ஞாயிறு, நவம்பர் 18

பெல்ஜியம் கண்ணாடி


கிரேக்கத்தின் பேரழகியாய்
இங்கிலாந்து ராணியாய்
என்தேவி நீயாகிட

சீனப்பட்டு வாங்கினேன்
சித்திரமாய்
சிங்காரமாய் தெரிய

ஆப்பிரிக்க வைரத்தை
ஆரணங்கே நீயணிய
அத்தானும் மயங்குவேனே

இத்தாலி காலணியில்
இன்னும் ஒய்யாரமாவாய்
என்னினிய பொன்மணியே

அத்தரும் ஜவ்வாதும் 
மருதாணியும் வெண்ணையும்
கற்கால அழகடி 

தற்கால தேவதையே  - நீ
தரிக்க அமெரிக்காவின்
“டாமி கேர்ல்” வாங்கினேன்

உதட்டுச்சாயமும் நகப்பூச்சும் 
உனதழகை கூட்ட
ரெவ்லானில் வாங்கினேன்

பிக்காசோவும் ரவிவர்மனும்
பேரழகை கண்டு
பித்தத்தில் கலங்குவரடி 

உன்னழகை ஓவியமாய்
உலகே வியக்கும்படி 
எம்.எப் ஹுசேன் படைப்பானடி

ஊரெல்லாம் சுற்றினாலும்
ஊட்டி ரோஜா, ஜாதிமல்லி
உனக்கென வாங்கினேன்

ஆகா
அத்தனையும் வாங்கினேன்
அத்தை மகளே - ஆனால்

பலமணி செலவிட்டு
பலமுறை சரிசெய்து
பக்குவமாய் வைத்திட

பேரழகே
பெல்ஜியம் கண்ணாடி
கிடைக்கலியே - என்ன செய்ய

சனி, நவம்பர் 17

ஆன்மா




நேருவின் கதையை
நெட்டுரு
செய்து கொண்டிருந்தான்
எனது மகன் அருணன்

அப்பா
நாம் இறந்த பிறகு
மேலுலகில்
நேருமாமாவை
பார்க்கலாமல்லவா என்றான்

எப்படி என்றேன்

மூச்சு நின்றவுடன்
பூமியிலிருந்து
மேலே சென்றால்
பார்க்கலாம் என்றான்

மூச்சு
மூஞ்சூறு வாகனத்தில்
செல்லுமா என்றேன்

நான் ஈ
திரைப்படத்தில்
ஈ முட்டையில்
ஆன்மா (மூச்சு) சென்றதென்றான்

ஆம்
மலத்தில் நெளியும்
புழுவாக கூட
ஆன்மா இருக்கலாம்
எதற்கும் திரும்பி பாருங்கள்

செவ்வாய், நவம்பர் 13

மாலை எனை வாட்டுது



பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

                                                                                                   குறள்  1230

சென்றனன்
செல்வம்  தேடி
செல்லாதிருந்தது உயிர்

ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளைக் கொல்லுது

வெள்ளி, நவம்பர் 9

சட்டம் அதிகாரத்தின் பிடியில்

பதிவர் என்ற முறையில் எனக்கு அய்யா தருமி அவர்களின் கோரிக்கை மிகச் சரியானது.  காலதாமதமாக அவர் செய்தியை இங்கே பதிவிடுகிறேன்.  அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே எனது நண்பர்கள் மற்றும் உடன் படுபவர்கள், உடன் படாதவர்கள் அனைவரும் இதை விவாத பொருளாக மட்டும் கொள்ளாமல் இதன் தன்மையை, அதிகாரத்தின் போக்கை, அது நாளையே நம்மையும் இப்படி தாக்கும் என்ற புரிதலோடு எதிர்க்க வேண்டும் என்று கோருகிறேன்

மேலும் விவரங்களுக்கு அய்யாவின் தளத்தின் செய்திகளை பார்க்கவும்
http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


*

சனி, நவம்பர் 3

வாழ்க்கைச் சூத்திரம்



வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
                                                            குறள் 1192

பருவம் தப்பிய மழையும்
பார்த்து பழகாத காதலும்
பட்டு காய்ந்து சருகாகும்

பருவ மழையும்
பார்வை தீண்டலும்
பாரினை இயக்கும்


ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...