வியாழன், ஏப்ரல் 30

மேகமே...... மேகமே.......

 







அலைந்து திரியும் உனை
அகவை நிறைந்தவளுக்கு
அணியும் பாவாடையாக்கவா?

மலை முகட்டை
மறைத்துச் செல்கிறாயே—
மாராப்பு ஞாபகமா?

சுட்டெரிக்கும் சூரியனை
சூழ்ந்து மறைக்கிறாயே—
சுகமெதுவென காட்டவா?

காதற் கிழத்தியை
காணும் முழுநிலவன்று
காணாது போனாயே!

வேலைவெட்டியில்லா எனக்கு
வேடிக்கை காட்டவா
வெண்மேகமா வந்தாய்?

காலத்தே பயிர் செய்து
கழனி செழிக்கவா
கருமேகமா திரண்டாய்?

முடிவில்லாத பால்வீதியில்
முகிலினமே— எந்த
முகவரியைத் தேடுகிறாய்?

எண்ணற்ற நட்சத்திரங்கள்
ஏன் கண் சிமிட்டுகின்றன?
எனக்காக கேட்டுச் சொல்லேன்.

அலுமினியப் பறவையில்
அருகிருந்து காண வந்தேன்;
அதிரவைத்து அச்சமூட்டினாய்.

ஆயினும் ஆங்காங்கே
பஞ்சுப் பொதிகளாய்
பரவசப்படுத்தினாய்.

நிர்கதியாய், நிர்மூலமாய்
நீல வானம்—
நீ எங்கே சென்றாய்?

நீயின்றி நீரில்லை;
நானிலத்தில் நதிகளோடு
நாங்களும் இல்லை.


. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...