மூட நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூட நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 30

அழிவற்றதோ ஆன்மா

 



அழிவற்ற ஆன்மா
அகிலத்தில் உண்டோ
எழில்மிக்க மானுடத்தில்
எதுவென்று உரைப்பீரோ
மொழியற்று இருக்குமோ
மெய்யற்று வேறாகுமோ
வழிவழியாய் ஆன்மா
வந்ததை யாரறிவார்

உலராது எரியாது
உன்புத்திக்கு எட்டாது
புலன்கள் அறியாதது
புவனத்தில் நிலையானது
கலங்கிட வேண்டாம்
கண்டிப்பாய் மறுமையில்லை
புலம்பாதே புண்ணியாத்மா
பூநாகமா யிருக்கலாம்

புல்பூண்டின் ஆன்மா
புவியில் உண்டுறங்குமோ
அல்லலுடை நரகத்தின்
ஆயுதங்கள் சிதைக்காதோ
சொல்கேட்டு இயங்குமோ
சொர்கத்தில் தங்குமோ
வல்லுனர் எவருண்டு
வகுத்து சொல்லிட

சாந்தி அடைந்தால்
சாதுவாக இருக்குமோ
ஏந்திழையின் ஆன்மா
ஏமாந் திருக்குமோ
வேந்தன் என்றால்
வேற்றூரில் சஞ்சரிக்குமோ
சீந்து வாரின்றி
சீவனை இழக்குமோ

பூதஉடலில் நீங்கிட
புகலிடம் கொடுப்பதாரோ
ஆதாமின் ஆன்மா
அன்றிருந்த வாரிருக்மோ
சாதனையா நியூட்டனை
சந்திக்க வழியுண்டா
ஆதார மில்லையென
ஆருடம் சொல்வோமா

வெள்ளி, மே 21

கொரானா தேவி

     

குற்றுயிராய்க் கொலையுயிராய்
     கொரானாவில் தத்தளிக்க
கற்றறிவு இல்லாத
     கோவைக் குடிசில
தோற்றமுறச் செய்தனராம்
     தேவிக் கொரானாவை
காற்றில் பரவி
     ககனம் நிறைப்பாளோ


நூற்றாண்டு கடந்தும்
     நூல்பலக் கற்றும்
கற்காலக் பிளேக்கை
     கருமாரி விரட்டியதால்
தற்காலத் தற்குறிகள்
     தந்தத் தேவிதான்
முற்றாக ஒழிக்குமோ
     மூச்சைதான் காக்குமா?


இட்டசித்தித் தேவிக்குபின்
     ஈசுவரனும் தோன்றலாம்
தட்டநீட்டிக் காசுபார்க்கும்
     துட்டர்களைக் காணலாம்
மொட்டுவிடும் மூடதனம்
     முளையிலேக் கிள்ளுவோம்
கட்டுப்படும் தடுப்பூசியால்
     கலக்கமின்றி வாழ்வோம்

செவ்வாய், ஜூன் 23

பூரி ஜெகந்நாதா


தங்கத் துடைப்பத்தால்
மன்னர் பெருக்கப்
பலபத்திரர், சுபத்திரையோடு
ஜெகந்நாதர் ரதத்தில் புறப்பட்டார்

உச்சநீதி மன்ற நீதிபதிகளை
அச்சுறுத்தியத் துடைப்பக்கட்டைகளை
ஆருக்கும் தெரியவில்லை
அவரும் கண்டுக் கொள்ளவில்லை

கொரோனாத் தொற்றால்
கூட்டத்தைப் பெருக்க வேண்டாமென
கும்மியடித்த சங்கராச்சாரி - இன்று
எதிர்பதனால் இந்த அனுமதியோ

மகாகனம் பொருந்திய
மக்கள் வழக்கறிஞ்ஞர்களால்
கூடாது என்ற தீர்ப்பை
கூடி மாற்றினர்

நாம் நம்புகிறோம்
சமூக இடைவெளியோடு
பக்தர்கள் இன்றி
பாங்கோடு நடத்துவீர்களென

பொய், பிறழ் கண்டவர்கள்
பொதுவாய் சொல்லி
ஒதுங்கிக் கொள்ள
ஒரு கூத்து ஆரம்பமானது

ஜராவின் (வேடன்) அம்பால்
ஜடமானான் கிருஷ்ணன்
அதாவது மரமானான்
மரணமெய்தினான்

இந்திரத்துய்மன் கனவில்
இறைவன் தோன்றி
ஆழிநீரில் மிதந்து வருவதில்
அற்புதசிலை வடித்திட வேண்டினான்

பூரிக் கடலில்
மிதந்து வந்ததோ மரக்கட்டை
பூஜைகள் செய்து
பெருமாளை வடிக்க உத்திரவு

உளி கொண்டு செதுக்க
உடைந்தது உளி
வயோதிக வடிவில்
வந்தனன் ஒரு தச்சன்

21 நாள்
அறைக் கதவை
ஆரும் திறக்கக் கூடாதென
ஆரம்பித்தான் வேலையை

15 நாட்கள்
தச்சன் உளி தடதடத்தது
அடுத்த 3 நாட்கள்
அமைதியாய் இருந்தது

பொறுக்காத மன்னன்
அறையை திறந்திட
சினந்தே உரைத்தான் - இனி
சிலைகள் அரைகுறைதானென

மூன்று சிலைகள்
முகம், கை மட்டுமே
அங்ஙனமே நிறுவி
அனைவரும் வழிபட்டனர்

இந்திர தையுமா
மன்னர் மரணத்திற்கு பின்
கோயில் பாழ்பட - பின்னர்
கடல்கோள் கொண்டது

இன்றைய கோயில்
கிபி 1200 -ல் முடிக்கப்பெற்றது
ஆயினும் இராமனும்
பாண்டவர்களும் வணங்கிய தலம்

நம்பிக்கையில்
கேள்வி எழுப்பாது
நழுவுவது நலம்
நம் நீதிபதிகளைப் போல்


சனி, மே 9

புதிய பாதை




கயிறு மாட்ட நேரம் பார்த்து
கழுத்தை நீட்டி என்ன கண்ட
கழுதை யின்னு பேரு வாங்கி
கண்ணீர் விட்டு தெருவில் நின்ன

சம்பாதித்து கொடுத்து சத்தை இழந்து
சட்டுன்னு வந்து சமையல் செஞ்சு
சாயுற நேரம் தலை சாயுற நேரம்
சாயுறான், அவன் காரியம் சாதிக்கிறான்

சுகமே யில்லாது வருஷத்தை ஓட்ட
சுடுதோ நெஞ்சிலே பிள்ளை இல்லாதது
சுற்றமும் சாடுதோ உற்றதும்   வெறுக்குதோ
சுருக்கென தைக்குதோ சொல்லுற வார்த்தை

தழைக்கிற குடும்பம் எங்க குடும்பமின்னு
பழிக்கிற அத்தையும் முழிக்கிற புருஷனும்
அழித்திட உன்னை திட்டம் தீட்டினாலும்
விழித்தே நீயும் விவாகரத்து கோரடி

பொட்டைக் கழுதைக்கு திமிரை பாரென்றும்
போட்டு உதைக்க தாங்கிய கொடுமையும்
புழுவில்லா மலடியென பொய்யுரைத்த காதையும்
புழுவாய் கொட்டதுடித்து நின்றாயே

மலடியான நீயும் மருத்துவம் பார்க்க
மழலை  அரும்ப வழியுண்டு என்றே
மருத்துவன் சொல்ல மனதுக்கு மகிழ்ச்சி
மாற்றுப் பாதையில் சென்றால் உயர்ச்சி

மங்கா வாழ்வின் அனுமதி மறுமணம்
மணந்தால் வாழ்வில் நிம்மதி தருமணம்
மங்கையே மனதில் தவழும் அருமணம்
மலர்ந்திட நீயும் புரிந்திடு புதுமணம்


எழுதிய ஆண்டு 1989

செவ்வாய், அக்டோபர் 8

கலியுகம்



திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம்,

அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும் வராக அவதாரம் கொண்டு இராமேஸ்வரம் கோயில் சென்றதாகவும், பக்தகோடிகள் மிரண்டு போனதாகவும் அதனால் வராக அவதாரமும் மிரண்டதாகவும் செய்தி

அத்தோடு செய்தி முடியவில்லை

இராமனால் வழிப்பட்ட சிவனை இரண்டு வாசல் கடந்து பார்க்க முடியவில்லை வராக அவதாரத்தால்.

அதற்கே தீட்டு பட்டதாக கோயிலை மூடி பரிபாரம் செய்தனராம் சிவாச்சாரியர்கள்

வராக அவதாரம் எடுத்து உள்ளே நுழைந்ததே தீட்டு என்றால் மாம்ச மனிதா நீ நுழைந்தாலும் தீட்டு என்றுதானே கருவறைக்கு வெளியே நிறுத்தப்படுகிறாய்.

பன்றி நுழைந்து விட்டது இராமேஸ்வரம் கோவிலில்

மக்களிடம் மூட நம்பிக்கையில்லை அது அவதாரம் இல்லை பன்றி என கண்டுபிடித்து விட்டனர்.

ஆனாலும் தீட்டு.............................

சனி, நவம்பர் 17

ஆன்மா




நேருவின் கதையை
நெட்டுரு
செய்து கொண்டிருந்தான்
எனது மகன் அருணன்

அப்பா
நாம் இறந்த பிறகு
மேலுலகில்
நேருமாமாவை
பார்க்கலாமல்லவா என்றான்

எப்படி என்றேன்

மூச்சு நின்றவுடன்
பூமியிலிருந்து
மேலே சென்றால்
பார்க்கலாம் என்றான்

மூச்சு
மூஞ்சூறு வாகனத்தில்
செல்லுமா என்றேன்

நான் ஈ
திரைப்படத்தில்
ஈ முட்டையில்
ஆன்மா (மூச்சு) சென்றதென்றான்

ஆம்
மலத்தில் நெளியும்
புழுவாக கூட
ஆன்மா இருக்கலாம்
எதற்கும் திரும்பி பாருங்கள்

செவ்வாய், ஜூலை 24

மண்சோறுண்டால் குழந்தை



தாயென்றாய்
தாரமென்றாய்
தெய்வமென்றாய்
பெண்ணை

தாரம்
தாயாக
தின்ன வைத்தாய்
மண்ணை

கரு உருவாக
காதல் வேண்டும்
அல்ல
சோதனைக்குழாய் வேண்டும்

மண்சோறு தின்றால்
மகப்பேறு கிடைக்குமா
மலடி பட்டம்தான்
மாயமாகி போகுமா

பரிசுத்த ஆவியும்
அரகரனின் விந்தும்
ஆகமப் படி
ஆங்கொரு குழந்தையாகலாம்

கையை பின்கட்டி
கடவுள் நம்பிக்கையென
நாய் போல் உண்டால்
நாளையே குழந்தை கிட்டுமா

அவநம்பிக்கையும்
அஞ்ஞானத்தையும் - நீக்கிட
அங்கு பிறக்கும்
   புதியதொரு வழி

ஆம்
செய்ற்கை முறை
வாடகைத் தாய்
தத்துப்பிள்ளை
என எண்ணுங்கள்








வெள்ளி, மே 25

காக்க முடியாதவன் கடவுள்

ஆரணியில்
ஆரம்பித்தது
அரகரனின்
அச்சு முறி 
   விளையாட்டு


ஆட்டத்தில்
அரங்கனும்
அங்கம் வகிக்க
அடுத்து சூடு பிடித்தது


அரகரனும்
அரங்கனும் ஆடிட
அகப்பட்டவன்
அய்யகோ........ பக்தகோடி


சித்திரை விழாவில்
சித்திரகுப்தன் 
பார்த்த கணக்கு (கூடுதலாய்)
பதினாறு 
   மே 10 வரை


அச்சு முறிந்து
அவன் காலடியிலே
சிவலோக பதவி


மிச்சம் 
மின்சாரம் தாக்கி
மீளா துயில்


காக்க முடியாதவன்
கடவுள்
மீட்க முடியாதவன்
மீட்பர்


பட்டாலும் திருந்தாதவன்
முட்டாள்
இருந்தாலும் வணங்குபவன்
??????????????????



செவ்வாய், டிசம்பர் 27

குங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்

கடந்த வாரம் அலுவல் நிமித்தம் இராமநாதபுரம் சென்றிருந்தேன்.  உடன் வந்தவர்கள் திருப்புலானி சென்று ஆதிஜெகந்நாத பெருமாளை பார்க்க வேண்டுமென்பதால் அவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உடன் சென்றேன்.

எதற்கு இரண்டு தலைப்பு என்றால் குழப்பம்தான் காரணம். நாத்திகன் பெருமாளை காணச் சென்றதால் இக்குழப்பமாக இருக்கலாம்.

கூட்டமே இல்லாத கோயில், சேதுகரை அருகில், திடீரென்று மூன்று வேன்கள், ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். தமிழில் அர்ச்சனை.

தசரதன் இங்கு வந்து இப்பெருமாளை வணங்கியதால் இராமன் பிறந்ததாக பூசாரி கூறுகிறார்.  அதனால் குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமாளை வணங்கினால் பிள்ளை பிறக்கும் என்கிறார் பூசாரி.

அசுவமேத யாகம் நடத்தி இராமன் பிறந்ததாக புராணம் படித்த நமக்கு குழப்பம். யாகத்தின் முடிவில் தசரதனின் மனைவி குதிரையுடன் உறங்கி குழந்தை பெற்றதாக கதை படித்த ஞாபகம்.

பூசாரி அழைக்கிறார் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இப்பெருமாளை நினைத்து ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் கணவன் மனைவி இருவரும் நீராடி, கணவன் தன் கையால் மனைவிக்கு குங்குமம் வைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவர்.  பெண் பிறந்தால் தயார் பெயர் வைக்குமாறு கூறுகிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபர் மாட்டுகிறார்.  அவரிடம் ரூ.101 கொடு என்கிறார். பிறகு பெயர் நட்சத்திரம் கேட்டு பெருமாளிடம் கற்பூரம் காட்டி துளசி கொடுத்து அனுப்புகிறார்.

சொல்லுங்கள்

குங்குமம் வைத்தால் மட்டும் குழந்தை பிறக்குமா

101 என்ன கதை...... 100 என்றால் ஆகாதா



வெள்ளி, நவம்பர் 11

ஓர் எழுத்து


பெயர் மாற்றினால்
பெரும் மாற்றம் நிகழுமென
பேதலித்த சிலர்
மாற்றிப் பார்த்தனர்

இடர் தொடர்களுக்கு
இட்ட பெயர் காரணமென
இடை யெழுத்து சேர்த்து
  மாற்றிப் பார்த்தனர்

வெற்றிக்கு வழியென்று
வெட்டியும் நீட்டியும்
வைத்த பெயர்
ஆங்கிலத்தில்

மாற்றிய பெயரால்
மாறியதோ வாழ்க்கை
மானுடமே
மறைக்காது சொல்

வியாழன், அக்டோபர் 27

மாயக்கல் மோதிரம்


அயல்நாடு சென்று
ஆயிரமாயிரம் சம்பாதிக்க
அதிர்ஷ்ட மோதிரம்
ஆவண செய்தால்
அவனவன் ஏழையாயிருக்க
ஆமோதிப்பானா

மலடியென பேரெடுக்க
மானுடம் விரும்புமா
மாயக்கல் மோதிரம்
மழலையை வழங்குமென்றால்
மாதர்தான் எதற்கு-திரு
மணம்தான் எதற்கு

செவ்வாய் என்பது
நாளும் கோளூமாகும்
வருவாய் தேடுபவர்க்கு
தோஷமாகும்
இயலாமைகளுக்கு – அது
மற்றொரு வேஷமாகும்

காணி நிலம் வாங்க
கல் மோதிரம்
கருணையளித்தால்
பராசக்தியிடம் வேண்டிய
பாரதி கூட
பாதை மாறியிருப்பான்

வீடு கட்ட
வேண்டும் பணம்
வேதனையப்பா – இதில்
வேகத்தடையாம்
விலக்குதாம்
விவராமான மோதிரம்

தொழிலில் தேக்கமெனில்
தவறுகள் ஏதுமிருக்கலாம்
மோதிரம் அணிந்து
மொட்டை போடுவாயா
தவறை திருத்தி
சாதனை செய்வாயா

வாழ்க்கை துணைத் தேட‘
வண்ணகல் மோதிரம்
வழி செய்யுமென்றால்
வரதட்சணை எதற்கு
விவாகரத் தெதற்கு-அட
வாலிப மெதற்கு

அவனிவன் அணிந்து
ஆகாவென்று ஆனான்
அதெல்லாம் கட்டுக்கதை
அந்த மோதிரம்
விற்ற கடை
அதோ கதியானது
தனிக்கதை





வெள்ளி, மே 6

அட்சய திரிதியை


அள்ள அள்ள குறையாதாம்
அட்சய திரிதியில்
தங்கம் வாங்கினால்

வாங்கி வந்தேன்
வசதிக்கு தக்க
வளர்ந்ததோ என்றால்…

இருந்த தங்கத்தில்
இழந்தேன் ஒருகல்
இருந்தாலும் காத்திருக்கிறேன்

வசதி இருந்தால்
வங்கி பெட்டகத்தில்
வைக்குமளவு வாங்கலாம்

காசில்லை என்றால்
ஒசியிலும் வாராது
எத்தனை திரிதியை
     கடந்தாலும் வாராது

காசுள்ளவனுக்கே திரிதியை
இல்லாதவனுக்கு
கடன் வாங்கி திரிதியை

திரிதியை
கடன்காரன் ஆக்குமென்றால்
வாழ்நாள் முழுதும்
      நீ கடன்காரனே

திங்கள், ஏப்ரல் 5

வாஸ்து

ஈரோடு நீதிமன்றம் வாஸ்துவை எதிர்த்தவருக்கு கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.   வாஸ்துவை விஞ்ஞான முறையில் நிருப்பித்தால் 5 கோடி தருவதாக அறிவித்தாராம்.  ஈரோட்டு நண்பர் ஆந்திராவிலிருக்கும் அவருக்கு எப்படியோ நிருப்பித்தாராம்.  5 கோடி பரிசு கிட்டாததால் இந்த வாரண்டு.

குடியிருக்க வீடில்லா தேசத்தில் வாஸ்து பேசும் இவர்களை ஒழிப்பது எப்போது.  வாஸ்துபடி கட்டியவன் கடன் காரன் ஆனான், வாஸ்து சொன்னவன் பணக்காரன் ஆனான்.  நல்ல வீடலெல்லாம் கோணலாக மாறியது.  வாஸ்துவுக்கு ஆதராவாக நீதிமன்றம்.  மக்கள் மன்றமே அமைதியாக இரு

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...