புதன், மார்ச் 20

மேல்பாதி திரௌபதி




ஆறுகால ஆராதனையின்றி
அம்மன் அவதியுறுவதாய்
ஆங்கொரு புலம்பல்

அரவமில்லாது
ஆலயத்தை திறந்து
ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும்

பக்த கோடிகள்
பக்கம் வந்திடாது
பார்த்துக் கொள்ளவும்

காவல் தெய்வத்திற்கு
கட்டளையல்ல
காவலர்களுக்கு

மேல்பாதி திரௌபதி
நீதியரசருக்கு கட்டுப்பட்டு
சாதிசனத்தைக் கைவிட்டுவிட்டாள்

சூதாட்டத்தில்
சுற்றமும் நாடுமிழந்தாள்
பாண்டவரின் திரௌபதி

சாதிய வெறியட்டாத்தில்
சாத்தியக் கதவுகளைத் திறக்க
நீதிமன்றத்தையே நாடுகிறாள்

தீர்ப்பென்னவோ
வனவாசமாய்தான் இருக்கிறது
எக்காலத் திரௌபதிக்கும்

திறந்தவுடன் மூடி – யாரைத்
திருப்தி படுத்துகிறார்
நீதியரசர்

மாவட்ட ஆட்சியருக்கும்
காவல் கண்காணிப்பாளருக்கும்
தேர்தல் கவலைகள்

ஏற்றத் தாழ்வுகளை
மாற்ற முடியாத தெய்வங்கள்
நீதிமன்றத்தில் ஒளிந்து கொண்டு

தனக்கு பூசைகள் வேண்டுகின்றன
தங்களின் சமுகநீதியை 
தரமுயர்த்துவார்களா பக்தகோடிகள்?!

வெள்ளி, மார்ச் 1

மன்னிப்பு





மாறிடுமோ நடந்தைவைகள்
மன்னிப்பதால்
மறந்திடுவோமா

கொட்டிய வார்த்தைகள்
தேளின் வலியாக - சுண்ணாம்பு
விஷத்தை முறிக்குமோ

காயமோ வடுக்களோ
கண்களில் படும்போது
வலிகள் வந்துதான் போகும்

மனதும் மௌனமாகும்
கடந்து செல்லக்
கடினமாகும்

பகை வளர்த்து
பழியோடு வாழலாமா?
பண்பல்லவென மாறலாமா?

மறப்போம் மன்னிப்போம்
மனதிற்கல்ல
மாறாதத் தேவைக்கு

நெருப்பு

 


 

.

 





 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

                                       குறள் 1104


தகதகவெனத் தகிக்கறாள்
தத்தையைப் பிரியும் பொழுதில்
அகலாது அருகிருக்க
அருஞ்சுனைக் குளிரைத் தருகிறாள்
தகனத் தட்பத்
தலைகீழ் நுட்ப மொன்று
இகத்தில் இவளுக்கு
இலகுவாய் வாய்த்த தெப்படி?

காதல் சின்னம்




ஷாஜகான் கட்டியக்
கல்லறையா
சகலரும் எண்ணும்
இதய வடிவமா?

கட்டி அணைத்து
கனன்ற வெப்பத்தை
கட்டிலில் தணித்து
தொட்டிலில் தாலாட்டுவதா?

கணையாழி அணிவித்து
காதல் சின்னமென
கல்லறை வரை
கழற்றாமல் காப்பதா?

ஒற்றைப் பூவை
ஒய்யராமாய் சூட்டி
ஒப்படைத்தேன் எனையென்று
ஒன்று படுதலோ?

எக்காலமும் நினைவிலிருக்க
எதிர்பாரா முத்தமொன்றை
ஏந்திழைக்கு அளிக்க
எண்யெண்ணி மகிழ்வதா?

அல்ல அல்ல
அர்பணிப்பாய்
ஆயுள் முழுவதும்
அவளோடு பயணிப்பது

மதம்






அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது

பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது

மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது

மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது

குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது

நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது

வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது

வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே

திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது

நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது

ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது

பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது

குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது

பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது

அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது

பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது

கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு

வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்

நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்

மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...