சனி, மார்ச் 21

கொலைபழி சுமத்து

















ரோம் நகரம்
பற்றி எரிகையில்
நீரோ மன்னன்
"ஃபிடில்" வாசித்தது வரலாறு

ஈரானோடு
இஸ்ரேலும் பற்றி எரிய
அமெரிக்க அதிபரால்
இரத்த ஆறு ஓடுகிறது

மலைகளுக்கிடையே
பேரொளித் தோன்றி
பத்துக் கட்டளைகளை
நெதன்யாகுவுக்குச் சொல்லுமோ

இறை தூதர்கள்
எங்கேயாவது தோன்றி
இந்தப் போரை
இருநாட்களுக்குள் முடிப்பார்களோ

பேரரசுகள் வீழ்ந்து
வல்லரசுகள் உருவாகிட
நாகரிகத் தொட்டில்கள்
நாசமாகிதான் போயின

மேலாதிக்க பேராசையில்
மேலும் சிலநாடுகள்
மேன்மை பொருந்திய
மகுடத்திற்கு காத்திருக்கின்றன

மாடமாளிகைகள்
மணல்மேடுகளாக
மானுட மரணங்கள்
மனதை மாற்றவில்லை

குகைகளில் வாழ்ந்து
குடும்பம் கூட்டமென
கோலோச்சியவர்கள்
பதுங்கு குழிகளில்

நாலுகால் பாய்ச்சலில்
நங்கூரமின்றி அறிவியல்
நாடற்ற நாடோடிகளாய்
நாகரிகச் சமூகம்

மானுட மரணத்தை
மருந்துகாளல் நீட்டித்தவர்கள்
போரிடும் காரணத்தை
பொய்யாய்தான் உரைத்தனர்

இது, சுதந்திரத்திற்கான
விடுதலைப் போரா
சுரண்டுவதற்கான
மேலாதிக்கப் போர்

வெல்வது யாராக இருந்தாலும்
வீழ்வது மக்களே
கொல்வது கொற்றவனென்பதால்
கொலைபழி சுமத்து


அ. வேல்முருகன்

போர்.... காலங்கள்

   
































வில், வேல், வாள்
மல்லர்களின் மற்போர்
வீரத்தின் அடையாளமானது
கற்காலம்

காலாட்படை
தேரோடு குதிரைப்படை
யானைப்படை கவசங்களோடு
எக்காளமிட்டது மன்னர் காலம்

வணிக கப்பல்கள்
கொள்ளையடிக்க
போர் கப்பலென
பெயர் மாறியது கடந்தகாலம்

தூப்பாக்கித் தோட்டாக்கள்
தொலைதூர பீரங்கிகள்
கண்ணி வெடிகள்
காலாவதியாதி நாளாச்சோ

விமானப்படை - அதி
விரைவுத் தாக்குதல்கள்
வேவு பார்க்கும் ரேடார்கள்
துல்லியமாய் தாக்குமோ

ஒவ்வொரு போரும்
ஒருசில கண்டுபிடிப்பை
மானுடத்தை அழிக்க
உலகில் உருவாக்கும்

இன்று, டிரோன்கள்
கொத்து குண்டுகள்
பாலிஸ்டிக் ஏவவுகளை
செயற்கைகோள் உளவுகள்

திருப்பாச்சி அரிவாளும்
தீப்பிழம்பு ஏவுகணைகளும்
தீர்த்துச் சொல்லும்
தீர்வுகள் ஏதுமில்லை

    தகவல் குறியீடுகளை
    கணணியால் பூட்டவிழ்த்து
    இரகசியங்களை அறிவது
    இராப்பகலா தாக்கதானே

    ஆல்ஃபிரட் நோபிள்
    அன்று நொந்தது
    அந்த டைனமைட்டுகள்
    அமைதி காக்காது என்றுதானே

    ஆயினும் ஆயுதங்களை
    அகிம்சையால் வெல்வோமா
    அதுவொரு பகற்கனவு
    அதனை புறந்தள்ளு


    அ. வேல்முருகன்


சனி, மார்ச் 14

இன்று போய் நாளை வா









பொருளாதார தடைகளினால்
ஏற்கனவே
என்னால் கொல்லப்பட்டவர்கள்
போரில் பொருத முடியாதென்றா

எப்ஸ்டின் கோப்புகளுக்காக
இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு
என்னைத் தாக்குவதோ
எண்ணெய் வளங்களை கொள்ளையிடவோ

ஏவுகணைகளோடு
ஏராளாமான பொய்களோடு
ஒருமுறையல்ல எத்தனைமுறை
பிரம்மாஸ்திரத்தை ஏவினாலும்

இறையாண்மை கொண்ட
எந்நாடும் எதிர்க்கும்
இல்லாத நாடுகள்
அமெரிக்காவை நத்திப் பிழைக்கும்

பலவீனமான நேரத்தில்
பழித் தீர்க்காது
பலம்பெற்று வா என்பது
பாழும் கிணற்றில் வீழ்வதல்லவா

ஆக, அயோத்தி இராமன்
நிராயுதபாணி இராவணனை
பார்த்துரைத்த
கட்டுக்கதையல்ல இந்தப் போர்


அ. வேல்முருகன்




போரும் பொய்யும்









இரண்டு நாளில்
இருக்குமிடம் தெரியாது
ஈரான் அழிக்கப்படும்

அமைதியை நிலைநாட்ட
இரசாயன ஆயுதங்கள்
அடியோடு ஒழிக்கப்படும்

ஆயுதங்களை
அடியோடு ஓழித்து விட்டோம்
அடிபணிந்து விடுவார்கள்

உச்சத் தலைமையை
ஒழித்து விட்டோம்
திக்குத் தெரியாதிருக்கிறார்கள்

ஹார்மோஸ் நீரிணையில்
அச்சமின்றி செல்ல
ஆப்ரகாம் லிங்கன் கப்பல் வழிகாட்டும்

நேட்டோ நாடுகள்
நேசக் கரம் நீட்டுவார்கள்
நிம்மதியாய் இருங்கள்

பொறுத்திருங்கள்
பொருளாதாரத் தடைகளால்
போர் மட்டுப் படுத்தப்படும்

ஏவுகணைகளை இடைமறித்தோம்
ஏகப்பட்ட இழப்புகள்
யாருக்கு?

15 நாட்கள் கடந்து விட்டன
பதிலடி தொடர்கிறது
இஸ்ரவேலர்களை இறைவன்
.........காப்பாற்றுவானா?


அ. வேல்முருகன்

வியாழன், மார்ச் 5

யாமத்தின் யாழிசை

 














கள்ளுண்ணும் கண்ணாலே
கட்டுறுதிக் காளையை
துள்ளிட வைத்தவளே
தூக்கம் கெடுத்தவளே
வெள்ளி முளைக்கயில்
வேட்கையைச் சொன்னேனே
அள்ளியள்ளிக் கொடுத்தால்
அத்தானும் மகிழ்வேனே

ஞாயிறு உதித்தாலும்
ஞாபகங்கள் நிழலாடுதே
பாயில் உறங்கிட
பலகனவு வருகுதே
வாயிலில் நின்றே
வருகையை நோக்குதே
நோயில் மீட்டிட
நொடியும் தாமதிக்காதே

தாமரையிலைத் தண்ணீரா
தவிக்க விடாதே
சாமக்கோழி கூவுமென
சாத்திரம் பார்க்காதே
கோமளத்தின் கோபத்தில்
கோமாளி யாகாதே
காமன் கணைகளில்
கணக்குப் பார்க்காதே

யாமத்தின் யாழிசை
யாகப்பத்தினி யானே
பூமான் பூவையின்
பூப்பட்டு மேனியின்
ஏமாந்த கொங்கையை
ஏந்திப் பிடித்து
காமத்தின் கதவுகளை
கைப்பற்றத் தாமதமேன்


அ. வேல்முருகன்


ஞாயிறு, மார்ச் 1

நிபந்தனையற்றதா காதல்














எந்த சூழ்நிலையிலும்
என்னிணை நீயென்று
என்றென்றும் சொல்வேனடி

உனக்காக
உன்னுடனேயே
ஒவ்வொரு பொழுதும் கழியுமடி

ஆயினும்
ஆயிரம் அவஸ்தைகள்
அத்தனையும் சந்திக்க

அடியே
அன்பன் துணையுண்டு
சோதனைகளை சோதிக்க

வா, இறுகப் பற்று
இருவரும் இணைந்து
எதையும் எதிர்கொள்வோம்

கோப தாபத்தில்
கொதித்தெழுந்தாலும்
குறைகளைச் சுட்டு

விட்டு விலகாது
விதியென நோகாது
வேறெங்கு செல்வேனடி

பூரணத்துவம் கொண்டவர்
பூவுலகில் யாருமில்லை
புன்னகையோடிரு

கடினமாக காலங்களில்
கரைந்து குழம்பாதே
பொறுமையோடிரு

காதல்
காலகாலமானது
கண் கலங்காதிரு

மகிழ்வானத் தருணங்களில்
மனமொத்து இருப்பது
இயல்பென்றாலும்

நீயிருக்கும் வரை
நிலைத்திருக்கும் எனதன்பு
நிபந்தனைகளுக்கு உட்டபட்டதல்ல

அன்பன்
அ. வேல்முருகன்

கொலைபழி சுமத்து

ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் "ஃபிடில்" வாசித்தது வரலாறு ஈரானோடு இஸ்ரேலும் பற்றி எரிய அமெரிக்க அதிபரால் இரத்த ஆறு ஓட...