருக்கும்;
அரசு இயந்திரம் இயக்கிட
அடிபணியாது எதிர்த்திடும்.

சிறுபான்மையினர் என்றாலும்
சிறப்புடன் வாழ்ந்திடனும்;
சிரமம் என்றானால்
சீரழியும் சமூகமே!


. வேல்முருகன்


கோமாதா எங்கள் குலமாதா

 









உழவர்களின்
உபரி வருமானத்திற்கு
உதவிய பசுக்களை,

கோமியம் குடிப்பவர்கள்
கோமாதா” என்று பாதுகாக்க
கோடிகளில் நிதி ஒதுக்கிட,

கொள்கை முடிவெடுத்து
கோரிக்கை வைத்தனர்
குர்பானி கொடுப்பவர்கள்.

குலமாதா தேசிய விலங்கா?
குறிக்கோள் எதுவென்று
குழப்பங்கள் இந்துகளிடையே.

குறும்பாடு உண்டாலே
கொலை செய்யும் நாட்டிலே
கூர்த்த முடிவு நானென்பேன்.

தேவியைத் துதித்து பாடியதை
தேசப் பாடலாய்
தேர்ந்தெடுத்ததைப் போல,

தேசிய விலங்காய்
கோமாதாவை அறிவிக்க
தீருமோ பிரச்சனை?

நந்தனைத் தேடினர்,
நாயன்மாராகி விட்டதால்
கோரோசனை வேண்டாமென்கிறார்.

இந்துகள் வீட்டில்
இருவேளை உணவில்லை;
கோமாதாவும் பட்டினியோடு.

வளர்த்த மாடுகளை
வாங்க ஆளில்லாததால்,
வயிற்றில் ஈரத்துணியோடு
வாழ்க ஜனநாயகம்...


. வேல்முருகன்




தீர்ப்புகள் திருத்தப்படலாம்



















சட்டவிரோத
செலாவணி முறைகேட்டில்
சிறை சென்றவர்
குற்றமற்றவர் என்றொரு தீர்ப்பு.

முப்பத்தொரு மாத
காராகிரகத்தில்
முடங்கிய நிறுவனத்தை
மூழ்கியதாய் அறிவித்தனர்.

திவால் நிறுவனத்தை
திறம்பட கையாள்வோர்
தேசத்தில் ஒருவரே என
காணிக்கையளித்தனர்.

கடன் கொடுத்த வங்கியோ,
கைக்குக் கிடைத்ததை விற்று,
வாராக்கடன் விதிப்படி
வரவு வைத்துக் கொண்டனர்.

ஆங்காங்கே வழக்குகள்
ஆதாரமில்லை என்றே,
அவரை விடுவிக்க
அந்தகாரம் எங்கெங்கும்.

வளர்ச்சி என்பது
தேசத்தில் ஒவ்வொருவரும்
ஒரு படி மேலேறுவதா?
ஒருவர் மட்டும் வாழ்வதா?

அ. வேல்முருகன்

சனி, மே 23

கரப்பான் பூச்சி














 வேலையற்றவர்கள்
 வீதிக்கு வாராது,
 “விதியே” என்று
 விடியலுக்கு தவமிருக்க,

 அதிகாரத்தைச் சுவைத்த
 ஒட்டுண்ணிகள்
 அதிகாரமற்றவர்களுக்கு
 அளித்த பெயர்.
 
    ஆண்டு கணக்காக
    அநீதியாய் வாய்தா;
    மீண்டதோ நியாயம்—
    மக்களின் சோம்பலால்.

    சமூக வலைதளங்களில்
    சந்தி சிரித்தாலும்,
    ஊழல் மயமானவர்கள்
    ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.

    ஊடகமெல்லாம்
    ஊனத்தால் சார்ந்திருக்க,
    ஊமையான மக்கள்
    ஊர்வலம் வந்திட,

    கரப்பான் பூச்சிகள்
    கரையானாய் பரவ,
    கலங்கியது நீதியா?
    கார்ப்பரேட் அரசா?


    அ. வேல்முருகன்

திங்கள், மே 11

யார் எவரோ?!

 










காலாற நடந்து
கைக்கோர்த்து சென்றது
காட்சிப் படிமமாய்
கலங்கச் செய்திட,

மறக்க முயற்சித்து
மனமது இயங்காமல்,
மாயங்கள் நிகழாமல்
மறத்தே போனது.

காயங்கள் ஆறிட
நினைவுகள் அகன்றிடனும்;
நிழலாய் ஏன் இன்னும்
நிம்மதியைக் கெடுக்கிறாய்?

வலிகள் வடுவாக,
வடிகால் இல்லாமல்,
வழி மீள யோசிக்கையில்
வதைப்படலம் நீட்டிக்கிறாய்.

எதிரெதிர் வந்தாலும்
யார் எவரோ என்றே,
எதுவும் நிகழாததுபோல்
எங்ஙனம் நகர்கிறாய்?

அ. வேல்முருகன்


சனகன் மகளாயினும்











எனக்கு மாற்றென
யாரைத் தேடுகிறாய்?
வனப்பு குறைவென்றா
வடிகட்டப் பார்க்கிறாய்?

முன்பின் பழகாமல்
முந்தானையில் முடிச்சிட்டால்,
முதல் நாளே குழப்பங்கள்,
முரண்களின் அணிவகுப்புகள்.

சரியான இணையென
சந்தித்த நொடிகளில்
சாதகமாய் சொல்லுகின்ற
சந்தோஷங்கள் நிலைப்பதல்ல.

னகன் மகளாயினும்
சங்கடங்கள் உண்டு.
வினாக்களுக்கு விடையுண்டு
விவேகத்துடன் தேர்ந்தெடு

உனை இழக்க விரும்பாததால்
உரிமையோடு சொல்கிறேன்
உருவங்கள் மாறினாலும்
உள்ளக்கிடக்கை யாரறிவார்

முற்றிலும் வலியற்று,
முத்தங்களில் மூழ்கி,
மினுமினுக்கும் காதலெல்லாம்
புனைவுகளிலும் கனவுகளிலும்.

ஆகச் சிறந்த இணைகளாய்
திரைப்படங்களில் மட்டுமே
கற்பனைகள் அல்லவே காதல்;
வலிகளோடுதான் ஆரம்பம்.

முற்றும் முழுமையாய்
முகவரி அறிய
விலகிச் செல்லாது
கற்றுக் கொடு

அறிதலும் புரிதலும்
அந்த நொடியில் நிகழாது;
பரிவும் பற்றுமே
பாதை வகுக்கும்.

துள்ளி மகிழ்ந்திட
துணையிடம் பட்டியலிடு;
அள்ளிக் கொடுத்திட
ஆவணச் செய்கிறேன்.

எது உனை மகிழ்விக்கும்
என அறியா மடந்தையிடம்
எண்ணங்களை சொல்லிடு;
ஏற்றப்படி மாறிக் கொள்கிறேன்

அனைத்தையும் சொல்லாதே — நின்
அகம் மகிழும் விருப்பங்கள்
அறிந்துகொள்ள விழைகிறேன்;
அதற்கேற்றாற்போல் மாறிக்கொள்ள.

பேரிடிகள் வந்தாலும்
பின் நிற்பது நானென
பெரு நம்பிக்கை கொள்;
பேதலித்து விடாதே.

கடந்து செல்லாதே;
கடமையில் குறையிருப்பின்
கட்டியணைத்து பேசு—
கரையேறிட வழியுண்டு.

நான் கவனிக்காததை
நச்சென சுட்டிக்காட்டு- நின்
கணிப்புகள் மாறாது
கடைப்பிடித்து காட்டுகிறேன்.

பற்றாக்குறை காலத்தில்
பதுக்கி விற்பதல்ல;
பருவங்கள் மாறினாலும்
பாசங்கள் மாற்றமில்லாதது.

அத்தகைய காதலை
அருகிருந்து கட்டமைக்க
அன்னியோன்யம் பிறக்கும்;
அகவிருள் விலகும்.

உண்மையான காதல்
ஒன்றிணைந்து வளரும்;
ஒவ்வொருவரின் நிறைகுறைகளை
நிதர்சனமென ஏற்கும்.

அ. வேல்முருகன்


வெள்ளி, மே 8

என்னுலக நாயகன்

 

 










பனையளவு உயரமும்,
பார்த்தாலே பரவசமும்,
பகட்டுச் சொற்களும்
பாவையெனை கவராது.

பிரமிக்க வைக்கும்
பரிசுப் பொருளோ,
விலையுயர்ந்த அணிகலனோ
விளைவுகளை ஏற்படுத்தாது.

கடினமானச் சூழலில்
கைகோர்த்து நிற்பவனும்,
சங்கடங்கள் நேர்ந்தாலும்
சந்தித்துப் பேசுபவனும்,

தன்னுறவு இவளென்று
தன் சுகதுக்கங்களை
துறந்தெனை நேசிக்கும்
தக்கதொரு இணையாய்,

என்னை விரும்புவனும்,
என்னவன் இவனென
எண்ணத்தை விதைத்து
என்நம்பிக்கையை கூட்டுபவனும்

கதைக்கின்ற பொழுது
கடமைக்குத் தலையாட்டாது
கவனமாய் கேட்டு
கனிவுடன் நடப்பவனும்

உணர்வுகளைக் கடக்காமல்
உடனிருந்து மதித்து,
நிலைத்த அன்புடன்
நித்தமும் நேசிப்பவனை

எழுச்சி முரசறிவித்து
என்னுலக நாயகன்,
என்சுவாச காவலனென
எத்திக்கும் சொல்வேனே

. வேல்முருகன்

புதன், மே 6

ஊக்கம் நீயென்பதால்

 









உறவான என்னவளே,
ஊடுதல் ஏனடி?
சிறப்பான வாழ்விலே
சித்தாந்தம் நீயடி.

அறத்தின் நிழலிலே
அன்றிலாய் வாழ்ந்திட,
பறந்து வந்திடு
பருவத்தில் பயிர் செய்திட.

உருட்டல் மிரட்டலில்
உள்ளன்பு வருவதில்லை,
பொருளின்றிப் பொருத்தங்கள்
பொதுவில் நிலைப்பதில்லை.

விருப்பம் உள்ளதாலே
விண்ணப்பம் அளித்தேனடி,
ஒருமித்து வாழ்ந்திட
உன்னருள் போதுமடி.

பழகும் பாசாங்கு
பாவை அறிவாள்;
குழப்பம் ஏதுமில்லை,
குயுக்திகள் கொண்டவனே.

உழலும் மனதை
உன்னிடமே கொடுத்தேன்;
நிழலும் நீயென்று
நெஞ்சத்திற்கு சொன்னேன்.

ஆகட்டும், பார்க்கலாம்
ஆசையின் எல்லையினை;
தாகமும் தவிப்பும்
தள்ளாடுதா என்றே.

யூகத்தின் அடிப்படையில்
யுத்தங்கள் கூடாதடி;
ஊக்கம் நீயென்பதால்
உயிரானேன் உன்னிடமே.

. வேல்முருகன்


செவ்வாய், மே 5

ஒழியுமா திராவிடம்?









திக்கற்றவர்களின் ஒளியான
திராவிடம் ஒழிந்ததாய்
திருநாட்டில் ஒரு குதூகலம்.

தீர்ப்புகள் மாறினாலும்,
திராவிடம் இனமா?
தீர்த்து சொல்லும் சித்தாந்தமா?

கவர்ச்சியில் கவிழ்ந்தவர்களை
மதவெறியில் காத்திடுவாரோ—
காத்திருப்போம்.

சிபிஐ, ஈ.டி.யோடு
புல்டோசர், ஜெய் ஸ்ரீராம்
புகுந்திடுமோ?

நீதிபதிகள்
துப்பாக்கியோடு
தீபமேற்றுவார்களோ?

அதிகாரத்தை இழந்தவர்கள்
அனுபவிக்கட்டும் என்றே
அமைதியாய் இருப்பார்களோ?

உணர்வற்று தமிழன்
ஒருபோதும்
ஓய்ந்திருக்க மாட்டான்.

களம் என்பது
அதிகாரம் மட்டுமே அல்ல—
மக்களோடு மக்களாய் இருப்பது. 

அ. வேல்முருகன்

அசமத்துவ அகிலம்

 










பேராசை சமூகத்தின்
பெரும் மன்னன்
பேரங்கள் நடத்துவது....

ஈரானை வீழ்த்தவா,
இஸ்ரேலை மகிழ்விக்கவா,
இலாபங்கள் ஈட்டவா?

எண்ணெய் ஆதிக்கத்தில்
ஏறும் விலைவாசி
என்னை பாதிக்குமா?

கொலை, கொள்ளை
குற்றமில்லை என்றோத...
ஐ.நா.வும், அமெரிக்காவுமா?

அகோரப் பசிக்கு
அட்சயப் பாத்திரமாய்
அரசியல் பதவியா?

தேசங்களின் இறையாண்மை...
தீர்மானிப்பது வல்லரசுகளா
பன்னாட்டு நிறுவனங்களா

பேரண்டம் யாரையும்
பேதமாய் பார்க்காதபோது
பேரரசு என்பது மாயையா?

வான் பாதுகாப்பென்பது
வளிமண்டலத்தை
வஞ்சிப்பதா?

செயற்கை நுண்ணறிவில்
தானியங்கி ஏவுகணைகள்—
கற்காலத்தை நோக்கியா?

எல்லோருக்கும் எல்லாம்
என்பது பெருங்கனவா,
ஏற்றத்தாழ்வே நீதியா?

அசமத்துவமே அகிலத்தின்
அடிப்படை கொள்கையா?
அதனை மாற்றதான் முடியமா?

.வேல்முருகன்


சனி, மே 2

தாலி

















பண்பாட்டின் சடங்கா?
பாவையின் அங்கமா?
எண்ணில்லா வடிவமா?
எதற்கென்று தெரியுமா—
பெண்ணினை அடிமையா,
பேரண்டம் முழுமையா?
கண்ணியாய் கைவிரலில்,
கழுத்தினில் கட்டியதோ?

அத்துகட்டி வாழ
அவளுக்குச் சுதந்திரமா?
வித்துபுட்டு குடிக்க
வீட்டிலிருக்கும் பண்டமா?
நித்தம் சுமங்கலியா,
நீங்காத அணிகலனா?
செத்துபுட்டா அறுத்து
செல்வியாக முடியுமா?

இடைஞ்சலென இரவில்
இலட்சினையைத் துறப்பதில்,
உடையவனும் உடன்பட,
ஊமையாய் கிடுமூரே;
அடையாள அடிமையிடம்
அக்கறை இல்லையெனில்,
மடைமாறும் அன்புதான்
மகமாயி மகிழ்ந்திடவே.

அருஞ்சுவை அன்பும்
அருகாமை இன்பமும்
கருப்பை நிரப்பல்ல
களிப்புடன் வாழ்ந்திடவே
பெருஞ்சுமை என்றானால்
பெரும்புராணம் ஏதுமின்றி
விரும்பியவழிச் சென்றிட
விவேகம் என்றறிந்தே

அச்சத்தில் ஆண்டாண்டு
அடையாள மாக்கியதை
துச்சமென தூக்கிவீசி
துணையிது வல்லவென்றே
இச்சமயம் இவளுரைக்க
இச்சட்டங்கள் மாளட்டுமே
சச்சரவின்றி சரிசமமாய்
சமூகத்தில் வாழட்டுமே


அ. வேல்முருகன்


H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...